உள்ளாட்சி பிரதிநிதித்துவ சட்டம் என்பது வலிமையானது. கிராம மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாக தேர்வு செய்து தங்கள் கிராமத்தை நிர்வாகம் செய்ய வைக்கின்றனர். அந்த கிராம மக்கள் ஒரு திட்டத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த திட்டத்தை எதிர்த்து கிராம சபைக்கூட்டத்தில் அக்கிராம மக்கள் தீர்மானம் இயற்றினால், அதனை குடியரசு தலைவரால் கூட மீற முடியாது.
இந்த கிராம சபைக்கூட்டத்தை ஜனவரி 26, மே1, ஆகஸ்ட்15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு நான்கு முறை இந்தியாவில் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தேவைகளை முன்வைத்து விவாதிக்கப்படும். மக்கள் தங்கள் கருத்துக்களை கூறி தீர்மானம் நிறைவேற்றலாம்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் மே 1ஆம் தேதி நடைபெற வேண்டிய, கிராம சபைக்கூட்டம் நடத்தவில்லை. அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராமசபைக்கூட்டமும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் அதே கரோனாவை காரணம் காட்டி அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என ஒரு தரப்பும், இல்லை நடக்கும் என அதிகாரிகள் மட்டத்திலேயே விவாதம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகங்களுக்கு ஒன்றிய குழு அலுவலர்கள் தகவல் தெரிவித்து கடிதம் அனுப்பினர்.
மத்திய அரசு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி 3 வேளாண்மை மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியது மத்தியில் ஆளும் பாஜக. குடியரசு தலைவரை சந்தித்து அந்த மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கக்கூடாது என தி.மு.கவினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனையும் மீறி குடியரசு தலைவர் அதில் கையெழுத்திட்டு சட்டமாக்கினார். இது மத்திய, மாநில அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்தது. இதனை கண்டித்து திமுக மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அதனை தொடர்ந்து கிராம சபைக்கூட்டத்தில், இந்த சட்டத்தை கண்டித்து தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது மத்தியில் ஆளும் பாஜகவையும் – மாநிலத்தை ஆளும் அதிமுகவை அதிர்ச்சியடைய செய்தது.
தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக பெரும்பான்மையாக திமுகவினர் உள்ளனர். விவசாய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்றினால், அது பெரும் சட்ட சிக்கலில் கொண்டுபோய்விடும் என்பதால் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் எடப்பாடி அரசு, தமிழகம் முழுவதும் நடக்கயிருந்த கிராமசபை கூட்டத்தினை ரத்துசெய்ய சொல்லி உத்தரவிட, தலைமை செயலாளர் சண்முகம், கரோனாவை காரணம் காட்டி அக்டோபர் 1ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது ரத்து என மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பினார். இது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கோபமடைந்தார். கரோனாவை காரணம் காட்டி ஜனநாயகத்தை, கிராம ஊராட்சிகளின் உரிமைகளை பறிப்பது ஜனநாயக விரோதம். கிராம சபைக்கூட்டம் நடைபெறவில்லை என்றாலும், அக்டோபர் 2ஆம் தேதி மக்களை திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் சந்திப்பார்கள் என அறிவித்தார்.
அதன்படி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து அங்கே கிராம சபைக்கூட்டம் நடத்தினர். அந்த கிராம சபைக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் மோடி அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்துவரும் எடப்பாடி அரசை கண்டித்தும் பேசினர்.
அரசின் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடந்துள்ளது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராமசபை கூட்டம் என்பது ஆண்டுக்கு நான்கு முறையும், மாதம்தோறும் ஊராட்சி மன்ற கூட்டமும் நடைபெறும். கிராம சபைக்கூட்டம் என்பது மிக முக்கியமானது. அங்கு இயற்றப்படும் தீர்மானங்கள் முக்கியமானது. அந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடந்தாலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர் ஒருவர் பார்வையாளராக சென்று கலந்து கொள்வார். ஊராட்சி செயலர் முன்னிலையில் நடைபெறும். அவர்கள் முன்னிலையில் இயற்றப்படும் தீர்மானம்மே முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால் அதேநேரத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டத்தை அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. அதனால் அந்த கூட்டங்களுக்கு ஊராட்சி செயலர், அதிகாரி என யாரும் செல்லவில்லை. ஆக கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியவில்லை. சில பஞ்சாயத்துகளில் தீர்மான நோட்களில் தீர்மானம் இயற்றி கையெழுத்திட்டுள்ளனர், ஆனாலும் அது செல்லாது என்றார்கள்.
மேலும் திமுக பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கிராமசபை கூட்டங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று கூட்டம் நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தக்கோட்டை மற்றும் நிம்மியம்பட்டு கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடத்தினால் கைது செய்வோம் என ஆலங்காயம் போலீஸார் சென்று மிரட்டியுள்ளனர். கைதுதானே செய்யப்போகிறீர்கள் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதைப்போல், நாங்கள் மக்களை சந்திப்போம், நீங்கள் கைது செய்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு, கூட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு, விவசாய சட்டம் எதிர்ப்பு குறித்து பேசத்தொடங்கினார் தேவராஜ். வந்துயிருந்த காவல்துறை அதிகாரிகள், கூட்டத்தை நடத்தியவர்கள், கலந்துகொண்டவர்கள் யார், யார் என பட்டியல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
அக்டோபர் 1ஆம் தேதி காலை ஊராட்சி மன்ற தலைவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்தந்த காவல்நிலையத்தில் இருந்து போன் செய்து கூட்டம் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் வழக்கு போடுவோம் என தெரிவித்துள்ளனர். அதனையும் மீறி திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.