மோடி பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகின்றனவாம். 5 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாராம்.
வழக்கம்போல தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் விளம்பரங்கள் தூள்பறக்கின்றன. அரசுப்பணம் தண்ணீராய் செலவழிக்கப்படுகிறது.
பணத்தைச் செலவழித்தால் யாரை வேண்டுமானாலும் நல்லவனாய், வல்லவனாய் விளம்பரப்படுத்த முடிகிற காலகட்டத்தில், வெறும் வாய்ச்சவடால் பேசும் பிரதமர் மோடியை செயல்வீரராய் தூக்கி நிறுத்த முடியாதா என்ன?
ஒரு அரசு என்பது முந்தைய அரசுகளின் தொடர்ச்சி என்பதுதான் நிஜம். ஆனால், இந்த நிஜத்தையே மாற்றி அமைத்தவர் மோடிதான். அப்படியானால், அவர் எப்படிப்பட்ட பொய்யராக இருக்க வேண்டும். விடுதலை பெற்றதிலிருந்து நேரு, லால்பகதூர், இந்திரா, மொரார்ஜி, ராஜிவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவேகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று எத்தனையோ பிரதமர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்காக எ்தனையோ திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டிருக்கிறார்கள்.
அவற்றின் தொடர்ச்சியாகத்தான் மோடியும் செயல்பட முடியும். சுகாதாரம் என்றால் மருத்துவ வசதிகள் இதுவரை எப்படி இருந்ததோ, அதில் காலத்துக்கேற்ற நவீன வசதிகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், மோடி அரசு வந்தபிறகுதான் சுகாதாரத்துறையில் முதல் அடி எடுத்து வைத்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன. இவர் வந்து எத்தனை உயர் மருத்துவ நிறுவனங்களை ஏற்படுத்தினார் என்பதை சொன்னால்தானே சாதனையாக இருக்கும்.
ஏற்கெனவே உள்ள கல்வி நிறுவனங்களில் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டு கல்வித்துறையில் பெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் விளம்பரங்கள் வெறுப்பேற்றுகின்றன. புதிய உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருந்தால் அதைத்தானே சொல்ல வேண்டும்.
கடந்தகால ஆட்சிகளில் 5 லட்சத்து 77 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் அந்த முயற்சி தொடர்ந்தது. மிச்சமிருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு கடந்த நான்காண்டுகளில் மின்சார வசதி வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் இருந்த சிரமங்கள் இல்லாத நிலையில் இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஆனால், மோடி சொன்ன பொய்தான் பெரிய சாதனை. மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை இவர்தான் உருவாக்கியபோது போல ஒரு விளம்பரம் செய்தார். இந்த அளவுக்கு பொய்கார அரசு இதுவரை இருந்ததில்லை. ஒவ்வொன்றாக சொன்னால் நீளமாக நீண்டுகொண்டே போகும். இதுவரை எந்த அரசுமே இலவச வீடுகளை கட்டிக் கொடுக்காததுபோல ஒரு பில்டப். இதுவரை எந்த அரசுமே தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவது. கங்கையை சுத்தம் செய்வதாக சொல்லி கோடிக்கணக்கான ரூபாயை கபளீகரம் செய்ததுதான் மிச்சம்.
மொத்தத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை எந்த பிரதமரும் போகாத அளவுக்கு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி. இதுவரை பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை நண்பர்களாக நடத்துவார்கள். எப்போ வேண்டுமானாலும் பிரதமரைச் சந்தித்து கருத்துக் கேட்க முடியும். அமச்சரவை கூட்டம் முடிந்தாலோ, ஒரு திட்டத்தை அறிவித்தாலோ மீடியாக்களை அவர்கள் சந்திப்பார்கள். கேள்விகளுக்கு பதில் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு நிர்வாக அறிவு இருந்தது. இவரோ, நேரடியாக பத்திரிகை முதலாளிகளை நண்பர்களாக்கிக் கொண்டார். முதலாளிக்குத் தேவையான விளம்பரங்களைக் கொடுத்து, தனது ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் செய்துவிட்டது பெரிய சாதனைதானே.
