Skip to main content

"ரஜினியை எல்லாம் தலைவர் என்று சொன்னால் அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவுமில்லை.." - இடும்பாவனம் கார்த்திக் பேச்சு!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக்கிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

h



அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்ததே இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வாங்குவதற்காகத்தான் என்று கூறுகிறாரே அதை எப்படி பார்கிறீர்கள்? 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த உலகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை.  மோடியின் சன் அவர்தான். அரசியலில் ஏதாவது ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் அத்தகைய தெளிவு எதுவுமே இருப்பதில்லை. மனம் போல போக்கில் பேசக்கூடியவர். அவர்கள் சட்டம் போடுகிறார்கள், குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்குதான் குடியுரிமை என்று, ராஜேந்திர பாலாஜி சொன்னா மோடி சட்டத்தை மாற்ற போகிறாரா? குருமூர்த்தி உங்களை( ஓபிஎஸ்) பார்த்து ஆம்பளையா என்று கேட்டார். இவர்களால் என்ன செய்ய முடிந்தது. இவர்கள் அவரை எதிர்த்து எதாவது பேசினார்களா? வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், நம்மிடம் வீராவேசமாக பேசுவார்கள். அவர்கள் அடிவருடி கூட்டம். அவர்களால் மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்கள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அதனால், இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் பேசி குடியுரிமை வாங்கி தருவோம் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்தான். அதிமுக தலைமையகத்தில் மோடி படத்தை கொண்டு வந்து வைக்கிறார்கள். துண்டறிக்கை கொடுத்தால் கைது செய்யும் இவர்கள், ஆண்மையில்லாதவர் என்று கூறியவரை என்ன செய்தார்கள். 

பாகிஸ்தான், வங்கதேசம் முதலிய நாடுகள் ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது. ஜின்னா அவர்களின் பேச்சை கேட்டு நம்மை விட்டு பிரிந்த சென்ற அவர்களை, மீண்டும் இந்தியாவில் எப்படி சேர்ப்பது என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு உங்களின் பதில் என்ன? 

பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்ததற்கு மதம் காரணமாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் பிரிந்து சென்றதற்கு மொழிதான் காரணமாக இருந்தது. இந்த இரண்டு நாடுகள் தான் இந்தியாவில் இருந்து பிரிந்தது. ஆப்கானிஸ்தானை எதற்காக சேர்ந்தார்கள். அது என்ன கணக்கு. மற்ற அண்டை நாடுகளான நேபாளம், மியான்மர் நாடுகளை ஏன் இந்த சட்டத்தில் கொண்டுவரவில்லை.  அதற்கு இவர்கள் இதுவரை முறையான காரணத்தை சொல்லவில்லையே ஏன்? இவர்களுக்கு விருப்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க இவர்கள் முடிவு செய்துள்ளார்களா என்பதையாவது இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம் நாடுகளில் உள்ள இந்துக்களை மட்டும் ஏற்கிறார்கள், ஆனால் முஸ்லிம்களை ஏற்க மறுக்கிறார்கள். ஏன் அவர்களை ஒதுக்க பார்க்கிறார்கள், அவர்களும் ஏதோ ஒரு காரணத்துக்காக அகதிகளாக வருபவர்கள் தானே, அப்புறம் அவர்களை மட்டும் ஏன் சட்டம் போட்டு தடுக்கிறார்கள். அவர்களின் நோக்கம்தான் என்ன. இந்த நாட்டில் அவர்கள் இருக்கவே கூடாது என்று நினைக்கிறார்கள்?  அவர்களின் எண்ணம் அதுவாகத்தான் இருக்கிறது. 

சில தினங்களுக்கு முன்பு நடிகர் லாரன்ஸ் நாம்தமிழர் பெயரை குறிப்பிடாமலும், சில இடங்களில் சீமான் பெயரை குறிப்பிட்டும் ரஜினிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமில்லை. அவர் ஒரு நடிகர். அதை தாண்டி அவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. ரஜினிக்கும் எங்களுக்குமான சண்டை என்பது மண்ணுக்கான போராட்டம். எங்கள் நாட்டை நாங்கள் ஆண்டு கொள்கிறோம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று சொல்கிறோம். ஆனால், அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்கிறார். அவர் வந்தால் அதை மக்கள் முன் கொண்டு செல்வோம், அது வேறு பிரச்சனை. ஆனால், சம்பந்தமில்லாமல் லாரன்ஸ் எங்களை பற்றி பேசக்கூடாது. ரஜினியை தலைவனாக ஏற்றுகொண்டகூட்டத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவரை எல்லாம் தலைவன் என்று சொல்வதை விட வெட்கக்கேடானது வேறு ஒன்றும் இல்லை. அவருக்காக லாரன்ஸ் எங்களை தேவையில்லாமல் வம்பிழுக்க கூடாது.