Skip to main content

கமல் கட்சியில் எங்கள் பங்கு...

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
கமல் கட்சியில் எங்கள் பங்கு...

- 'அறப்போர் இயக்கம்' ஜெயராம் வெங்கடேசன்  





'காஃபி வித் எம்.எல்.ஏ' என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து மக்களுடன் உரையாட வைக்க நினைத்து எதிர்பார்த்தது போலவே ஒரு எம்.எல்.ஏக்களும் வராத போது அங்கிருந்தே மக்களின் முன்னிலையில் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அவர்களின் அலட்சியத்தை அம்பலமாகியது அறப்போர் இயக்கம். தொடர்ந்து, ஊழல், சுற்றுப்புற சூழல், சுகாதாரம், தனி மனித உரிமை என மக்களுக்கான அத்தனை பிரச்சனைகளிலும் அரசையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்டுவருகிறது. களத்தில் இறங்கி, ஆதாரங்களுடன் வெளிச்சமாக்குகிறது. கமல், தன் பிறந்த நாளன்று தன் அரசியல் செயல்பாடுகள் குறித்து அறிவித்தபொழுது, 'அறப்போர் இயக்கத்தின்' செயல்பாடுகளை குறிப்பிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தினகரன் ஆகியோர் தங்களது சொத்துக் கணக்கை குறைத்து காண்பித்ததை ஆதாரத்துடன் வெளியிட்டு தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். அவர்களது மனுக்கள் ஏற்கப்பட்டு, பிரச்சாரம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.          

ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள் (தினகரன், மதுசூதனன், மருது கணேஷ்) சொத்துக்கணக்கை தவறாக காட்டியிருப்பதாக ஆதாரத்தோடு ஒரு புகார் கொடுத்துருந்தீர்கள்...  ஆனால் அந்த மூன்று பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டு தீவிரமா பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்களே?
                                         
தேர்தல் அதிகாரியோட முக்கியமான வேலை, வேட்பாளர்கள்  சரியான தகவலை சொல்லிருக்காங்களா, இல்லையா என்று  பாக்குறதுதான். அந்த வகையில் தேர்தல் அதிகாரி நம்ம புகார ஏத்துக்கக்கூட தயாரா இல்ல. அதனால அவரு ஒருதலை பட்சமா நடந்துகொள்கிறார் என்பதில்  எந்தவித சந்தேகமும் இல்லை.  இது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பார்த்தால்,  அவருக்கு இருக்கக்கூடிய நேரமும்  ஒருநாளோ, இரண்டு நாளோதான். அதனால ஒருநாளில்  இது முழுவதையும் சோதிச்சு அவங்கள தகுதி நீக்கம் செய்துவிட  முடியுமா என்று  அவுங்க தரப்பு வாதத்தை  வைக்கும்போது அதை  கண்டிப்பா ஒத்துக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு எப்.ஐ.ஆராவது(F.I.R.) பதிவு பண்ணிருக்கணும்.  அப்போதான் இது ஒரு வழக்காக மாறி  அவுங்கமேல நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு அமையும். ஏன்னா ஆதாரங்கள் தெளிவா இருக்கு. அவர்கள்  சொத்து மதிப்பை கைட்லைன் வேல்யூவ (guideline value - அரசு வழிகாட்டல் படியான மதிப்பு) விட  குறைத்து காட்டியிருக்காங்க. இதுக்கு இப்போ  தீர்ப்பு வழங்க முடியவில்லையென்றாலும், நாளை அது நீதிமன்றத்துக்கு வழக்கா வந்து அவர்களை  தகுதி நீக்கம் பண்ணலாம். ஆனால், அடிப்படையாக புகாரை வாங்குவதற்கே தேர்தல் அதிகாரிகள் தயாராக இல்லை என்பது தான் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்.

விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது பற்றி?
                                            
விஷாலின்  மனு நிராகரிக்கப்பட்டது பற்றி  பாத்தீங்கனா, அந்த இரண்டு பேரோட கையெழுத்து உண்மைதானா, இல்லை பொய்யா என்ற முடிவிற்கு  இன்றுவரை யாராலும் வர முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தெளிவா இருக்கு. ஒரு இடத்தில ஒரு தேர்தல் அதிகாரி தொழில்நுட்ப ரீதியான ஒரு விஷயத்துல ஒரு முடிவுக்கு வர முடியல (benefit of the doubt) என்றால், அந்த சந்தேகத்தின் பயன் (benefit of the doubt)  வேட்பாளர் பக்கம்தான் போகணும். அப்படி பார்த்தால்  வேட்பாளரை போட்டியிட அனுமதிக்க வேண்டும், இதுதான் விதிமுறை. அப்படி இருக்கும்பொழுது தேர்தல் அதிகாரி அந்த விஷயத்தை பூர்த்தி செய்யாமல் தகுதி நீக்கம் பண்ணது கேள்விக்குறிதான். அதுவும் முதலில் நீக்கி, பின் அனுமதித்து, பின் நீக்கி என மாற்றி மாற்றி செய்கிறார்கள்.  இதுல இருந்தே தெரியுது தேர்தல் அதிகாரி குழப்பத்துல இருக்காரென்பது. அதனால், சந்தேகத்தின் பயனை வேட்பாளருக்கு கொடுத்து அனுமதிச்சுருக்கலாம், ஆனால் செய்யவில்லை. 






