Skip to main content

இராணுவ கிளர்ச்சியை மக்களுடன் தகர்த்தெறிந்து மீண்டும் அதிபரானவரின் கதை...

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

துருக்கி நாட்டின் தற்போதைய அதிபராக இருக்கும் ரெஜெப் தையீப் எர்டோகன் மீண்டும் இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் பதவிக்காலம் அடுத்த வருடம் வரை இருக்கிறது. இருந்தாலும் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இராணுவ சதி புரட்சி காரணமாக அதிபருக்கு மேலும் சில அதிகாரங்கள் வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூட்டிக்கொண்டார். அதன்படி அடுத்த வருடம் 2019 ல் நடக்க இருந்த தேர்தலை தனது அதிகாரத்தின் கீழ் இந்த வருடமே மாற்றினார். இதனால் துருக்கியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பொது தேர்தலும், அதிபர் தேர்தலும் நடத்தப்பட்டது. நீதி மற்றும் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் எர்டோகன். இந்த தேர்தலில் மொத்தம் 99% வாக்குகள் பதிவானதில் எர்டோகன் போட்டியிட்ட கட்சி 53% வாக்குகள் பெற்றுள்ளது. எர்டோகனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று சொல்லப்பட்ட முகரம் இன்ஸின் மற்றும் அவர் போட்டியிட்ட கட்சியான மக்கள் குடியரசு கட்சி 31% வாக்குகளே பெற்றது. 

 

erdogan


 

 


துருக்கியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்துவதை வைத்துதான் அதிபர்கள் தேர்தெடுக்கப்பட்டு வந்தனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 91 ஆண்டுகளுக்கு பிறகு 2014ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய பதவியான அதிபர் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது, அந்தத் தேர்தலில் அதிபராக தேர்தெடுக்கப்பட்டவர்தான் எர்டோகன். 2003 முதல் 2014 வரை எர்டோகன் துருக்கியின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எர்டோகன்னின் ஆட்சியில் துருக்கி பல்வேறாக செதுக்கப்பட்டுள்ளது, நாடு வளர்ச்சி பாதையில் சருக்காமல் சென்றுகொண்டிருக்கிறது என்று செல்லப்பட்டுள்ளது. இப்படியெல்லாம்  ஒரு பக்கம் சொன்னாலும். மறு பக்கத்தில் அவர் ஒரு சர்வாதிகாரி என்று சித்தரிக்கப்படுகிறார். எர்டோகன் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக போட்டியாளர்களைப் பேசவிடாமல் செய்தார். பல்வேறு ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தார்.  துருக்கிய அரசியலமைப்பையே மாற்றியமைத்தார். இது போன்ற காரியங்களைச் செய்ததனால் நடக்கப்போகும் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது என்றார்கள், ஆனால் அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். 

  erdogan party


 

 


துருக்கியில் இதுவரை ஐந்து முறை இராணுவம் ஆட்சியை அமைந்துள்ளது. இவரது ஆட்சிக் காலத்தில் 2016 ஆம் ஆண்டு இராணுவ சதி கிளர்ச்சி  ஏற்பட்டது. ஜூலை 15, 2016 ஆம் ஆண்டு துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல்லில் இருக்கும் பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள இரண்டு பாலத்தில் இராணுவ யுத்த டாங்குகளை கொண்டு இரவு 7:30 மணிக்கு ஆட்சி கவிழ்ப்பு முறையை தொடங்கியது இராணுவம். தலைநகர் அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் திடீர் தாக்குதல் இராணுவத்தினர்களால் நடத்தப்பட்டது. இராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன. அதைத் தொடர்ந்து அங்கு இராணுவ புரட்சிக்கான முயற்சி நடைபெறுவதாக பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்தார். இராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசு படைகள் பதிலடி தருவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

 

tukkey armies

 

ஒரு மணி நேரம் கழித்து இராணுவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாட்டை அமைதிக்கான அமைப்பு வழிநடத்துகிறது. ஊரடங்கும், இராணுவ சட்டமும் அமல்படுத்தப்படும். அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்மரிஸில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த எர்டோகன் கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து தனது கைபேசியின் மூலமாக நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பினார். இராணுவ தலைமையின் அங்கீகாரத்தை பெறாத ஒரு இராணுவ பிரிவு சதி புரட்சி செய்கிறது, மக்கள்தான் நாட்டுக்காக போராட்ட வேண்டும் என்றார். மக்களும் இஸ்தான்புல் போன்ற நகரங்களுக்கு திரண்டனர். இராணுவ கிளர்ச்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டைகள் மூண்டது, இருந்தாலும் நாட்டிற்காக பொதுமக்கள்  கிளர்ச்சியாளர்களை அடித்து துவம்சம் செய்தனர். ஆங்காங்கே மக்களிடமும், காவலர்களிடமும் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். “இராணுவ கிளர்ச்சி முயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட  இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 3000 பேர் கைது செய்யப்பட்டனர்” என பிரதமர் யில்டிரிம் அறிவித்தார். இரண்டு நாட்கள்வரை சலசலப்பாகவே இருந்துள்ளது. சாலைகளில் துப்பாக்கிச்சூடுகள், விமான நிலையம் முன்பு யுத்தபீரங்கிகள் நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தன. இராணுவப்புரட்சி கைக்குள் கொண்டுவரப்பட்டவுடன் இராணுவப்படை தளபதிகள் மீண்டும் வேலைக்கு திரும்பினார்கள். இராணுவ கிளர்ச்சியில் முக்கியப்புள்ளியாக இருந்தவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டன, சிலர் கொல்லவும் பட்டனர். 

 

turkey skype

 


இவ்வாறு எல்லாம் நடந்ததால் எர்டோகனுக்கு மக்களின் பலம் இந்த தேர்தலில் குறைந்திருக்கும், அவர் வெற்றிபெறுவதே சவால்தான் என்று கூறிவந்தனர். இறுதியில் அவர் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார். இந்த வெற்றியைக்கூட ஊழல் செய்துதான் பெற்றிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து பேசிய எர்டோகன் கூறியதாவது, “என்னை அதிபருக்கான கடமையை செய்ய மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதிபருக்கான அதிகார சீர்திருத்தம் விரைவாக செயல்படுத்தப்படும். இந்த தேர்தல் மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கே ஜனநாயகம் குறித்து துருக்கி பாடம் கற்பித்துள்ளது. இந்த நாட்டு மக்களான 8 கோடி பேரும் இதற்கு சொந்தக்காரர்கள்தான்". 

 

 

 

 

 

Next Story

‘நெஞ்சமே...நெஞ்சமே...’ - கடல் கடந்து காதலனை கரம்பிடித்த கரூர் பெண் 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Karur woman married to Turkish youth

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா, பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது துருக்கி நாட்டை சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளைஞரான அஹமத் கெமில் கயான் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வரும் அந்த இளைஞருக்கும், பிரியங்காவிற்கும் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் அவர்களது திருமணம் குறித்து தெரிவித்துள்ளனர். 

 

தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை  மணமகள் வீட்டில் எளிமையாக தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.  மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல், கன்னி தானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை கரூர் தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இரு தரப்பிலும் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். 

 

டெல்லியில் பணியாற்றி வரும் பிரியங்கா பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர். அதேபோல் துருக்கி இளைஞர் அஹமத் கெமில் கயானும் சுற்றுலா செல்வதில் விருப்பம் கொண்டவர். அப்படி ஒரு சமயத்தில் இருவரும் டெல்லியில் சந்தித்து நட்பாகி, 6 மாதங்களாக காதலிக்க துவங்கியதாகவும், தங்கள் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதாகவும் தெரிவித்தனர். பிரியங்காவின் குடும்பம் மனிதன், மதம், ஜாதி இவைகளை கடந்து பின்பற்றுவதால் துருக்கி இளைஞரை கரம் பிடிப்பதில் எந்தத் தடையும் வரவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் மணமகன் குடும்பத்திலும் தங்கள் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றார். மணமகனுக்கு ஐந்து மொழிகள் தெரியும் எனவும் ஆறு மாதத்தில் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்வார் என்றார் மணப்பெண்.

 

 

Next Story

பத்திரிகையாளர் கொலையில் திகில் காட்சிகள்!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
kashoggi

 

துருக்கியில் சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கி எப்படிக் கொல்லப்பட்டார் என்ற முழுமையான உண்மைகளை வெளியிடப்போவதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை அம்பலப்படுத்தி வந்தார். அவருடைய விமர்சனங்கள் காரணமாக தொடர்ந்து அவர் பழிவாங்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சவூதியை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றார்.

 

இந்நிலையில் அவர் தனது காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக, தன்னுடைய விவாகரத்து சான்றிதழைப் பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அக்டோபர் 2 ஆம் தேதி தனது காதலி ஹெட்டைஸுடன் சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பவே இல்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது. அந்தப் பத்திரிகைக்குத்தான் அவர் கட்டுரைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

ஆனால், கஷோக்கி தூதரகத்தின் பின்வழியாக வெளியேறிவிட்டதாக சவூதி அரசு கூறியது. அது பொய் என்றும், தூதரகத்திற்குள்ளேயே சவூதியிலிருந்து வந்த இளவரசருக்கு வேண்டிய ஆட்கள் அவரை கொன்று காணாமல் போக்கிவிட்டதாக துருக்கி அரசு கூறியது.
 

kashoggi


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்த விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்தும்படி சவூதியை வலியுறுத்தின. கஷோக்கி காணாமல் போன விவகாரம் சவூதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத வியாபாரம் உள்ளிட்ட பல உறவுகளை பாதிக்கும் நிலை உருவானது. உண்மை வெளிவராவிட்டால் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பல நாடுகள் அறிவித்தன.

 

இந்நிலையில்தான் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் சவூதி ஆட்களுக்கும் கஷோக்கிக்கும் இடையில் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக சவூதி அரசு கூறியது. ஆனால், இளவரசுக்கோ சவூதி அரசுக்கோ தொடர்பில்லை என்றும் அது கூறியது. இந்த அறிவிப்பை முதலில் வரவேற்ற ட்ரம்ப், பின்னர், இதை பொய் என்று கூறினார். என்ன நடந்தது என்பது முழுமையாக வெளிவர வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

 

இதற்கிடையே, சவூதி தூதரகத்தில் நடந்த படுகொலை தொடர்பான அத்தனை விவரங்களையும் அம்பலப்படுத்தப் போவதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து, சவூதி தூதரகத்திற்குள் கஷோக்கியும் அவருடைய காதலி ஹெட்டைஸும் நுழையும் சிசிடிவி படமும், கஷோக்கியின் உடைகளை அணிந்த ஒருவர் பின்வழியாக வெளியேறி துருக்கியின் பல இடங்களுக்கு தனது நண்பருடன் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

 

கஷோக்கி எப்படிக் கொல்லப்பட்டார், அவருடைய உடல் எப்படி காணாமல் போனது அல்லது எப்படி வெளியே கொண்டுபோகப்பட்டது என்ற உண்மைகள் அம்பலமாகும் நாளை உலகம் திகிலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.