Skip to main content

துரை வைகோ விலகல்; “வைகோவின் சேனாதிபதியின் நான்” - மல்லை சத்யா

Published on 20/04/2025 | Edited on 20/04/2025

 

 Mallai Sathya defined vaiko at Durai Vaiko's departure in mdmk

மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்றும், கட்சிக்கும்  தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை என்றும் தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். . 

துரை வைகோவின் இந்த விலகல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ குறிப்பிட்ட ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், மதிமுக சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சி முடிவுகளும், துரை வைகோவின் விலகல் அறிவிப்பு குறித்த முடிவுகளும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 Mallai Sathya defined vaiko at Durai Vaiko's departure in mdmk

இந்த நிலையில், ஈஸ்டர் திருநாளுக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மல்லை சத்யா தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் 900 மக்கள் தொகை கொண்ட உலகத்தின் சின்னஞ்சிறு நாடு வாடிகன் சென்று அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் நட்சத்திர பயிற்சியாளர் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ அவர்களின் அழைப்பில் தற்காப்புக் கலை பயிற்சியளிக்க பிரான்ஸ் நாடு சென்று இருந்த போது வாடிகன் சென்று புனித பேதுரு நல்லடக்கம் செய்யப் பட்ட இடத்தைப் பார்க்க சென்றேன். 

அங்கு ஒரு அனுபவம் புனித பேதுரு பேராலயம் உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு சென்ற போது ஐந்து இளைஞர்கள் என்னைப் பின் தொடர்வதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்னை கண்கணிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன். புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சற்று முன் நான் நின்று அவர்களை எதிர் கொண்டேன். யார் நீங்கள் ஏன் என்னை பின்தொடர்கின்றீர்கள்? என்று கேட்டபோது, நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றீர்கள் என்று கேட்டார்கள். நான் இந்திய தமிழ்நாடு என்றேன். எதற்காக வந்து இருக்கிறீர்கள்? சுற்றுலா என்றேன். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டார்கள். ஏன் இவையெல்லாம் கேட்கிறீர்கள்? என்றபோது, எனது மோதிர விரலில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் என் அன்புத் தலைவர் வைகோ எம்பியின் முகம் பதித்த மோதிரத்தைச் சுட்டிக் காட்டி இது எதன் அடையாளம் என்று கேட்டார்கள்?. நான் சிரித்துக் கொண்டே நான் ஒரு அரசியல்வாதி, இது என்னுடையத் தலைவர் என்றபோது அவர்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அது சரி இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்? என்றபோது அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மதங்களை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள். ஐரோப்பாவில் ஆண்கள் இதைப் போன்று பெரிய கல் பதித்த மோதிரம் அணிவது இல்லை. இதைப் போன்ற மீன் சின்னம் பதித்த பெரிய மோதிரத்தை போப்பாண்டவர் அணிந்து இருப்பர். அது புனித பேதுரு மூலமாக வந்தது அவரைச் சந்திக்க வருகின்ற குருமார்கள் தாழ் பணிந்து வணங்கி அந்த மோதிரத்தில் முத்தம் பதிப்பார்கள் என்று விளக்கம் சொன்னார்கள். 

அதைப் போன்று உங்கள் கையில் இருக்கும் மோதிரம் ஏதாவது மதம் சார்ந்ததாக இருக்குமோ என்ற ஆவலில்தான் உங்களைப் பின்தொடர்ந்தோம் என்று சொல்லி விட்டு விடைபெற்றார்கள். இனியத் தோழமைகளே இலங்கை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டு தான் இராமனின் தூதுவன் என்பதற்கு சாட்சியாக ராமன் சீதை திருமணத்தின் போது அணிவித்த மோதிரத்தை காட்டி தன் நிலையை உறுதிப்படுத்துவான் சொல்லின் செல்வன் அனுமன். அதைப் போன்றே நான் திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் தலைவர் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் வைகோ எம்பியின் முகம் பதித்த மோதிரம் சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம் மகிழ்ச்சி. அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புனித ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள், என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்