நடைபெறவுள்ள 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்த காரணத்தினால் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தேர்தலில் நிறுத்தப்படும் வாக்காளர் எண்ணிக்கை மட்டுமே பலம், வெற்றி பெறுவது அல்ல என்று நினைப்பவர்கள் பேசுவது, அமைப்பது மூன்றாவது அணி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திடம் கோவை சத்யன் பேசுகையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துதான் அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. நடத்தி வருகிறது. ஒரு கட்சிக்கு எண்ணிக்கை மட்டுமே பலமா? அதிக தொகுதிகள் வாங்கிவிட்டால் பலம் பொருந்திய கட்சி என்று நினைப்பது தவறு. தேர்தல் முடிவு வரும்போது மக்கள் எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்பதைத்தான் பார்ப்பார்கள்.
எத்தனை தொகுதியில் வெற்றி பெறுகிறோம், எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம் என்பதுதான் பலம். இது தேமுதிகவுக்கும் தெரியும். 23 தொகுதிகள் பெற்றதாலேயே பாமக வீக்காக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? எண்ணிக்கை அடிப்படையைவிட, வெற்றியின் அடிப்படையில் பேசுவதே கூட்டணி. தேமுதிகவினுடைய தேர்தல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அமுதிக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிவிட்டது. அதிமுக தலைமை பேசிக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்குமா?
கூட்டணியில் இருப்பது அந்தெந்த கட்சிகளுடைய விருப்பம். அவர்கள் கட்சியின் லெட்டர் பேடில் மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை செய்து கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
த.மா.கா. உள்ளிட்ட மற்றக் கட்சிகளுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?
த.மா.கா.வின் ஜி.கே.வாசன் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்கிறது. கூட்டணியை வழிநடத்தக்கூடிய அதிமுக எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாக தெளிவாகக் கூறிவிட்டார். இவ்வாறு கூறியுள்ளார்.