Skip to main content

ஆடு, மாடு இருக்குன்னு சொல்ற அண்ணாமலை பில்லு எங்க இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாரே ஏன்? - இள. புகழேந்தி கேள்வி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

kl

 

கடந்த சில நாட்களாக திமுக, பாஜகவுக்கு இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திய சர்ச்சை தற்போது வரை குறைந்தபாடில்லை. தொடர்ந்து இருதரப்பும் அதுபற்றி பேசி வருகிறது. இதற்கிடையே அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாகப் பேசும்போது நான் என்ன சட்டை போடுகிறேன், என்ன காரில் வருகிறேன் இதைத்தான் பார்க்கிறார்கள். இவர்களுடைய வேலை என்ன நோட்டமிடுவதுதான் என்ற தொனியில் பேசியிருந்தார். மேலும் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அண்ணாமலையின் இந்தக் கருத்து தொடர்பாக திமுகவின் இள.புகழேந்தியிடம் நாம் கேட்டபோது, " அண்ணாமலை தேர்தலில் நின்று மக்களால் படுதோல்வி கொடுக்கப்பட்டுத் துரத்தப்பட்டவர். அவருக்கு வெற்றிபெற்று மக்களின் ஆதரவைப் பெற்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. எங்கள் அமைச்சர்கள் எல்லாம் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே எல்லா விதமான தகவல்களையும் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்கள். எனவே இவர் எங்களுக்குச் சொத்துப்பட்டியல் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. இவர் கையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் கட்டியுள்ளாரே என்று கேட்டால், அடுத்தவர்களை மிரட்டும் நோக்கத்தில் உங்களின் சொத்துப்பட்டியலை வெளியிடட்டுமா என்று கேட்பதெல்லாம் எந்த மாதிரியான அரசியல் அண்ணாமலை செய்து வருகிறார் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும். 

 

தன்னிடம் உண்மை இருக்கு, தேச பக்தன் என்று தொடர்ந்து சொல்லி வரும் அண்ணாமலை பில்லை கேட்டால் கோபப்படுவது ஏன் என்று தெரியவில்லை. தனக்கு இருக்கும் ஆடு, மாடு வரை அனைத்தையும் மக்கள் முன்பு வெளிப்படுத்தியுள்ளேன் என்று தெரிவித்திருக்கும் அண்ணாமலை, வாட்ச் வாங்கிய பில்லை மட்டும் இத்தனை முறை கேட்டும் ஏன் தர மறுக்கிறார். தன்னிடம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை, தன்னிடம் இருக்கிறது ஆனால் ஏப்ரல் மாதம் தருகிறேன், மே மாதம் தருகிறேன் என்று சொல்வதெல்லாம் யாரை ஏமாற்ற அண்ணாமலை முயல்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே சொந்தக் கதை பேசுவதை விட்டுவிட்டுக் கேட்கும் கேள்விக்கு ஒழுங்காக அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்" என்றார்.