கமல், தனது  அரசியல் அறிவிப்பு பேச்சின் பொழுது 'அறப்போர் இயக்கத்தின்' பணிகளை குறிப்பிட்டார். அவர் அறிவித்த 'மய்யம்' செயலியில் உங்கள் பங்கு என்ன? அவரது எதிர்கால அரசியல் செயல்பாடுகளில் உங்கள் பங்கு இருக்குமா?     

                                              
கமல் கட்சி தொடங்குவதற்கும், அறப்போர் இயக்கத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அறப்போர் இயக்கம்  ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயக்கம். அப்படி இருக்கும்போது கமலஹாசன் நற்பணி மன்றத்தில் இருப்பவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தனும் என்பதையும், ஊழலை எப்படி வெளிக்கொண்டு வரணும் என்பதை பற்றியும்  ஒரு பயிற்சி கொடுப்பதற்காகத்தான் நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். அதனால அந்த வேலைகளை நாம் செய்வோம். இது கமலஹாசனுக்கு மட்டும் இல்லை, மற்றவர்களுக்கும் செய்யத்  தயாரா இருக்கோம். ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் சிலருக்கும் பண்ணியிருக்கோம். ஊழலை வெளிக்கொண்டு வருவதில் இந்த ஒரு இயக்கம் மட்டுமல்லாமல்  பலபேர் அதை வெளிக்கொண்டு வரணும் என்பதில்தான் அறப்போர் இயக்கத்தின் கண்ணோட்டம் இருக்கிறது. அறப்போர் இயக்கம் மக்கள் அரசியல் சார்ந்தது. தேர்தல் அரசியலுக்கு வராது. கமல்ஹாசன் எப்போ கட்சி ஆரம்பிப்பார் என்பது  அவருடைய முடிவு.

 அந்த பயிற்சி பட்டறை இப்பொழுதும்  நடக்கிறதா?
                                                  
இன்னும் தேதி முடிவு செய்யப்படல. மற்ற மாவட்டங்களில்  பேசி தேதி சொல்றேன்னு சொல்லிருக்காங்க சொன்னவுடனே நடக்கும்.

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்திருக்கும் நிலையில், தி.மு.க. தரப்பு சமூக ஊடகங்களிலும் விவாதங்களிலும்  அது ஊழலே இல்லை என்று  சொல்லியிருக்கு. நீங்க தீர்ப்பை எப்படி பாக்குறீங்க?
                                                  
கண்டிப்பா ராஜா, கனிமொழி இவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதுதான் நம்  எதிர்பார்ப்பா இருக்கு. விதிகளை மீறி டெண்டர் கடைசி தேதியை முன்கூட்டி மாற்றியிருக்கிறார்கள். இதனால் பயனடைந்த நிறுவனங்கள் அந்த பங்குகளை அடுத்த சில நாட்களில் பன்மடங்கு  அதிகமா வித்திருக்காங்க.  குசேகான்  (Kusegaon Fruits & Vegetables Pvt. Ltd.) அப்படிங்குற காய்கறி நிறுவனத்துல இருந்து பாதுகாப்பற்ற கடனா (unsecured loan) கலைஞர் டி.வி.க்கு 200 கோடி வந்துருக்கு. காய்கறி, பழ நிறுவனத்திற்கும், கலைஞர் டி.விக்கும் என்ன சம்மந்தம்? இதை  நாம பல இடங்கள்ல பாத்தோம். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்குலயும் பாத்தோம். பாதுகாப்பற்ற கடன் என்பதே  பெரும்பாலும் லஞ்சம் கொடுக்குறதுக்காகத்தான் பயன்படுத்துறாங்க. இதை சில வருடங்கள்  கழித்து  இருப்புநிலை குறிப்புல (balance sheet) இருந்து எடுத்துருவாங்க. இல்லாட்டி இது பெரிய விஷயம் ஆச்சுன்னா திரும்ப அந்த தொகையை கொடுத்துவிடுகிறேன் என்று கொடுத்துவிடுவாங்க. எப்படி இருந்தாலும் இது தப்புதான், தண்டிக்கப்படவேண்டியதுதான். 





வேறு என்னென்ன செயல்பாடுகளில் அறப்போர் இயக்கம் ஈடுபடுகிது?
 
பெரிய அளவில் நடக்கும் ஊழல்களை சில நாட்களில் வெளிக்கொண்டுவர இருக்கோம். ஒரு தெருவில் சாலை போட மாநகராட்சி அளவில் என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன என்று ஆய்வு பண்ணி சில ஊழல்களை வெளிக்கொண்டு வந்தோம். மக்கள் மத்தியில், ஊழலை வெளிப்படுத்துவது, லஞ்சம் கொடுக்காமல் சேவைகளை பெறுவது, அரசு வேளைகளில் வெளிப்படைத்தன்மை  இதெல்லாம் பற்றிய விழிப்புணர்வையும் செயல்முறைகளையும் கொண்டு செல்கிறோம். சமீபத்தில் எழும்பூர்  அரசு கண் மருத்துவமனையில் பார்வையற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய மருத்துவமனை இயக்குனரை ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவந்தோம். இது டீன் அளவுல இருப்பவர்கள்  மத்தியில்  ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கு.                                                       


கமல் குமார் 

சார்ந்த செய்திகள்