Skip to main content

சாதித்த அரசு பள்ளியை சோதிக்கும் கல்வித்துறை... திரும்பிப் பார்ப்பாரா அமைச்சர்?

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

அரசுப் பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும். அதற்கு ஆசிரியர்கள் தான் பொருப்பு என்று கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில் இந்த ஆண்டு மாணவர்களில் சேர்க்கையை அந்த்தந்த கிராம இளைஞர்களே அதிகரித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எந்தப் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்க்கை என்று போட்டிகள் நடந்து வருகிறது. அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு கும்ப மரியாதை, பொன்னாடை, தங்க நாணயம், ரொக்கப்பரிசு, சைக்கிள் பரிசு என்று ஆர்வத்தை தூண்டும் பரிசுகளை இளைஞர்கள் வழங்கி வருகின்றனர்.

 

 


இத்தனைக்கும் மத்தியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி சத்தமில்லாமல் 131 மாணவர்களை சேர்த்துக் கொண்டு மாபெரும் சாதனையை செய்துவிட்டு அமைதியாக உள்ளது. அந்த அரசுப் தொடக்கப்பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 410. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல மாநில அளவிலும் அதிக மாணவர்களைக் கொண்ட அரசு தொடக்கப்பள்ளியாகக்கூட இருக்கலாம். இத்தனை மாணவர்களைச் சேர்த்த அரசுப் பள்ளியில் 3 வகுப்பறைகளும் 3 ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளது தான் பெரும் வேதனை.
 

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை சேர்த்த அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டிகளில் கல்விக் கட்டண சலுகை, வேன் கட்டண சலுகை என்று அறிவித்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கிராமம், நகரத்திலும் தனியார் பள்ளிகளால் ஏற்பட்ட போட்டியின் காரணமாக தங்கள் பணியை செவ்வனே செய்து, மாணவர்களின் தரத்தை உயர்த்தவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் போராடி வருகிறார்கள்.

 

 

அப்படி இருக்கையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவர்களின் கல்வி, விளையாட்டு, அன்பு, அரவணைப்பு எல்லாம் சேர்ந்து கொடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப் படுத்தி உள்ளனர். இத்தனைக்கும் அந்த ஊரில் இன்னும் 2 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கத்தான் செய்கிறது. 

 

The government school that added 131 students in one month: teacher and shortage of classrooms! The deprivation of the Ministerial Council


 

இவ்வளவு மாணவ, மாணவிகளைச் சேர்த்துக் கொண்டு மாணவர்களின் படிப்பு, ஒழுக்கம், விளையாட்டு எதிலும் குறைவில்லாமல் செய்து வரும் ஆசிரியர்களை பாராட்டியே ஆக வெண்டும் என்று அன்னவாசல் மக்கள் பள்ளிக்கே திரண்டு வந்து தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பள்ளி வளர்ச்சிக்கு என்ன தேவையோ சொல்லுங்கள் செய்து தறுகிறோம் என்று சொல்லி ஆசிரியர்களை நெகிழச் செய்துள்ளனர். இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை அன்பளிப்பாக அமைத்து கொடுத்த எம்.சி.சேதுராமனுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டிய  அன்னவாசலை சேர்ந்த சாகுல், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எனது பையன் படிப்பதை பெருமையாக கருதுகிறேன். இங்குள்ள ஆசிரியர்கள்  அனைவரும் மாணவர்களிடம் அன்பாகவும், அனுசரணையுடனும் நடந்து கொள்கிறார்கள். அதனால் எங்கள் குழந்தை நல்ல நிலையில் வீட்டுக்கு வருகிறான். தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தும் மனதளவிலான பாதிப்புகளை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.

மாணவர்கள் பாடங்களை புரியவில்லை என்றால் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் குழந்தைகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் நாங்கள் எங்கள் பணியை செய்ய முடிகிறது. நாங்கள் சொல்லிக் கொடுப்பதை போல் நீங்களும் வீட்டில் சொல்லிக் கொடுங்கள். மாணவர்களின் செயல்பாடுகளை, சோர்வாக இருந்தால் கனிவாக கேளுங்கள், உங்கள் பிள்ளைகளை நீங்கள் கவனியுங்கள் என சொல்றாங்க.  
 


 

The government school that added 131 students in one month: teacher and shortage of classrooms! The deprivation of the Ministerial Council


 

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளையும், ஆசிரியர் நியமனத்தை  உடனே கல்வித்துறை செய்து கொடுத்தால் அன்னவாசல் ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  இன்னும் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். அரசுப் பள்ளி மூடல் என்ற நிலை மாறி அன்னவாசல் பகுதியில் தனியார் பள்ளிகள் மூடல் என்ற செய்தியை விரைவில் காணலாம் என்றார். 
 

விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள்.. அரசுப் பள்ளியில் 410 மாணவர்களோடு செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை பொதுமக்களாகிய நாம் செய்து கொடுக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவில் கிராம கல்விக் குழுத்தலைவர் மீரா மொய்தீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வராசு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் க.சாந்தி, ஆசிரியர் எ.சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


 

The government school that added 131 students in one month: teacher and shortage of classrooms! The deprivation of the Ministerial Council


 

எப்படி இத்தனை மாணவர்களை சேர்த்த சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை பள்ளியின் ஆசிரியர் சரவணன் முன் வைத்தோம். இந்த பள்ளி சமஸ்தான காலத்து வரலாற்று பள்ளி. கடந்த ஆண்டு வரை 380 மாணவ, மாணவிகள் படித்தார்கள். அதன் பிறகு இந்த ஆண்டும் இன்றும் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆர்வமுள்ள இளைஞர்கள் அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தெரு தெருவாக சென்று தனியார் பள்ளிக்கு இணையான கல்வி வழங்குவதை எடுத்துக் கூறி  ஆட்டோ பிரச்சாரம் செய்து வந்தோம்.

மேலும் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள், பள்ளி நிர்வாகத்தில் நாங்கள் கொடுக்கும் சிறப்புகளான வீட்டுப்பாட டைரி, பெல்ட், அடையாள அட்டை வழங்கி வருகிறோம் என்பதை எடுத்து சொன்னோம். மேலும் கல்வித் துறை சார்பில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்வோம். எங்கள் பள்ளி மாணவர்களும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒன்றிய மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர்.

 

 


பள்ளி வளாகம், வகுப்பறை ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைக் குழு செயல்பட்டு வருகிறது. அந்த குழு பள்ளி வளாகத்தையும் வகுப்பறையையும் தூய்மையாக வைத்துக் கொள்கிறது. மாணவர்களுக்கு தன் சுத்தம் குறித்த பயிற்சியும் விழிப்பணர்வும் அளிக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் சுகாதரம் பேணுவதில் அக்கரை காட்டினார்கள்.

எங்களது பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, விளையாட்டு, எழுத்து, பேச்சு, தனித்திறன் பயிற்சி அளித்தளை அவர்களின் குழந்தைகள் மூலமாக அறிந்துள்ளனர். அதனால்  அன்னவாசல் பகுதியில் இருந்து இந்த கல்வி ஆண்டில் பள்ளி திறந்த ஜூன் முதல் நாளில் தொடங்கி மாதம் முடியும் வரை ஒரு மாதத்தில் முதல் வகுப்பில் 88 புதிய மாணவர்களும், இரண்டு முதல் ஐந்து வகுப்பு வரை 43 மாணவர்கள் பிற தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்து எங்கள் பள்ளியில் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ந்துள்ளனர்.


 

 

The government school that added 131 students in one month: teacher and shortage of classrooms! The deprivation of the Ministerial Council


 

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஒரே மாதத்தில் 131 மாணவர்களை சேர்த்த முதல் பள்ளி எங்களது அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என கல்வித்துறை அதிகாரிகள் கூறுவதை கேட்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது என்றார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலைத் தொகுதியில் அமைச்சர் தினசரி செல்லும் வழியில் அமைந்துள்ள இத்தனை சிறப்பு மிக்க அரசுப்பள்ளி மேலும் வளர பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள், போதிய ஆசிரியர்கள், உள்கட்டமைப்புகளை அமைச்சர் செய்து கொடுத்தால் மேலும் வளரும் தொகுதிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேரும் என்கிறார்கள் தொகுதி மக்கள். 


 

The government school that added 131 students in one month: teacher and shortage of classrooms! The deprivation of the Ministerial Council


 

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. காரணம் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கடந்த மாதம் பணி நிரவல் செய்துவிட்டு ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. உபரி ஆசிரியர்கள் உள்ளனர் என்று அமைச்சர் சொல்லி வருகிறார். இப்போதைய மாணவர்கள் சேர்க்கையை கணக்கில் எடுத்துக் கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பினால் அரசுப்பள்ளியை நம்பி வந்த மாணவர்களின் கல்வித் தரம் உயரும். இப்படி, மாணவர் சேர்க்கையில் சாதித்த அரசு பள்ளிக்குத் தேவையான வசதிகளையும் ஆசிரியர்களையும் தராமல் சோதிக்கும் கல்வித்துறை, தேவையான வளங்களை தர உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். அமைச்சர் இதை கவனிப்பாரா என்று காத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள்.