பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு வெளிவந்து மக்களின் வரவேற்பை பெற்ற 'சாட்டை' திரைப்படத்தின் அடுத்த கட்டமாக கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'அடுத்த சாட்டை' திரைபடம் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன் சமுத்திரக்கனி. மாணவர்களாக கௌசிக், யுவன் அதுல்யா ரவி நடித்துள்ளனர். இப்படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ நிறுவனத்துடன் இணைந்து முதன் முறையாக 11:11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக் தயாரித்துள்ளார். இவர் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்ஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தாய்க்கு நன்றி சொல்லி படத்தை துவங்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே மாணவர்களின் நலனை பற்றிய படமாக அமைந்துள்ளது. கல்லூரி என்றாலே காதல் இல்லாமல் இல்லை. இதில் நாயகி அதுல்யாரவியை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன், போட்டியாக மற்றோரு நாயகன் வருவதாக எண்ணுவதால் வரும் மோதல், அதில் சாதி சாயம் என செல்லும் கதையில் இயக்குனர், பொள்ளாச்சி விவகாரம் போல பெண்ணை துரத்தும் ஒரு கும்பல் அதில் இருந்து காப்பாற்றும் இலங்கை தமிழ் மாணவன் என நிகழ்கால நிகழ்வுகள் பலவற்றையும் சரியாக சேர்த்துள்ளார். இது போன்ற பொறுக்கிகளால் பாதிக்கப்படும் பெண்கள் அவப்பெயருக்கு அஞ்சாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்ற செய்தி உண்மையில் பெண்களுக்குத் தேவையானது.
நாயகன் சமுத்திரகனி பக்கம் சில நல்ல பேராசிரியர்கள் மற்றும் நாயகி இருக்க, மறுப்பக்கம் கல்லூரி முதல்வர் தம்பிராமையா பக்கம் தாளம் போடும் சாதி கும்பல், 'அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும்' என்று செயல்படும் துணை முதல்வரின் ரோல் காமெடி ட்ராக்காக அமைந்துள்ளது. சொல்ல வேண்டிய பாலியல் கல்வியை பற்றி பகுதிக்கு சென்சார் போர்டு கட்டுப்பாடு போட்டது கண்டிக்கத்தக்கது. சமுதாயப் பார்வை கொண்ட கதைக்களத்தில் இதை தவிர்த்த காரணம்தான் புரியவில்லை. எந்த சாதியையும் சுட்டிக்காட்டாமல் ஒரு கயிரை வைத்து படத்தை பக்குவமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் அன்பழகன். கல்லூரி நட்புக்குள்ளும் காதலுக்குள்ளும் சாதி நுழையும் ஆபத்தான போக்கை அப்படியே காட்டி நம்மை உணர வைக்கிறார் இயக்குனர்.
அன்பழகன்
முதல் பாகத்தில் சற்று பொறுமையாகவே சென்று இடைவேளைக்குப் பின் நன்றாக சூடுபிடிக்கும் கதை இறுதியில் நன்மையில் முடிகிறது. பெண் குழந்தைகள் கல்லூரிப் படிப்பை தொடர்வதில் உள்ள கஷ்டங்களை நாயகி அதுல்யாரவி எடுத்துக் கூறும் விதம் நெகிழவைக்கிறது. மாணவர்களின் பிரச்சனைகளை மாணவர்களே தீர்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றம் திட்டம் சூப்பர்! அதே போல கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதற்கான முயற்சி வெற்றி பெறும் என காட்டிய படக்குழுவுக்கு சபாஷ். பிணத்தை வைத்து அரசியல் செய்து பணத்தை பார்க்கும் டுபாகூர் கட்சிகளுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்கள். அனைவருக்கும் சமத்துவம் கற்பிக்க, கடைபிடிக்கவேண்டிய கல்லூரியில் சாதி மோதல்கள் கூடாது என்பதை சமுத்திரகனி வழியே இயக்குனர் அன்பழகன் மற்றும் அடுத்த சாட்டை குழு மாணவர்களுக்கு போதிக்கிறது.