Skip to main content

சிறையில் பெண்களுக்கு நாப்கின்கள் கூட கொடுப்பதில்லை - கொந்தளிக்கும் வளர்மதி!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
"சிறையில் பெண்களுக்கு நாப்கின்கள் கூட கொடுப்பதில்லை" - கொந்தளிக்கும் வளர்மதி! 


குண்டர் சட்டத்தில் 56 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்துள்ள வளர்மதியை, சேலம் அருகிலுள்ள வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்தானூரில் இருக்கும் அவருடைய வீட்டில் சந்தித்தோம்.



இந்த மூன்று முறை சிறைக்குசென்ற அனுபவம் எப்படி இருந்தது. சிறை உங்களை மாற்றியுள்ளதா? 

கடலூர் சிறையில் நான் இருந்த நேரத்தில், அங்கே பத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ளே இருந்தனர். எல்லோருமே சாராயம் காய்ச்சுவதற்காகவோ அல்லது சாராயம் விற்றதற்காகவோ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அவர்களிடம் பேசியபோது, இந்த பெண்களின் உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் முன்னர் சாராயம் காய்ச்சி விற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்தப் பெண்கள் அந்த தொழிலை கைவிட்டாலும், போலீசார் இவர்களை அந்த தொழிலை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், இதற்காக மாதாமாதம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவர் மீதும் வழக்குபோடுவதும் வாடிக்கை என்பது தெரிந்தது. பெரும்பாலும் இவர்கள் கேட்பதற்கு நாதியற்ற சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களாகவே இருக்கின்றனர்.

திருச்சி சிறை அதிகாரிகள் சட்டத்தை மதிக்கமாட்டார்கள் என்று ஏற்கனவே பல தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் உள்ளே போனபோது அதை நேரில் பார்த்தேன். நான் அங்கே அனுபவித்த கொடுமைகளைவிடவும் மற்றவர்கள் அனுபவித்த கொடுமைகள்தான் அதிகமாக என்னை பாதித்தது. விசாரணை கைதிகளாக உள்ளேவரும் பெண்கள் மனித கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திவிட்டு போடும் ரத்தம் தோய்ந்த பழைய துணிகளையும் தங்களின் கையாலேயே அள்ளி சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தும் கொடுமை இப்போதும் அங்கு உள்ளது.

திருச்சி சிறையில் உள்ளே வரும் பெரும்பாலான பெண் கைதிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சோதனைபோட்ட பின்னர்தான் உள்ளே அனுப்புகிறார்கள். பத்துபேரை ஒரே நேரத்தில் நிர்வாணமாக நிற்கவைத்து சோதனை செய்யும் கொடுமையும் இங்கே நடக்கிறது. இதுகுறித்து, குளித்தலை நீதிமன்றத்தில் இருக்கும் பெண் நடுவரிடம் நான் சொன்னபோது, என்னை வியப்பாகப் பார்த்த நீதிபதி தன்னிடம் இதற்கு முன் எந்தப் பெண்ணுமே இப்படி ஒரு புகாரை சொன்னதில்லை என்றார். உண்மையும் அதுதான், உள்ளே நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லும் அளவுக்கு எந்தப் பெண்ணுக்கும் துணிவில்லை.

இப்படி சிறைகளில் கொடுமையான தண்டனைகளை அனுபவிக்கும் பெண்கள் எல்லோருமே வயிற்றுக் கொடுமைக்காக திருடியவர்கள், சாராயம் விற்பவர்கள் என சிறுகுற்றம் செய்தவர்கள்தான். இந்த நாட்டில் இவர்கள் மட்டுமா குற்றவாளிகள்? இவர்கள் மட்டும்தான் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? வெளியில் இருக்கும் எல்லோரும் யோக்கியமானவர்களா? யாருமே தப்பு செய்வதில்லையா? தப்புசெய்த எல்லோருக்கும் இந்த காவல்துறையும், நீதிமன்றமும் சரியான தண்டனை கொடுத்துள்ளதா? என்று கோபமாக கேட்டார்.

சிறைக்குள் பெண்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா?

பெயரளவில் உணவு கிடைக்கிறது. வாரம் ஒருமுறை பேசிக்கொள்ளும் தொலைபேசி வசதிகள், அஞ்சல் அட்டைகள், சோப்பு மற்றும் உடைகள் போன்றவை பெண்களுக்கு கிடைப்பதேயில்லை. குறிப்பாக பெண்களுக்கு மிகமுக்கிய தேவையான நாப்கின்ஸ் கூட சிறை நிர்வாகம் கொடுப்பதில்லை. இதுகுறித்து நான் கேட்டதற்கு, இரண்டு ஆண்டுகளாகவே ஸ்டாக் இல்லை என்றே சொல்வதாக கூறினார்கள். சிறையில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் பழைய துணிகளை கிழித்துத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். சிறையிலிருக்கும் பெண்களுக்காக வெளியில் உள்ள சமூகநல அமைப்புகள் இதுபோன்ற உதவிகளை செய்யவேண்டும்.



அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து..

மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை செய்துகொள்ளவதாக இருந்தால், தேர்வு முடிவுகள் வந்ததுமே தற்கொலை செய்துகொண்டிருப்பார். அவர் அப்படிச் செய்யவில்லை.

நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களுக்கு எதிராக வந்ததுமே, அ.தி.மு.க அரசு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வழக்கு தொடுத்தார்கள். பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டார்கள். மத்திய அரசும் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும் என்று இங்குள்ள பா.ஜ.க தலைவர்கள் எல்லோருமே சொன்னார்கள்.

மத்தியில் ஆளும் அரசின் ஆலோசனையின் பேரில் மாநில அரசு, சட்டம் இயற்றி மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளது. இதை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், இந்த அரசியல்வாதிகள் சொல்வதை செய்வார்கள் என்றும் அனிதா உள்ளிட்ட பல தமிழக மாணவர்கள் நம்பினார்கள். எல்லா சூழ்நிலைகளிலுமே கைவிடப்பட்ட நிலையில்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றார்.

திருமணம் பற்றி என்ன முடிவு செய்துள்ளீர்கள்?

நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். அதுவும், காதலித்துதான் திருமணம் செய்வேன்.

- பெ.சிவசுப்ரமணியம்

சார்ந்த செய்திகள்