சேலம் சோளம் பள்ளத்தைச் சேர்ந்தவர் மாதேஸ். இவரை கடந்த ஜூலை 11ம் தேதி ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்று வீச்சரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் (34), செல்வம் (36), விக்ரம் (32) மற்றும் இவர்களின் கூட்டாளிகள் அக்பர்பாஷா, சையத்பாஷா, பாரூக், ராஜேஷ், குமார், சீரங்கன் மகன் மாதேஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பல் செய்த கொடூர கொலையானது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு உள்ளது. மேலும், கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த கும்பலின் நடவடிக்கை மக்களிடையே அச்சத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான டேவிட் என்கிற உதயகுமார், செல்வம், விக்ரம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சூரமங்கலம் காவல் ஆய்வாளர், மாநகர துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தனர்.
அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், மேற்சொன்ன மூன்று ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவருக்கும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் ஆக. 22ல் சார்வு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்குக் கைதிகளில் மேலும் சிலர் மீதும் குண்டர் சட்டம் பாயும் எனத்தெரிகிறது.