பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள்.
“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பானை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என அந்த மாணவரை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்! ஆண்டு, 1943.
காவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.
அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம்பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ.

ஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.
75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர்.
ஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)
குடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.
குடி அரசு இதழில் எழுதிய அறிக்கையில், “அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுருவாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.

குடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப்பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.
ஒரு சில மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும் வெற்று ஆடம்பரத்துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்றைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும்.
மாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது. சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை?