
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். துரை வைகோவின் இந்த விலகல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ குறிப்பிட்ட ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மதிமுக சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சி முடிவுகளும், துரை வைகோவின் விலகல் அறிவிப்பு குறித்த முடிவுகளும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் தன் மோதிர விரலில் தலைவர் வைகோவின் முகம் பதித்த மோதிரம் சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் தன் அடையாளமாக இருக்கிறது என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், துரை வைகோ எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை. எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். அதில், எந்த மாற்றமும் இல்லை. இயக்கத்தின் நிர்பந்தத்தால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். என்னால் கட்சிக்குள் பிரச்சனை வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். வைகோ தான் மதிமுக, மதிமுக தான் வைகோ என்பதில் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. கட்சி யார் பின்னாடி நிற்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் உள்கட்சி பூசல் இருப்பதாக பொதுவெளிக்கு வந்ததே அந்த தோழரால் தான். கட்சிக்குள் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வீணாக குழப்பதை உருவாக்கியதே அந்த தோழர் தான். என்னால் கட்சிக்கோ தலைமைக்கோ பிரச்சனை வரக்கூடாது. அதனால் இது நானே எடுத்த முடிவு தான்.
நான் பொறுப்பில் இருப்பதால் தானே வீணாக அவதூறு பரப்புகிறீர்கள் என்பதற்காக தான் ராஜினாமா செய்தேன். இனிமேலாவது, தலைவரை காயப்படுத்தாதீர்கள், கட்சியை யாரும் இழிவுப்படுத்தாதீர்கள் என்பது தான் எனது வேண்டுகோள். தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற விவகாரங்கள் எழுப்பப்படுகிறது. இந்த பிரச்சனை இன்றைக்கு நடக்கவில்லை. கடந்த 4 வருடமாக கட்சியை இழிவுப்படுத்தி ஊடகங்களுக்கு வெளியிடுவது யார் என்பது கட்சிக்காரர்களுக்கு தெரியும். கூட்டணி இருக்கோ இல்லையோ அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரை பத்து மடங்கு வேலை பார்த்தவர்களுக்கு எல்லாம் எந்தவிதமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இன்றைக்கு வரைக்கும் கட்சிக்கு விஸ்வாசமாக அவர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும், தளபதிகளும் சேனாதிபதிகளும் தான்” என்று தெரிவித்துள்ளார்.