Skip to main content

அதிமுக எடுத்த அதிரடி முடிவு... எடப்பாடியை அதிர வைத்த பாமக, பாஜக... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அப்செட்டில் எடப்பாடி!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

பல்வேறு வியூகங்களுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தலின்போது உருவான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடனான கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலிலும் உறுதி செய்தார். கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்பதால் தோழமைக் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமையகம் சென்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

admk



அந்த ஆலோசனையின்போது, தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும், "அ.தி.மு.க. அமைத்துள்ள மா.செ.க்கள் தலைமையிலான மாவட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கான இடங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். அதற்கேற்ப அ.தி.மு.க. மா.செ.க்களுக்கு அறிவுறுத்தப்படும்' என உறுதி தந்தனர் அ.தி.மு.க. தலைவர்கள்.
 

admk



எந்த சூழலிலும் அ.தி.மு.க.வை தோழமைக்கட்சிகள் டாமினேட் செய்ய எடப்பாடியும் பன்னீரும் இடமளிக்கவில்லை. தங்களிடம் ஆலோசித்த தோழமைக் கட்சிகளிடம் நயமாகப் பேசிய எடப்பாடி, அ.தி.மு.க. மா.செ.க்களிடம், "ஊராட்சி வார்டுகளிலும் ஒன்றிய கவுன்சில்களிலும் தோழமைக் கட்சிகளுக்கு பெரும்பாலும் ஒரு இடம் ஒதுக்கினாலே போதும். மாவட்ட கவுன்சில்களைப் பொறுத்த வரையில் முடிந்த வரைக்கும் தோழமைக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படாத சூழலை உருவாக்குங்கள். முடியாத பட்சத்தில் ஒரு இடம் தந்தால் போதும்' என கறாரான வரையறையை அறிவுறுத்தியிருக்கிறார்.
 

bjp



எடப்பாடியின் இந்த "டபுள் கேம்' விளையாட்டை அறியாத பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நொந்து போயுள்ளனர். இந்த நிலையில்தான், "உள்ளாட்சியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை; மாவட்டம் முழுவதும் தனித்துப் போட்டியிடுகிறோம்' என சொல்லி முதல் கலகக் குரலை உயர்த்தியது புதுக்கோட்டை பா.ஜ.க.! இந்த கலகக்குரல் ஒவ்வொரு மாவட்டமாகப் பரவ, ஆடிப்போனார் எடப்பாடி பழனிச்சாமி.
 

admk



புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சேதுபதியை தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது, "புதுக்கோட்டையில் 22 மாவட்ட கவுன்சில்களும், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 225 ஒன்றிய கவுன்சில்களும் இருக்கின்றன. கட்சியும் சின்னமும் இவற்றில் போட்டியிட முடியும். 13 ஒன்றியங்களிலும் தலா 3 இடங்களை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்தோம். அதற்குரிய பட்டியலையும் கொடுத்தோம். ஆனால், "நாங்கள் கொடுக்கும் ஒரே ஒரு இடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கறாராகப் பேசினார்கள். அதேபோல, மாவட்ட கவுன்சில்களிலும் 3 சீட் கேட்ட போதும் மறுத்துவிட்டனர். இது எங்களை காயப்படுத்தியது. "ஒரே ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட தனித்து போட்டியிட்டால் கட்சியையும் சின்னத்தையும் அனைத்துக் கிராமங்களிலும் கொண்டு செல்லலாம். மோடியின் சாதனைகளையும் விளக்கிப் பேச முடியும்' என கட்சி நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தியதால் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

admk



பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க.வை சீண்டும் நோக்கத்திலேயே அமைச்சர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை இருந்தது என்கிறார்கள். புதுக்கோட்டையைப் போலவே திண்டுக்கல், மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மீது ஏகத்துக்கும் கடுப்பான பா.ஜ.க.வினர், தனித்துப்போட்டி என்கிற அஸ்திரத்தை கையிலெடுத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், "பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்குள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய்சுந்தரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். "2 சீட்டுகள் தருகிறோம்' என தளவாய் சுந்தரம் சொல்ல, அதிர்ச்சியடைந்த பொன்னார், "நாகர்கோவில் மேயர் சீட் எங்களுக்குத்தான்னு எடப்பாடி சொல்லியுள்ளார்.


