Skip to main content

மாணவர்களின் பாசப்போராட்டம்: ஆசிரியர் பகவான் பணிமாற்றம் குறித்து கல்வித்துறை முடிவு!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018


திருவள்ளூரில் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள், அவரை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

 

 


இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக கடந்த 20ஆம் தேதி பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுது துடித்தனர். இதனால் ஆசிரியார் பகவானும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.

 

 

 


வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
Student


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லவேண்டும் எனக்கூறி 108 ஆம்புலன்சையும் வரவைத்து பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பிவைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து நாடித்துடிப்பு ரொம்ப குறைந்துவிட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லிவிட சக மாணவர்கள் கதறினார்கள்.
 

 

 

கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க என்று மருத்துவமனையில் சிலர் சொல்ல கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர். அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள். அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.. அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்றுவிடும் நிலையில் உள்ளது என்று சொல்ல.. கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.

அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான் கை, கால்களை அசைத்தான்.. உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான். இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10 சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான் இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும் கண்ணீரை நிறுத்திவிட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார் நல்லா இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு.. சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர். கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம் அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்துவிட்டு ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து மாணவனை பார்த்தார்.
 

 

teachers


அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மாணவனுக்காக காத்திருந்தனர். நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம் அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையைவிட ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.

இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன் தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான். 10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது. பணி மருத்துவர்களும் ஆசிரியர்களை பாராட்டினார்கள். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

 

சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன்.. மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும். சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.

அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச பேச கண் விழித்தான் நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர் மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார். ஆனாலும் தாய் தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம் உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு..

வாழ்த்துக்கள் ஆசிரியர்களே..!

Next Story

இதோ இறைவன்! - ஒரு மகத்தான காட்சி!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
teacher


இன்னும் அந்தக் காட்சி மனத்திரையை விட்டு மறைய மறுக்கிறது. ச்சே.. இப்படியும் ஒரு வாத்தியாரா? என பெரும் கேள்வி மூளையை குடைந்து எடுக்கிறது. அப்படியே எனக்குப் பாடம் எடுத்த வாத்தியார்களும் கண்முன்னே வந்து போகிறார்கள். சாட்டைக் கம்பு அடி, முட்டிப்போடுதல், குனியவைத்து முதுகில் அடித்தல், காதைத் திருகுதல் என ஒவ்வொரு வாத்தியாருக்கும் ஒவ்வொரு பனிஷ்மென்ட் பாணி உண்டு. அப்படி ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து 6-ங்கிளாஸ் வரைக்கும் எனக்கு வகுப்பு எடுத்த வாத்தியார்கள் நினைவலைகளில் நீந்துகின்றனர்.

அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டார் இந்த பகவான் ஆசிரியர். நாம ஸ்கூல்ல படிக்கும்போது இன்றைக்கு வாத்தியார் லீவு அப்படீன்னா சந்தோஷ பல்பு மின்னும். அதே வாத்தியார் வேற ஸ்கூலுக்கு இடமாறுதல்ல போறாருண்ணு கேள்விப்பட்டோம்னா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். ஆனால் பகவான் வாத்தியார்கிட்ட படிச்ச மாணவர்கள் அப்படி அல்ல.

கடந்த 2, 3 நாட்களாக, பகவான் வாத்தியாரைப் பற்றிய செய்திகள் தான், ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் செம வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியர் தான் பகவான். மருந்தாய் கசக்கும் ஆங்கிலத்தை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் கற்றுக் கொடுத்ததால், அவர்கள் மனதில் பச்சக் என ஒட்டிவிட்டார் இவர்.
 

bagavan infront of school


தம்மிடம் படிக்கும் எந்த மாணவரையும் அதட்டியது கிடையாது, அதிர்ந்து ஒருவார்த்தை கூட திட்டியது கிடையாது. அதனால் தான், அவருக்கு வேறு பள்ளிக்கு இடமாறுதல் வழங்கிய சேதி கேட்டு, ஒட்டுமொத்த மாணவர்களும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்களின் அன்பில் கரைந்த ஆசிரியர் பகவானும், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுததது இன்னும் மறைய மறுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "சாட்டை" என்ற திரைப்படத்தில் ஆசிரியராக வரும் சமுத்திரக்கனியை பிரிய மனமின்றி மாணவர்கள் அழுவார்கள். அந்தப் படத்தின் காட்சியைத் தான், இப்போது வெளியகரம் பள்ளி மாணவர்கள் ஞாபகப்படுத்தி உள்ளனர்.

 

 

இந்த நெகிழ்வான சம்பவம் செய்திகளில் வெளியானதை அடுத்து, ஆசிரியர் பகவானின் பணியிடமாற்றத்தை கல்வித்துறை நிறுத்தி வைத்திருக்கிறது. மாணவர்களின் பாசப் போராட்டம் வென்றிருக்கிறது. “மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்” என்று கூறியுள்ள ஆசிரியர் பகவான், “என் கடமையை செய்தேன். ஒரு நல்ல ஆசிரியராகப் பணிபுரிந்ததில் மிக்க மகிழ்ச்சி" என்கிறார்.
  bagavan


எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இவருக்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கின்றனர் இவரது பெற்றோர். 29-வயதே நிரம்பிய பகவான், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தே 4 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் இத்தனை மாணவர்களின் அன்பைப் பெற்றிருப்பது ஆசிரியர் பணிக்கே உரிய அங்கீகாரம் தான்.!

‘வெறுமனே வாழ்ந்து இளைப்பாறி விட்டுப் போக வந்தவன்‘ என தனது முகநூல் பக்கத்தில் அறிமுக உரையாக குறிப்பிட்டுள்ளார் பகவான். அவரது இந்த தன்னடக்கம் தான் புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்திருக்கிறது!

நல்லதுக்கு காலமில்லை என்று சொல்வதற்கு, யாருக்கும் இனி மனம் வருமோ?