மோடியைப் போல பொய் சொல்வதில்தான் திறமை வாய்ந்த பிரதமர் யாருமே இல்லை. எதிர்க்கேள்வி கேட்க வாய்ப்புகளை மறுத்துவிட்டுத்தான் இவரால் பேசவே முடிகிறது. அந்த அளவுக்கு அறிவுக்கூர்மை இல்லை என்பதை தொடர்ந்து நிரூபிக்கிறார். பொதுக்கூட்ட மேடையிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி கூச்சல் போட்டே பேசுகிறார்.
தனக்குத் தெரியாத விஷயத்தையெல்லாம் வாய்க்கு வந்தபடி புளுகித் தள்ளுகிறார். அது புளுகு என்று உடனடியாக நிரூபிக்கப்பட்டாலும் அதை ஏற்று வருத்தம் தெரிவிக்கிற பண்பே இவரிடம் இல்லை. முதலில் பொய்யை பரப்பிவிடு. அது உண்மையா பொய்யா என்பதை அறிவது பிறகு இருக்கட்டும். மிகப்பெரிய அளவில் அந்த பொய் பரவிவிடும் அல்லவா என்ற ஹிட்லரின் பாணியையே மோடி கடைப்பிடிக்கிறார்.
இந்த நான்கு ஆண்டுகளில் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு சரிந்துள்ளது என்பது அம்பலமாகிவிடக்கூடாது என்பதற்காக இப்போதே பொய்களை கருத்துக் கணிப்புகளாக்கி பரப்பத் தொடங்கியிருக்கிறார் மோடி.
2014 மக்களவைத்தேர்தலில் பாஜக தனித்தே 282 இடங்களைப் பெற்றது. அதுபோக கூட்டணிக் கட்சிகள் 56 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. தனிப்பெரும்பான்மை பெற்ற எகத்தாளத்தில் யாரையும் மதிக்காமல் மோடி ஆட ஆரம்பித்தார். ஆனால், அவருடைய ஆட்டம் அத்தனையும் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருந்தாலும் ஊடகங்கள் அதைப்பற்றி வாய் திறக்காதபடி, வாய் நிறைய ரூபாய் நோட்டுக் கட்டுகள் திணிக்கப்பட்டிருந்தன.
அப்படி இருந்தும் மோடியின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களால் முறியடிக்கப்பட்டது. தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் ஏதோ ஒரு கட்சியை விலைக்க வாங்கி அதை தனது வெற்றியாக காட்டும் மோடியின் வித்தையை மக்கள் அறியத் தொடங்கினார்கள். மோடியின் செல்வாக்கு, மோடியின் துணிச்சல், மோடியின் திறமை என்று எதையெல்லாம் பில்டப் செய்து 2014 தேர்தலில் பிரச்சாரம் செய்தார்களோ அவை அனைத்தும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கத் தொடங்கியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில், ராஜஸ்தானில், மத்தியப்பிரதேசத்தில், குஜராத்தில், மகாராஸ்டிராவில் என்று வடமாநிலங்கள் மட்டுமின்றி, தெற்கே அதற்கு வாய்ப்பாக இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. மோடியும் அமித் ஷாவும் மூக்குடைக்கப் பட்டிருக்கிறார்கள். சரியும் தங்களுடைய இமேஜை காப்பாற்றிக்கொள்ள மீடியாக்களுக்கு விளம்பரத் தீனியை திணித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் விளம்பர்ச் செலவுகளை கணக்கிட்டு அத்தனை ஐஐடி கட்டியிருக்கலாம், இத்தனை ஐஐஎம் கட்டியிருக்கலாம் என்று பிரச்சாரம் செய்த மோடியும் பாஜகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் விளம்பரத்துக்காக 3 ஆயிரத்து 755 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். இந்தத் தொகையில் எத்தனை மருத்துவமனை கட்டியிருக்கலாம்… எத்தனை கல்லூரிகள் கட்டியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி இப்போ கேட்கிறது…
மோடியிடமும் பாஜகவிடமும் பதிலே இல்லை. எத்தனையோ கேள்விகளை மோடியும் பாஜகவும் பதில் சொல்லாமல் தவிர்க்கிறார்கள். சாதனை செய்துவிட்டதாக சொல்லும் எத்தனை விஷயங்களில் இதையும் மக்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
282 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளின் தயவே தேவையில்லாமல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி, இப்போது பெரும்பான்மையை இழந்து வெறும் 269 இடங்களுடன், கூட்டணிக் கட்சிகளின் தயவை எதிர்பார்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சந்திக்கவே தைரியமின்றி தத்தளிக்கிறார் என்பதுதான் உண்மை.