ராஜ்யசபா தேர்தலில் மூன்று இடங்களை எளிதாக அதிமுக கைப்பற்றும் நிலையில், ஒரு இடத்தைக் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்காட்டுகிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இதற்காக, எடப்பாடியை சந்தித்து பேச தனது சகோதரர் சுதீசை அனுப்பி வைத்தார் பிரேமலதா. சந்திப்பும் நடந்தது. ஆனால், விரக்தியோடு திரும்பியிருக்கிறார் சுதிஷ் என்கிறார்கள் அதிமுகவினர்.
இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர்கள், ‘’ லோக்சபா தேர்தலின் போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழியின்படி ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குங்கள் என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சுதீஷ். அதற்கு எடப்பாடியோ, அப்படி எந்த அக்ரிமெண்டும் நாம் போட்டுக்கொள்ளவில்லையே. இன்னும் சொல்லப் போனால், லோக்சபா தேர்தலில் உங்களுக்கான லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை பேசியதே பாஜக தலைமைதான். அப்படியிருக்க ராஜ்யசபா விசயத்தில் உங்களுக்கு எப்படி உறுதி தந்திருக்க முடியும்?
ஒரு பேச்சளவில் ராஜ்யசபா தேர்தல் வந்தால் பார்த்துக்கலாம்னு சொல்லியிருந்தாலும் கூட, அதனை தருவதற்கு நான் மட்டுமே இப்போ முடிவெடிக்க முடியாது. நீங்கள் என்னை சந்திப்பதற்கு முன்பே, உங்களின் எதிர்பார்ப்பை பற்றி கட்சியின் சீனியர்களிடம் தெரிவித்திருக்கிறேன். அவர்களோ, இந்த முறை 3 இடங்களிலும் அதிமுகதான் போட்டிப்போட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடாது என ஒரே குரலில் வலியுறுத்துகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? அதனால், ராஜ்யசபா சீட்டை எதிர்ப்பார்க்காதீர்கள். சட்டமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லியிருக்கிறார். சுதீஷ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எடப்பாடி அசைந்து கொடுக்கவில்லை! என்கின்றனர்.
தேமுதிகவின் எதிர்பார்ப்பை எடப்பாடி நிராகரித்துவிட்ட நிலையில், விரக்தியுடன் திரும்பியுள்ளார் சுதீஷ்! இந்த நிலையில், தேமுதிகவுடன் எந்த அக்ரிமெண்டும் போட்டுக்கொள்ளவில்லை என அமைச்சர் ஜெயக்குமாரை சொல்ல வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் நொந்து போயிருக்கிறார் பிரேமலாதா. இந்நிலையில், அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற கடைசி நேர முயற்சியாக பாஜக தலைமையின் உதவியை நாடலாமா? என விஜயகாந்த் குடும்பத்தில் ஆலோசனைகள் நடந்துள்ளன.