Skip to main content

இலங்கை தலைவர்களுக்கு ஒத்துவராத 9- ஆம் தேதி! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

The 9th date is not suitable for Sri Lankan leaders!

 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை, ராணுவம், பொதுப்போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

 

அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தடைகளைத் தாண்டி வந்த கூட்டத்தைக் கலைக்கப் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவும் படுகாயமடைந்தார். 

 

இதனிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள சொகுசு கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இலங்கையில் 9- ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வுகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் 9- ஆம் தேதி அன்று பசில் ராஜபக்சே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 9- ஆம் தேதி அன்று மஹிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார். அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், அவர் இன்று (09/07/2022) தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

இந்நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும். இலங்கை பிரதமர் அழைப்பு விடுக்கும் எந்த கூட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை கொடி ஏற்றப்பட்டது. அதேபோல், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் 16 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்