Skip to main content

வி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்? -தி.மு.க.வில் வலுக்கும் குரல்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Ku Ka Selvam MLA

 

தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் பா.ஜ.க.வுக்கு தாவ திட்டமிட்டே டெல்லிக்கு பறந்தார் கு.க.செல்வம். ஆனால், நான் பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி வரவில்லை என திடீர் பல்டி அடித்தார். எம்.எல்.ஏ.பதவி பறிபோகும் என்பதால் இந்தத் திடீர் பல்டி என்கிறார்கள். இதற்கிடையே, கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி சென்ற விவகாரம் தி.மு.க.வில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
                          

கட்சியின் சீனியர்கள் பலரும் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு விவாதித்தபடி இருக்கின்றனர். கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உள்ள சீனியர்களுடன் அவசர ஆலோசனையையும் நடத்தினார் ஸ்டாலின். போனால் போகட்டும் என சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 

                         

இந்த நிலையில், தி.மு.க.வின் மேலிட தொடர்புகளிடம் பேசியபோது, ’’அடுத்த ஆட்சி தி.மு.க.வினுடையது தான் என்றும், 170 இடங்களில் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என்றும் ஐ-பேக் நிறுவனம் ரிப்போர்ட் கொடுத்த நாளில் இருந்தே தி.மு.க. தெம்பாகி விட்டது. சீனியர்களை ஓரங்கட்டினார்கள் இதனாலேயே கட்சியில் அதிருப்திகள் அதிகரித்தபடி இருக்கிறது. கு.க.செல்வம் கட்சி தாவுவதால் தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், தலைமைக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.வைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற விமர்சனங்கள் தவிர்க்க முடியவில்லை. இது, கட்சி தலைமையின் இமேஜுக்கு டேமேஜ் தான். பா.ஜ.க.வில் அவர் சேர்ந்திருந்தால் வரும் டேமேஜை விட, சேராமல் இருந்தது தான் தி.மு.க.வுக்கு பெரிய இடி. அதாவது, தலைமைக்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.வை டெல்லி வரை என்னால் தூக்கி வர முடிகிறது பார் என ஸ்டாலினுக்கு பா.ஜ.க. சவால் விடுவது போல இருக்கிறது ‘’ என்கிறார்கள். 

                      

இதற்கிடையே, கட்சியின் அனுமதியைப் பெறாமல் அல்லது கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமல் பா.ஜ.க. தலைவர் முருகனை சந்தித்தற்காக வி.பி. துரைசாமியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினார் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்ததன் மூலம், மிகப் பெரிய துரோகத்தையும், அவமானத்தையும் தி.மு.க.வுக்கு ஏற்படுத்திய கு.க.செல்வத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அவரது எம்.எல்.ஏ.பதவியைப் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுத்து வருகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்