நள்ளிரவில் வீடுபுகுந்து, முரட்டுத்தனமாக கலைஞரை கைது செய்த சென்னை கமிஷனர் முத்துக்கருப்பனை, கலைஞர் கையாண்ட விதம் மிகவும் வித்தியாசமானது.
ஜூன் 30ம் தேதி 2001 ஆண்டு ஒட்டுமொத்த தமிழகமும் பரபரத்துக் கிடந்தது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கைது செய்யப்பட்ட நாள். இந்தியாவே கொந்தளித்தது. கலைஞர் கைதுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள், அடிக்கடி தொலைக்காட்சியில் போட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கலைஞர் கைதுக்கு மிக ரகசியமாக நாள் குறிக்கப்பட்டது. அப்போதைய சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன், டி.ஜி.பி.ரவீந்திரநாத், சி.பி.சி.ஐ.டி. டிஐஜி முகமது அலி ஆகியோருக்கு மட்டுமே கைது செய்யப்போகும் சமாச்சாரம் தெரியும். நள்ளிரவு நேரத்தில் கலைஞர் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த போலீசார், கைது செய்ய வந்திருப்பதாக, கலைஞரிடம் கூறினர். நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யவேண்டிய அவசியம் என்னவென புரியாமல் இருந்தார் கலைஞர். ஆனால், அவருக்கு யோசிக்கக் கூட போலீசார் நேரம் கொடுக்கவில்லை. லுங்கியுடனே கலைஞர் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
அதன்பிறகு, என்ன நடந்தது என்பதை நாடே அறியும். இதில், கவனிக்கவேண்டியது, கலைஞர் கைது செய்யப்பட்டபோது சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன் நடந்துகொண்ட விதம்தான். முன்னாள் முதல்வர், முதுபெரும் தலைவர், பழுத்த அரசியல்வாதி என எதையுமே அவர் யோசிக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார். இந்த மூர்க்கத்தனமான கைதுக்கு பிறகு, அவருக்கு அதிமுக ஆட்சியில் ராஜமரியாதை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் முத்துக்கருப்பனுக்கு மனக்கசப்பு அதிகரித்தது. விளைவு, 2003ம் ஆண்டு முத்துக்கருப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. 2006ல் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிந்து மீண்டும் கலைஞர் முதல்வரானார்.
எல்லோரும் முத்துக்கருப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கலைஞர் அவரையும் கைதுக்கு காரணமான மற்ற அதிகாரிகளையும் சட்டைசெய்யவில்லை. பின்னர் ஒருநாள், முதல்வர் கலைஞரை, ஜெயலலிதாவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முத்துக்கருப்பன் சந்தித்துப் பேசினார். அது வெறும் சந்திப்பல்ல, கண்கள் பணிக்க மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தார் முத்துக்கருப்பன். கலைஞர் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். எந்த உத்திரவாதமும் கலைஞர் கொடுக்காதது, முத்துக்கருப்பனை மேலும் கலக்கத்தில் தள்ளியது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2008ம் ஆண்டு முத்துக்கருப்பனை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டார் கலைஞர்.
ஆம், தனது கைதின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்ட முத்துக்கருப்பனுக்கு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரி பதவியை வழங்கினார் கலைஞர். இது கலைஞரின் தலைமைப் பண்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணமாக இருந்துவருகிறது. மேலும், கலைஞரின் கைதில் தொடர்புடைய இன்னொரு அதிகாரியான சிபிசிஐடி டிஐஜி முகமது அலி, பின்னாட்களில் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றது வரலாறு. மற்றொரு அதிகாரியான டி.ஜி.பி. ரவீந்திரநாத், இளம்பெண்களை செல்போனில் படம்பிடித்ததாகவும் லஞ்சம் வாங்கியதாகவும் சர்ச்சையில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். பின்னாட்களில் பலமுறை ராஜினாமா கடிதம் எழுதி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.