Skip to main content

இந்தியாவை ஜெர்மனியாக மாற்ற அனுமதிக்க முடியாது - ப.சிதம்பரம் தாக்கு!

Published on 24/12/2019 | Edited on 30/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சென்னையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது " நேற்று புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் என்ன சொல்லியிருக்கிறார், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதை பற்றி கூறியிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்கள். அதை யாரும் மறுக்க முடியாது. முதல்கட்டமாக அதை அஸ்ஸாமில் செய்தார்கள். இதற்காக 1600 கோடியை செலவழித்தார்கள். அதற்கென்று தனி அதிகாரியை நியமித்து அவருக்கு எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்தார்கள். உச்சநீதிமன்றத்தின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது.

fg

 

இப்போது அதனுடைய நிலைமை என்ன. அஸ்ஸாம் மாநில மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அஸ்ஸாம் அரசே அதனை நிராகரித்துள்ளது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியது நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிவான ஒரு செய்தியை மறுக்கிறார் என்றால் அதைவிட ஒரு வருந்ததக்க செய்தி வேறொன்றும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் பேசும்போது இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்று ஆயிரம் மடங்கு சரியானது என்று கூறியுள்ளார். அதே நாளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேசிய உள்துறை அமைச்சர் வரும் 2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் குடியேறிய அந்நிய சக்திகளை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். இந்த குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அரசியல் சாசனத்தின் 14வது பிரிவுக்கு நேர் எதிரானது. அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு வரட்டும். குறிப்பிட்ட மூன்று நாடுகளை தேர்வு செய்கிறார்கள். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மூன்று நாடுகளும் அண்டை நாடுகள்தான். அப்படியென்றால் இலங்கை, மியான்மர் நாடுகள் அண்டை நாடுகள் இல்லையா? 

இந்த நாடுகளை ஏன் இதில் சேர்க்கவில்லை. இதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் இயல்பாகவே வருகிறது. குறிப்பிட்ட ஆறு மதத்தினரை இதில் சேர்ந்துள்ளார்கள். ஆனால் இஸ்ஸாமியர்களை இதில் ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள், ஆனால் இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.  கிறிஸ்துவர்களுக்கு அனுமதி உண்டு என்கிறார்கள், பூட்டானில் இருந்து வரும் கிருஸ்துவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதில் அவர்கள் அடைய போகும் ஆதாயம் என்ன. இவர்கள் உள் நோக்கத்தோடு செயல்படுவதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இந்துக்களை அனுமதிப்போம், ஆனால் இலங்கை இந்துக்களை அனுமதிக்க மாட்டோம். கிருஸ்துவர்களை அனுமதிப்போம், ஆனால் பூட்டான் கிருஸ்துவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பது எந்த விதத்தில் சரியானது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பலமுறை கேள்வி எழுப்பினேன். ஆனால் உள்துறை அமைச்சர் எந்த கேள்விக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. அவர் அதை மாற்றுவேன், இதை மாற்றுவேன் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். இந்தியாவை துண்டாட காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவை ஜெர்மனியாக்க  விட மாட்டோம்" என்றார்.