தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.
இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.