‘கந்தகபூமியான சிவகாசி பக்கம் கரோனா வைரஸ் வரவே வராது..’ என்று வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு பலர் ஊரடங்கை மீறி வெளியில் நடமாட, அத்தகைய மக்களுக்குப் புரியும் விதத்தில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ”கந்தகபூமி என்றால் கரோனா தலைகாட்டாதா? அட, போங்கப்பா.. அது எல்லா இடத்திலும் பரவும்.” என்று சலித்துக்கொண்டார். பிறகு வழக்கம்போல், “பிரதமர் மோடி இந்தியாவின் காவலனாக இருந்தும், முதல்வர் எடப்பாடியார் தமிழகத்தின் காவலராக இருந்தும் கரோனாவை விரட்டியடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று பேசினார்.
தனது சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் உட்பட 1000 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை (அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்கள்) தனது சொந்த செலவில் வழங்கினார்.
சிவகாசியில் 4 பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி கடைகளுக்கு விசிட் அடித்த ராஜேந்திரபாலாஜி, “சரியான விலைக்கு காய்கறியை விற்கணும். ரேட்டை கூட்டி விற்கக்கூடாது. மாஸ்க் அணிந்துதான் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.
கரோனா அச்சுறுத்தலில் வீட்டுக்குள் மக்கள் முடங்கியிருக்கும் வேளையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோர் மக்களைச் சந்திப்பதும், அறிவுறுத்துவதும், உதவுவதும் அவசியமானதே!