அதனால் இங்கு மெஜாரிட்டி இடங்களில் பா.ஜ.க.தான் போட்டியிடும்' என கறாராக பேச, அதனை ஏற்காத தளவாய், "தோழமைக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கணும்னு அதே எடப்பாடி எங்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதைத்தான் ஒதுக்க முடியும். கூடுதல் சீட் வேணும்னா எங்க தலைமையிடம் பேசிப்பாருங்க' என எடுத்தெறிந்து பேசி பொன்னாரை சிதறடிச்சிருக்கார்.

அதேபோல, சேலம் மா.செ.வாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தனது சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை சேலம் இளங்கோவன் அடங்கிய குழுவிடம் தந்திருந்தார். சேலம் மாவட்டத்தில் பா.ஜ.க.வுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கும்பட்சத்திலும் ஒன்றியம் வாரியாக சீட் ஒதுக்க முன்வராத அ.தி.மு.க. குழு, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் சேர்த்து 2 இடங்களை தர முன் வந்தது. இதனால் அ.தி.மு.க. வுக்கும் பா.ஜ.க.வுக்கும் முட்டிக் கொண்டது. இப்படி அனைத்து மாவட்டங்களிலும் அதிருப்தி ஏற்பட்டதால் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பா.ஜ.க.வின் 15 பேர் கொண்ட உயர்மட்ட குழுவிடம் புகார் வாசிக்க, தனித்துப் போட்டியிட தடையில்லை என சம்மதம் தெரிவிக்கப்பட்டது' என சுட்டிக்காட்டினார்கள்.


மேலும் நாம் விசாரித்தபோது, "எடப்பாடியை சந்தித்துப் பேசுவதற்கு முன்பு, எத்தனை இடங்களை கேட்க வேண்டும்? ஜெயிக்கக்கூடிய இடங்கள் எது எது? என பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்து அதற்குரிய பட்டியலை பொன்னார் தயாரித்து அதனடிப்படையில் எடப்பாடியிடம் உறுதி செய்து, அதன்பின் மாவட்ட அளவில் பேசியிருக்க வேண்டும். பொன்னாரும் அவரது ஆதரவாளரான கேசவ விநாயகமும்தான் கோட்டை விட்டனர்'' என்கிறார்கள் பா.ஜ.க. சீனியர்கள்.

பா.ஜ.க.வை மட்டுமல்லாமல் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா.விடமும் எடப்பாடியின் டபுள் கேம் விளையாட்டை அ.தி.மு.க.வினர் அடித்து ஆட, அவர்களும் அ.தி.மு.க.வினரிடம் மல்லுக்கட்ட, தனித்துப் போட்டிங்கிற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தவிர, பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.வினர் கேட்ட பல கேள்விகள் அவர்களை காயப்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில், கூட்டணியை உதறிடலாம் என தோழமைக் கட்சிகள் எடுத்த முடிவினை உளவுத்துறை மூலம் அறிந்து ஆடிப்போன எடப்பாடி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரிடம் பேசினார்.

அதேபோல, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோருக்கு சில அவசர உத்தரவுகளைப் பிறப்பித்தார் எடப்பாடி. எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனைகள் வெடித்ததோ அம்மாவட்ட அ.தி.மு.க. குழுவினரிடம் சில யோசனைகளை தெரிவித்ததோடு, தோழமைக் கட்சிகளின் தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் குதித்தனர் மூத்த அமைச்சர்கள். 15-ந்தேதி இரவு முழுக்க இந்த சமாதானப் படலம் ஓடியது. ஆனாலும், தோழமைக் கட்சிகள் சமாதானமாகாததால், மனு தாக்கலுக்கு கடைசி நாளான 16-ந்தேதி, பல இடங்களில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தங்களுக்கு செல்வாக்கான இடங்களுக்கு தன்னிச்சையாக தோழமைக்கட்சிகள் மனுதாக்கல் செய்தன. இதனையடுத்து, சில இடங்களை விட்டுக் கொடுத்து போட்டி மனுக்களை வாபஸ் பெற வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது அ.தி.மு.க.