Skip to main content

சசிகலா கட்டளையால் உறவினர்கள் அதிர்ச்சி... சசி எடுத்த அதிரடி முடிவு... பல்ஸ் பார்க்கும் இ.பி.எஸ்.

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
sasikala

 

 

ஜெயிலைவிட்டு இந்த வருடம் முடியும்வரை வருவதில்லை என முடிவெடுத்துள்ளாராம் சசிகலா. “சிறையில் இருந்து வெளிவரும்போது பழைய சசிகலாவாக நான் இருக்கமாட்டேன்'' என சபதம் செய்திருப்பதாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

டி.டி.வி. தினகரன், திவாகரன், சுதாகரன், இளவரசி என சொந்த பந்தங்கள் புடைசூழ அவர்கள் ஒட்டுமொத்த அதிமுகவையும் மிரட்ட, சசிகலா அந்த மிரட்டெலுக்கெல்லாம் தலைமை தாங்க என முன்பிருந்த சூழலை விட்டு முழுவதுமாக வெளியே வர சசிகலா தீர்மானித்துள்ளார்.

 

தனது சொந்த பந்தங்களுடன் பேசும் சசிகலா, “எனக்கு அதிமுக என்கிற கட்சிதான் முக்கியம். அந்த கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக எனது சொந்த பந்தங்கள் இருப்பதாக பொதுமக்கள் நம்புகிறார்கள். எனவே நீங்கள் எல்லோரும் உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்துக்கொண்டு ஒதுங்கியிருங்கள்'' என சசிகலா கட்டளையிட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவின் சொந்த பந்தங்கள் தினகரன் உட்பட யாரும் பொதுவெளியில் பேச மறுக்கிறார்கள் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

 

eps ops

 

இதற்கிடையே, ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே சசிகலா கட்டிவரும் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பில்டிங் பர்மிஷன் தரவில்லை. அந்த வீட்டு கட்டுமானத்தை அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என சசிகலா கூறிவிட்டார். இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் சசிகலாவிடம் நல்ல புரிதலோடு இருக்கிறார்கள். ஓ.பி.எஸ்.க்கு எதிராக செயல்பட்டு வரும் வேலுமணியும், தங்கமணியும்கூட சசிகலாவிடம் நல்ல டீலிங்குடன் இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக சசிகலாவை ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பது இ.பி.எஸ்.ஸுக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் புரியவில்லை.

 

சசிகலா இல்லாவிட்டால், அதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூறு தொகுதிகளில் தோல்வியடையும் சூழல் ஏற்படும். அடுத்து வரக்கூடிய ஜனாதிபதி தேர்தல் போன்ற தேர்தல்களில் மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை பெற முடியாமல் போகும். எனவே சசிகலாவை அதிமுகவில் இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது என சசிகலாவிடம் பாஜக பேசி வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகளில் ஆடிட்டர் குருமூர்த்தியை சேர்க்கவில்லை. எனவே சசிகலாவுக்கும், பாஜகவிற்கும் இடையே என்ன நடக்கிறது என ஓ.பி.எஸ்.க்கும் இ.பி.எஸ்.க்கும் தெரியவில்லை. அதனால் கே.சி. வீரமணி, ஜெயக்குமார் போன்ற அமைச்சர்களை விட்டு சசிகலாவுக்கு எதிராக பேச வைத்து பாஜகவின் சசிகலா ஆதரவு நிலையை பல்ஸ் பார்த்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் சசிகலாவுக்கு எதிராக எந்த குரலும் கொடுக்கவில்லை என சசிகலா விவகாரத்தை பற்றி விளக்குகிறார்கள் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள்.