ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றவர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ, தமிழக ஆலயங்களில் உள்ள சிலைகளை தொழுதார்களோ இல்லையோ, களவாடி விற்று பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.
முகலாயர்கள் இந்தியா மீது படையெடுத்த சமயத்தில் இங்கிருந்த ஆலயங்களை கொள்ளையடித்துச் சென்றதாக வரலாறு எழுதினார்கள். ஆனால், அவர்களாவது நகைகளை மட்டும் கொள்ளையடித்தார்கள். இங்கிருப்பவர்களோ சாமி சிலைகளையே கொள்ளையடித்து விற்றிருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் எதற்காக அவ்வளவு நகைகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நீடிக்கிறது. நிச்சயமாக ஒரே ஒரு சாமி சிலைக்காக அவ்வளவு நகைகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்காது என்று மட்டும் சொல்கிறார்கள்.
பெரு நாட்டில் மக்குப்பிக்கு என்ற மலை நகரில் இருந்து ஆட்சி செய்த பூர்வகுடி மன்னரை ஸ்பெயின் நாட்டவர்கள் வெற்றிகொண்டனர். சிறைப்பட்ட மன்னனோ, கருவூலத்திலிருக்கும் நகைகளை எடுத்துக்கொண்டு தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியதாக வரலாறு உண்டு.
இந்தியாவில் மன்னர்களின் அரண்மனைகளில் ஒரு கரூவூலம் இருந்திருக்கிறது. அத்தோடு, கோவில்களிலும் மிகப்பெரிய கருவூலம் இருந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்கள் அனைத்திலும் இருந்த நகைகளை கணக்கிட்டால் இந்தியா மிகப்பெரிய செல்வந்த நாடாக இருந்திருக்கும் என்று தெரியவருகிறது.
அதற்கு உதாரணம் கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி ஆலயத்தின் கருவூலங்களில் மூன்று அறைகளில் இருந்த நகைகளை மட்டுமே இன்றுவரை கணக்கிட்டு தொகையை அறிவிக்க முடியவில்லை. அதில் இன்னொரு முக்கியமான அறையைத் திறந்தால் அதில் உள்ள நகைகளின் மதிப்பை அளவிடவே முடியாது என்கிறார்கள்.
அளவிட முடியாது என்றால், மதிப்பிடுவதற்கு சிரமம் என்று அர்த்தம். இந்த ஒரு கோவில் எப்படியோ வெள்ளையரின் கண்களில் படாமல் தப்பியிருக்கிறது என்று அப்போது சொன்னார்கள்.
ஆனால், தமிழக கோவில்களில் சுமார் 1700 கோவில்களில் இருக்கிற சாமி சிலைகள் அனைத்தும் போலியானவை என்று ஒரு நீதிபதியே சொல்லும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது ஒரிஜினல் ஐம்பொன் சிலைகள் அனைத்தும் திருடப்பட்டு விலை போயிருப்பதாக சொல்ல வருகிறார். இதை வெளிக்கொண்டுவந்து சிலைத் திருட்டுகள் குறித்து விவரம் சேகரித்த ஐஜி பொன் மாணிக்கவேலை, அந்தப் பணியிலிருந்து திட்டமிட்டு நீக்கி, உளவுத்துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
பழனி கோவிலில் மூலவர் சிலையை வடிவமைத்த விவகாரத்தை தோண்டித் துருவிய மாணிக்கவேல், அந்த சிலையை உருவாக்கியதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய பொறுப்பு மாற்றப்பட்டது. ஆனாலும் நீதிமன்றமே அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
அந்த சிலை வடிவமைப்பில் தொடர்புடைய ஆளும் அதிமுக புள்ளிகள் மாணிக்கவேலுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான் தமிழகத்தில் உள்ள பல கோவில்களின் விலைமதிப்புள் பல ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டின் பின்னணியில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியது.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் சிலைத்திருட்டு குறித்து விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்க வேலை உளவுத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது அரசு. இதையடுத்து, தமிழகத்தில் சிலைகள் திருட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கோவிலில் வேலை செய்கிற பட்டர்கள் உதவியுடன், சிலைகள் படி எடுக்கப்பட்டு அதேபோன்ற சிலைகளை பித்தளையில் உருவாக்கி வைத்துவிட்டு, கோடிக்கணக்கான ரூபாய் விலைமதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை திருடியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அதை ஆமோதிக்கும் வகையிலேயே நீதிபதி மகாதேவனும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
கடவுளர்களையே திருடி விற்றவர்கள் எந்த லெவலுக்கும் செல்வார்கள். பழி, பாவங்களுக்கு அஞ்சாதவர்கள் என்றே பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.