உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் சிலர் பிரச்சனை செய்கிறார்கள். எதற்காக இந்தப் பிரச்சனை, அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பத்திரிகையாளர் கோவி. லெனின், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு,
கரோனாவால் மருத்துவர் சைமன் உயிரிழந்த துயரச் சம்பவம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அவரின் உடலைப் புதைக்கச் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயலவில்லை என்ற குற்றாச்சாட்டை தற்போது பெரும்பாலானவர்கள் முன்வைக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
உயிரிழந்த சைமன் அவர்களுடைய உடலை எடுத்துச் செல்கின்ற போது நடந்த வன்முறை என்பது தமிழ்நாட்டில் முதல் முறை அல்ல. சென்னையிலேயே அந்தமாதிரி சம்பவம் இரண்டு முறை நடைபெற்றுள்ளது. சைமன் எந்த மருத்துவமனையில் இறந்தாரோ அதே மருத்துவமனையில் இறந்த இன்னொரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் மக்களின் அறியாமை என்று நான் பார்க்கவில்லை, அச்ச உணர்வு என்றுதான் நான் பார்க்கிறேன். அறியாமை எங்கிருந்து வரும் என்றால் அச்ச உணர்வில் இருந்துதான் வரும். அச்ச உணர்வுதான் உங்களை எங்கெங்கோ தள்ளிச்செல்லும். இந்தக் கரோனாவின் தன்மை நமக்குத் தெரியவில்லை. இதே அரசாங்கம் தானே சொன்னது வீட்டைவிட்டு யாரும் வெளியே வராதீர்கள் என்று. உங்களின் அடிப்படை தேவைக்குக் கூட குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே வாருங்கள், சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்குச் சொல்லப்பட்டு இருந்தன. இப்படி எல்லாம் கூறியதால் மக்களுக்கு இந்த நோய்த் தொற்று வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு இயல்பாகவே இருக்கின்றது.
இதில் மருத்துவர்களின் நிலைதான் இன்னும் மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது என்பதை முதன்முதலில் சீனாவிலேயே நேரில் பார்த்தோம். கரோனா என்ற தொற்று இருக்கிறது என்று உலகத்துக்கு சொன்ன மருத்துவரே அந்த நோய்க்குப் பலியானார். அதன் பிறகு வூகான் நகரில் பல்வேறு மருத்துவர்கள் அந்த நோய்க்குப் பலியானார்கள். இந்தோனேஷியாவில் ஒரு மருத்துவர் பலியானார். இங்கே மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், அரசாங்கம் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
சுகாதாரப் பணியார்களுக்கு, காவலர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றது. வண்டியில் வருபவர்களை ஏன் மாஸ்க் போடவில்லை என்று கேட்பதற்குக் கூட பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றது. ஏதோ இந்த ட்ரோன் இருப்பதால் கூட்டத்தைக் கலைப்பதற்கு போலீசார் சிரமப்படுவதில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இறந்து போகிறார்கள் என்றால் அவர்களுக்கு முழு பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசாங்கம். அதை அரசு முழுமையாகச் செய்ய வேண்டும் என்று கூறினார்.