தமிழகத்தில் நீண்ட காலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் வாரிசு அரசியலின் ஒரு பகுதி இது. , அமைச்சர் பதவியேற்க உதயநிதிக்கு என்ற தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது, "உதயநிதி சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். இதைத் தவிர ஒருவர் அமைச்சராக வேறு என்ன தகுதி வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் மந்திரியாக இருந்தவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் மந்திரியாக இருந்தார்கள் என்பதை இவர்களே கூறட்டும்.
ஒருவரை அமைச்சர் ஆக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம். அதில் மற்றவர்கள் தலையிடுவது என்பது அநாகரீகம். உதயநிதியோடு அமைச்சர்கள் ஏன் செல்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் என்று கேட்கிறீர்கள்... அமைச்சர்கள் ஒருவர் மற்றொருவருடன் செல்லக்கூடாது என்ற வரைமுறை ஏதாவது இருக்கிறதா? இவர்கள் கூறும் அனைத்து அமைச்சர்களுமே சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர் ஆய்வு செய்யும் போது அவர்கள் ஓய்வாக இருந்தால், கூட செல்வார்கள். இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை வந்தது என்று தெரியவில்லை. யாருமே ஒன்றாகவே செல்லக்கூட, இனி இவர்களின் அனுமதி கேட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் போல. இவர்கள் அரசியல் வரம்பைக் கடந்து செல்கிறார்கள்.
மேலும், அண்ணாமலையின் அடாவடித்தனமான அரசியல்; ஆர்ப்பாட்டமான அரசியல் பாஜகவைப் படுகுழியில் தள்ளிவிடப்போகிறது. அரசியலில் அனைத்து ரேகைகளையும் கடந்து ஒரு வீம்பு அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார். இதன் தாக்கம் என்ன என்பதைக் காலம் அவருக்கு விரைவில் சொல்லித்தரும். பாஜகவில் மூத்த தலைவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த இடத்தை பிடித்த இவர், உதயநிதி ஏன் முன்வரிசையில் அமர்கிறார், ஏன் அமைச்சர்கள் உடன் ஆய்வுக்குச் செல்கிறார் என்பதை எல்லாம் கேட்க எவ்வித உரிமையும் இல்லை. எனவே, விதண்டாவாத அரசியலைச் செய்யாமல் இருப்பதே அவருக்கும் அவர் சார்ந்திருக்கின்ற கட்சிக்கும் நல்லதாக இருக்கும்" என்றார்.