Skip to main content

முதல்வர் துறையில் சந்தேகத்தை ஏற்படுத்திய மரணம்... நெருக்கடி கொடுக்கும் அதிமுக... உளவுத்துறை ரிப்போர்ட்!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோவை வடக்குப் பிரிவில் உதவிப்பொறியாளராக பணிபுரிந்தவர் புவனேஸ்வரன். கடந்த 5 மற்றும் 6-ந்தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவு 2.30 மணிக்கு கோவை அவினாசி சாலையில் (ஹோப் கல்லூரிக்கு அருகில்) நடந்து வரும் சாலைப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக மித மிஞ்சிய வேகத்தில் வந்த வோக்ஸ்வேகன் கார் அவர் மீது மோத, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் புவனேஸ்வரன்.

 

admk



இந்த மரணத்தை மூடி மறைப்பதில் நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்துவது சந்தேகத்தை உருவாக்குகிறது. நாம் விசாரித்தபோது, "நெடுஞ்சாலைத்துறையில் ஒவ்வொரு வருசமும் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்து ஏப்ரல் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில்தான் என்னென்ன பணிகள் என்பதையே தீர்மானித்து துறையின் அமைச்சரான முதல்வர் எடப்பாடியிடமிருந்து நிர்வாக ஒப்புதலைப் பெறுகிறார்கள் துறையின் உயரதிகாரிகள். அதன்பிறகே டெண்டர் விடப்பட்டு காண்ட்ராக்டர்களுடன் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் வேலைகளே துவங்குகின்றன. அதே சமயம், மார்ச்சுக்குள் முடிக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. காரணம், அந்தந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தியாக வேண்டும். இதன் பின்னணியில் இருப்பது ஊழல்களும் கமிஷனும்தான்.

அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் (2019-20) தமிழகம் முழுவதும் 5,343 சாலைப் பணிகளுக்காக 4,521 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணிகளையும் உயரதிகாரிகளின் கட்டளையின்படி குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உதவிப்பொறியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

 

officers



இரண்டு வாரங்களாக போதிய தூக்கமின்றியும் ஓய்வின்றியும் கோவை அவினாசி சாலைப் பணிகளை கவனித்து வந்துள்ளார் புவனேஸ்வரன். இந்த நிலையில், சாலைப் பாதுகாப்பு தணிக்கை குறித்த ஒரு ஆலோசனைக்கூட்டத்தை எடப்பாடி அரசின் சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் கீதா, கடந்த 4-ந்தேதி சென்னையில் நடத்தியிருக்கிறார். தமிழகம் முழுவதுமுள்ள உதவிப்பொறி யாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சென்னைக்கு வந்துள்ளார் புவனேஸ்வரன். 

காலையில் நடத்த வேண்டிய சாலைப் பாதுகாப்பு கூட்டத்தை மாலையில் நடத்தி இரவு 9 மணிக்கு முடிக்க, அதிகப் பட்ச களைப்போடே ஒவ்வொரு உதவிப் பொறியாளரும் தனது மாவட்டத்தை நோக்கி விரைந்துள்ளனர்.


கடுமையான உடல் சோர்வுடன் கோவை சென்றடைந்த புவனேஸ்வரனுக்கு, கோவை அவினாசி சாலைப் பணிகளை 5-ந் தேதி இரவே மேற்கொள்ளும்படி, கோவை கோட்டப் பொறியாளர் சிற்றரசு உத்தரவிட்டிருக்கிறார். மன உளைச்சலுடனேயே இரவுப் பணியை கவனித்துள்ளார் புவனேஸ்வரன். இந்தச் சூழலில்தான் அந்த வழியாக வந்த சொகுசுக் கார் புவனேஸ்வரனை தூக்கி வீசியிருக்கிறது'' என்கிறார்கள் மிகுந்த சோகத்துடன் உதவிப் பொறியாளர்கள்.


புவனேஸ்வரனின் மரணத்தை சாதாரண விபத்து என்கிற வகையில் அணுகி வழக்கை மேற்கொண்டு நகர்த்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது கோவை காவல்துறை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது பற்றி உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புவனேஸ்வரனின் மரணத்துக்கு காரணமான வோக்ஸ்வேகன் காரை ஓட்டி வந்தவர் ஒரு டாக்டர் என்பதும், அவர் காவல்துறையில் ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவரின் மகன் என்பதும், அதிக குடி போதையில் இருந்திருக்கிறார் என்பதும், குறிப்பிட்ட சாலைப் பணிகளை காண்ட்ராக்ட் (கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்) எடுத்திருப்பது மூத்த அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. முழுமையான விசாரணையில்தான் உறுதிசெய்யப்படும். ஆனால், மேற்கண்ட பின்னணிகள் இருப்பதால் வழக்கை கிடப்பில் போட்டுவிட்டது கோவை போலீஸ்'' என்கிறார்கள்.

இதற்கிடையே, முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்த ஒரு உதவிப்பொறியாளரின் மரணத்தை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப்பொறியாளர் சாந்தி, இதுவரை முதல்வருக்கு தெரிவிக்காதது ஏன்? துறையில் வேலை செய்த பொறியாளருக்கு அரசின் நிவாரணத் தொகை கொடுப்பதற்கான முயற்சியை ஏன் எடுக்கவில்லை? சாலைப் பாதுகாப்பிற்காக வருடம்தோறும் ஒதுக்கப்படும் 400 கோடி ரூபாய், சாலைப் பாதுகாப்பிற்காகத்தான் உண்மையிலேயே செலவிடப்படுகிறதா? என்கிற கேள்விகள் நெடுஞ்சாலைத்துறையில் எதிரொலிக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் கீதாவிடம் விசாரித்தபோது, "பணிகளை முடித்துவிட்டு அவர் கிளம்பிச் செல்கிறபோது மற்றொரு பகுதியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இரவு நேரத்தில் நடக்கும் சாலைப் பணிகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகள் பின்பற்றப்படுகின்றன'' என்கிறார்.

இந்த மரணம் குறித்து தலைமைப் பொறியாளர் சாந்தியிடம் கேட்டபோது, "குறிப்பிட்ட சாலை விபத்து பற்றி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடந்துள்ள விபத்தினை போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்ங்கிற நம்பிக்கை இருக்கு. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிச்சயம் நிவாரணம் பெற்றுத் தருவோம்'' என்கிறார்.