மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணி கட்சியின் தலைமையான அதிமுக மாநிலங்களவையில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதே?
நாங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். அவர்களின் பல அரசியல் அணுகுமுறைகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
இப்போது புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவை பாஜகவிடம் நிரந்தரமாக சரணடைய செய்து விட்டார்கள். இது மனசாட்சியற்ற அரசியல்.
இந்த சட்டம் குறித்து 2014 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அப்போது மோடியா? லேடியா? என ஜெயலலிதா அம்மா அவர்கள் பாஜகவுடன் நேரிடையாக மோதினார். அந்த சமயத்தில் அவர்களின் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த கருத்தை கண்டித்து பேசினார். இது மதச்சார்பற்ற நாடு. அகதிகளாக வருபவர்களிடம் பேதம் பார்க்க கூடாது என பரப்புரையில் குறிப்பிட்டார்.
இன்று அம்மாவின் கொள்கைக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி ஏற்கனவே பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை தமிழர்களை பொருத்தவரை கடந்த 2016ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து ஜெயலலிதா வலியுறுத்தினார். அதன்பிறகு நானும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறாரே?
ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் இச்சட்டத்தை இவர்கள் ஆதரித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் பொன்மனச் செம்மல் MGR ன் செல்லங்கள். ஜெயலலிதா அம்மா அவர்களின் அன்பை பெற்றவர்கள்.
இன்று ஒரு பாதகத்திற்கு துணை போய் விட்டு, எதையாவது பேசி தப்பிக்க நினைப்பது நியாயம் தானா? மோடியின் கருத்து தான் அதிமுக கருத்தா? அமித் ஷா சொன்னால், அம்மா பேசுவதாக அர்த்தமா? அதிமுக தொண்டர்களை திருப்திப்படுத்த , சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என கருத வேண்டியுள்ளது.
இவர்கள் ஈழத் தமிழர்கள் விஷயத்திலாவது உறுதி காட்டி, இதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் வெளிநடப்பாவது செய்திருக்கலாமே...
இன்று தமிழக மக்களிடமிருந்து அதிமுக அந்தியப்பட்டு நிற்கிறது. போதாக்குறைக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்ற மூளை வீங்கிகளின் உளறல்கள் அதிமுகவை மேலும், மேலும் பலஹீனப்படுத்துகிறது.
பாவம் அதிமுக தொண்டர்கள். அவர்கள் குமுறுகிறார்கள். களத்தில் மக்களை சந்திப்பவர்கள் அவர்கள் தானே. பாஜகவை திருப்திபடுத்த, அதிமுகவை படுகுழியில் தள்ளக் கூடாதல்லவா...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்துகின்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறதே?
இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுதும் மாணவர்கள் கிளர்ச்சி செய்வது வரவேற்க்கத்தக்கது. அவர்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள். அவர்கள் அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கவே போராடுகிறார்கள்.
JNU, ஜாமியா மில்லியா, அலிகர் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய போலீஸ் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இதயத்துடிப்புகள் மாணவர்கள் தான். அவர்களின் குரல்வளையை நெறித்தால் நாடு தாங்காது.
மாணவர் போராட்டங்களில் ரவுடிகளை இவர்களே ஏவிவிட்டு, மாணவர் போராட்டங்களை வன்முறை களமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. ஃபாஸிஸம், சாதி, மத, மொழி பிரிவினை ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராடுகிறார்கள்.
மாணவர் போராட்டங்கள் ஆட்சி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் மாணவர் போராட்டம் வலுத்துள்ளது தமிழகத்தின் கொள்கையை வெளிக்காட்டுகிறது. அவர்கள் எரிமலையாக எழுந்து குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.
விடுமுறைகள் மூலம் அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் கூலிக்காக போராட வில்லை. கொள்கைக்காக போராடுகிறார்கள்.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக அதிமுக எம்பி முகமது ஜானை ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜானுக்கு, சிறுபான்மை சமூகத்திற்கான ஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே MP வாய்ப்பு கிடைத்தது என்பது பலரும் அறிந்ததே. அவர் ஃபாஸிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதை, அவர் ஊர் மக்கள் விரும்பவில்லை. எனவே, ஜமாத் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியிருக்கிறார்கள். இது அவர்கள் கோபத்தின் ஒரு பகுதி மட்டுமே.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் திமுகவை கண்டித்து 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
திமுக ஒரு பலமான திராவிட கட்சி . மாநில கட்சிகளிலேயே வலிமையான முறையில் அரசியலை முன் வைக்கும் கட்சி. அதற்கு எதிராக தமிழகத்தில் பாஜக போராட்டம் நடத்தும் என்பது நகைப்புக்குரியது. மயிலும், வான்கோழியும் ஒன்றல்ல. கோடுகள் இருப்பதாலேயே பூனைகள் புலிகள் ஆகி விட முடியாது.
அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்களை, அமித்ஷாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் வெல்ல முடியாது. இது ஒன்றும் உத்தரப் பிரதேசம் கிடையாது. இது தமிழ்நாடு. தந்தை பெரியார் நாடு.
திமுக அறிவித்துள்ள பேரணியில் உங்கள் கட்சி கலந்து கொள்ளுமா?
திமுகவின் முயற்சி பாராட்டத்தக்கது. திமுக அழைப்பு கொடுத்தால், நாங்கள் அந்த பேரணியில் பங்கெடுப்போம். கொள்கை பிரச்சனைகளில் நாங்கள் தி மு க வின் நிலைபாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை ஆதரவு கொடுத்து, அவர்களோடு கைக்கோர்த்து செயல்பட்டிருக்கிறோம்.
தமிழக முதல்வர் உங்கள் மீது சாப்ட் கார்னர் வைத்திருப்பவர் என சொல்லப்படுகிறது. இது விஷயமாக அவருக்கு நீங்கள் ஏதாவது கோரிக்கை வைத்திருக்கிறீர்களா?
ஏதோ ஒரு நெருக்கடிக்கு ஆளாகி, அரசியல் சூழலுக்கு கட்டுப்பட்டு இச்சட்டத்திற்கு ஆதரவளித்து விட்டோம் என்று கூட உள்ளுக்குள் அவர்கள் கூறிக் கொள்ளலாம். சமூக நீதி, மதச்சார்பின்மை மீது மனசாட்சியுடன் அவர்களுக்கு அக்கறை இருந்தால், இவ்விரு இச்சட்டங்களையும் தமிழகத்தில் அமல் படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமார் பீஹாரில் இதை அமல்படுத்த மாட்டோம் என்று விட்டார். நடுநிலையாக உள்ள ஒரிஸா முதல்வர் நவீன் பட் நாயக்கும் இப்படி அறிவித்து விட்டார். ஏற்கனவே வங்க புதல்வி மம்தா பானர்ஜியும், கேரள மாவீரன் பிரணாயி விஜயறும், புதுச்சேரியின் தங்கத் தமிழர் நாராயணசாமியும் தைரியமாக அறிவித்துள்ளனர்.
இதை தமிழக முதல்வரிடமும் எதிர்பார்க்கிறேன். அவர் MGR ன் சிஷ்யர், அம்மாவின் உண்மை தொண்டர் என்றால் இதை செய்ய வேண்டும். அதை தமிழ்நாடு வரவேற்கும்.