"2021 சட்டமன்றத் தேர்தல் போர்க்களத்தில் வீரர்களாக நிற்போம்'' என 2017இல் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2020 டிசம்பரில் தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி "நான் அரசியலுக்கு வரவில்லை' என அறிவித்துவிட்டார். இன்னமும் யார் பக்கமும் சாயாத அவரது ரசிகர்களை வளைக்க கட்சிகள், மன்றங்களை வட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களின் நிலைப்பாடு என்ன? ரஜினி என்ன நினைக்கிறார் என அறிய ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.
"தமிழகத்தில் மன்றத்துக்கு அதிக தொண்டர்களை இணைத்து ரஜினிக்கு பக்கபலமாக இருந்தது தென்சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற மா.செ.க்கள்தான். 2021 தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டியைப் பலமாக அமைக்கச் சொல்லி தலைவர் உத்தரவிட்டார். 2019இல் தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் பூத் கமிட்டி இருந்தன. அதில் 42 ஆயிரம் பூத் கமிட்டிகளில் ஒரு கமிட்டிக்கு சராசரியாக 20 பேர் என 12 லட்சம் பேர் பட்டியலை தலைமைக்குத் தந்தோம்.
தமிழகத்திலேயே அதிக பூத் கமிட்டிகளை அமைத்து பக்காவாக இருந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தொகுதி என ரஜினியே பாராட்டினார். சோளிங்கர் தொகுதியில் மட்டும் 320 வாக்குச்சாவடிகளில் ஒரு பூத்துக்கு 30 பேர் கொண்ட கமிட்டி, அவர்களின் குடும்பத்தினர் என 30 ஆயிரம் வாக்குகள் என ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் மன்ற உறுப்பினர்கள், நேரடியாக பூத் கமிட்டியில் உள்ளார்கள். இவர்களின் குடும்பத்தினர், தீவிர ரசிகர்கள் என சராசரியாக 40 லட்சம் வாக்காளர்கள் தோராயமாக உள்ளார்கள்.
பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவிலிருந்து எங்கள் மன்றத்துக்கு வந்து, தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தலைவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தபின், மன்றத்தினர், பூத் கமிட்டி அமைப்பின் பலமறிந்து மன்றத்தினரைக் குறிவைத்தே தனிக்கட்சி தொடங்கி, ரசிகர்களைக் கவர திட்டமிட்டு எந்திரன் (ரோபோ) சின்னத்தையும் வாங்கினார். ஆனால் 5 சதவீதம் ரஜினி மன்றத்தினர்கூட அவர் பின்னால் செல்லவில்லை. இந்த விரக்தியிலேயே, "தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை” என அறிவித்து ஒதுங்கிக்கொண்டார்.
தலைவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டாலும், மன்றத்தினர் 80 சதவீதம் பேர் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை. இவர்கள் ரஜினி வாய்ஸ் யாருக்கு என காத்துள்ளார்கள். தலைவர் அமைதியாக இருப்பதால் இந்த வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., கமல் கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் எங்கள் மா.செ.க்களிடம் முட்டிமோதுகின்றனர். தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள், வேலூர் மா.செ. சோளிங்கர் ரவியை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் தென்சென்னை சந்தானம், கிருஷ்ணகிரி சீனுவாசன், தஞ்சை தினேஷ், புதுக்கோட்டை முருகுபாண்டியன் போன்ற 20க்கும் மேற்பட்ட மா.செ.க்களிடம் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவு கேட்கிறார்கள்'' என்றனர் நிர்வாகிகள்.
ரஜினிக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தலைவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை, ரசிகர்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் என அறிவித்தாலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள் யார், யார் எந்தக் கட்சிக்குச் செல்கிறார்கள் என்பதைத் தனக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதால் அதுபற்றிய பட்டியல் மா.செ.க்களிடம் வாங்கி அவர்களுக்கு அந்தக் கட்சி தலைமை எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்கிற தகவலோடு தலைவருக்குப் போகிறது.
தி.மு.க.வில் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளராக தூத்துக்குடி ஸ்டாலினை நியமனம் செய்ததைக் கூறினோம். தற்போது வேட்பாளர் அறிவிப்பின்போது, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளில் உள்ள தனது நண்பர்கள் யார், யாருக்கு சீட் தரப்பட்டுள்ளது என்பதை விசாரித்தவர், 2019இல் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மா.செ.வாக இருந்து தி.மு.க.வுக்குச் சென்ற மதியழகன், பர்கூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது ஆச்சர்யமானார். மதியழகன் வெற்றி வாய்ப்பு குறித்தும் விசாரித்தார். தங்களுக்கு வாய்ஸ் தரச்சொல்லி டெல்லியிலிருந்து அவருக்கு அழுத்தம் வருகின்றது, நேரடியாக வந்து சந்திக்கிறோம் என பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் கேட்கிறார்கள். அதனைத் தவிர்க்கவே அவர் ‘அண்ணாத்த' படப்பிடிப்பை தொடங்கச் சொல்லி கேட்க, அதுவும் தொடங்கப்பட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருந்தாலும் தேர்தல் களத்தைக் கவனித்தே வருகிறார். ஓட்டு அவுங்க விருப்பப்படி போடட்டும் என்கிற மனநிலையில் உள்ளார்'' என்றார்.