ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளான டிச. 12-ஆம் தேதியன்று நலத்திட்ட உதவிகள், பொதுக் கூட்டம் என பிரமாண்டமாக நடத்துவது வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் வழக்கம். இந்தாண்டு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ. சோளிங்கர் ரவி ஏற்பாட்டில் வேலூர் மாவட்டம் (ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட) சார்பில் வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில், பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். இதில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் "கலைப்புலி' எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில், தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு பேசும்போது, "என் நாடி நரம்பு ரத்தம் அனைத்திலும் ஊறிப்போனவர் என் தலைவர் கலைஞர். அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக்கொண்டேன். அவருக்கு பின் நான் நேசிப்பது ரஜினியைத் தான். நன்றி மறக்காதவர். அதனாலேயே அவரின் பிறந்தநாள் விழா என்றதும் வந்துவிட்டேன்'' என்றார். பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, "அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய தி.மு.க., ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்'' என எதார்த்தத்தைப் பேசினார்.
"சிவாஜி படப்பிடிப்பு முடிந்து நாங்கள் புனே விமான நிலையத்தில் செக்கிங்கிற்காக வரிசையில் நின்றிருந்தபோது, எங்களைத்தாண்டி ரஜினி வேகவேகமாக ஃபிளைட்டுக்குச் சென்றார். அறையில் இருந்த எனக்கு இரவு அவருடைய உதவியாளர் போன்செய்து, "தலைவர் பேசணும்னு சொல்றார்' எனச் சொல்லி போனை தந்தார். "ஏர்போர்ட்டில் நின்று பேசினால் செக்யூரிட்டி ப்ராப்ளம் வரும், அதனால்தான் பேசவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்' எனச் சொன்னதும் அதிர்ச்சியாகிவிட்டேன். எவ்வளவு பெரிய மனிதர் நம்மிடம் இப்படிப் பேசுகிறாரே என ஆச்சர்ய மானேன்'' என்றார் பட்டிமன்ற ராஜா.
இயக்குநர் பாரதிராஜா பேசவந்தபோது, ஏதாவது வில்லங்கமா பேசிவிடுவாரோ என பயந்தனர் நிர்வாகிகள் பலரும். "எளிமை மனிதர் என தலைப்பிட்டுள்ளீர்கள். நிச்சயமாக இந்த தலைப்பு அவருக்குப் பொருந்தும். "16 வயதினிலே' ஷூட்டிங் மலைக் கிராமத்தில் நடந்தபோது... ஒரே ஒரு கெஸ்ட்ஹவுஸ் மட்டும் இருந்தது. அங்கிருந்த ரூம்களை நாயகன், நாயகிக்கு தந்துவிட்டோம். நானும், ரஜினியும் அந்த கெஸ்ட்ஹவுஸ் ஹாலில் படுத்துக்கொண்டு பல கதைகள் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அப்போது நான் பார்த்த அதே எளிமையான ரஜினியாகத்தான் பெரிய உயரத்துக்கு சென்ற பின்பும் இருக்கிறார். நான் அவரின் அரசியல் நிலைப்பாட்டுக்குள் போக விரும்பவில்லை. அவரது கொள்கை வேறு, என்னுடைய கொள்கை வேறு. அரசியலையும், நட்பையும் நாங்கள் பிரித்தே வைத்துள்ளோம்'' என்றார்.