Skip to main content

ஜெ. வாக்குறுதியை மதிக்காத எடப்பாடி! போராட்டத்தில் ‘புதுவாழ்வு’ பணியாளர்கள்!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
img 1

 

 

 

“கிராமப்புறங்களிலுள்ள ஏழ்மையை நீக்குவதற்காக ‘புதுவாழ்வு’ என்னும் ஒரு புதுமையான திட்டம் உலகவங்கி கடனுதவியுடன் எனது முந்தைய ஆட்சிகாகலத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்திட்டம், இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையும். எனவே, 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘இரண்டாம் புதுவாழ்வுத்திட்டம்’ உலகவங்கியின் உதவியுடன் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்னும், ஒரு சில மாதங்களில் இதற்கான அனுமதியை உலகவங்கி வழங்கிவிடும். தற்போது, புதுவாழ்வு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டாவது திட்டத்திலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்”- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டு வருடங்களுக்கு முன் செய்த பரப்புரைதான் இது. ஆனால், இன்னமும் வேலை கிடைக்காததால் வறுமையும் வெறுமையும் சூழ சென்னை வள்ளுவர் கோட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (Tamilnadu Corporation For Development of Women Ltd) அன்னை தரேசா மகளிர் வளாகத்திலுள்ள ‘புதுவாழ்வு’ திட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் தமிழகம் முழுக்க உள்ள புதுவாழ்வு திட்ட பணியாளர்கள்.
 

 

mother


போராட்டத்திற்கு வந்திருந்த கோவை மாவட்ட புதுவாழ்வு உதவித்திட்ட மேலாளர் உமாமகேஸ்வரி நம்மிடம், “கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களின் வறுமையை ஒழிப்பதுதான் எங்களது பணி. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களை இனம்கண்டு தொழில்வளர்ச்சி பயிற்சி மற்றும் வாழ்வாதார கடன்களை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறோம். பெண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி செய்திருக்கிறோம். இந்த சேவைப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சியைவிட கடுமையாக கர்நாடகாவிலுள்ள ஸ்ரீஜன் ஏஜென்சி மூலம் நடத்திய எழுத்துத்தேர்வில் தேர்ச்சிபெற்றுத்தான் 2006 ஆம் ஆண்டுமுதல் பதவியில் சேர்ந்தோம். 30 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப்பணியில் சேர்ந்தேம்.

10 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையைப்போக்கும் பணியிலிருந்த எங்களுக்கு திடீரென்று மாற்றுப்பணி வழங்கவில்லை என்றால் நாங்கள் எங்கே போவோம்? இப்பணியில் இருக்கும்போதே இதேத்துறையில் வேறு சில வேலைவாய்ப்புகளும் எங்களுக்கு கிடைத்தன. ஆனால், அந்த வேலைகளுக்கு போகக்கூடாது என்று புதுவாழ்வுத்திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி தடுத்தார்கள். அப்படி, தடுக்காமல் போயிருந்தால்கூட வேறு பணிக்காவது போயிருப்போம். அதையும் தடுத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா சொன்னதுபோல இரண்டாம் புதுவாழ்வுத்திட்டத்திலும் வேலை கொடுக்காமல் புதிதாக ஆட்களை நியமனம் செய்வதற்கான விளம்பரங்களை செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு” என்கிறார் வேதனையுடன்.
 

2


“என்னம்மா… வறுமைய ஒழிக்கிற ‘புதுவாழ்வுத்திட்ட’ ஒருங்கிணைப்பாளாரா இருந்துப்புட்டு இப்போ… நீங்களே வறுமையில இருக்கீங்கபோலிருக்கு’ ன்னு அக்கம்பக்கத்தினர் கேலி கிண்டல் பண்ற அளவுக்கு எங்களோட வாழ்க்கை ஆகும்னு நினைச்சுக்கூட பார்க்கல. இதனாலேயே, சில பணியாளர்கள் மன உளைச்சலில் செத்துக்கிட்டிருக்காங்க. அம்மா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத எடப்பாடி அரசு அம்மா வழியில் ஆட்சி நடத்துறோம்னு சொல்றது வேடிக்கையா இருக்கு”என்று குமுறிவெடிக்கிறார் தூத்துக்குடி மாவட்ட புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலபுஷ்பம்.

அனைத்து புதுவாழ்வுத்திட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் புதுவாழ்வுத்திட்ட அணித்தலைவருமான கஸ்பர் நம்மிடம், “அ.தி.மு.க. முதன்முதலில் ஆரம்பித்த புதுவாழ்வுத்திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் ‘வாழ்ந்து காட்டுகிறோம்’ என்கிற பெயரில் மிகச்சிறப்பாக செயல்படுத்தியது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு புதுவாழ்வுத்திட்டமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சி அளவிலான கூட்டமைப்பு புதுவாழ்வுத்திட்டத்திற்கு 520 கோடியை ஒதுக்கியதை ஏழை எளிய மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி கொடுத்து 1120 கோடியாக நிதியை உயர்த்தியிருக்கிறோம். லட்சக்கணக்கில் அரசுக்கு லாபத்தை ஈட்டுக்கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில், தொடங்கப்பட்ட புதுவாழ்வுத்திட்டத்தை பலமாநிலங்கள் ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

மாவட்ட திட்ட மேலாளர், உதவித்திட்ட மேலாளர்கள், அணித்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களைக்கொண்ட இத்திட்டத்தை அரசாங்கம் முடக்க நினைக்கிறது. இதை, எதிர்த்து விருந்தினர் மாளிகை முன்பாக மூன்றுமுறை உண்ணாவிரதப்போராட்டம் இருந்தோம். 10 முறைக்குமேல் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து மனுகொடுத்துவிட்டோம். நாங்கள் அவரை சந்திக்கப் போனால் எங்கள் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து எங்களுக்கு பணி வழங்கச்சொல்லி கடுமையாக பேசுவார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப்போய்ப் பார்த்தால் வேலையில்லை என்று உதட்டை பிதுக்குவார்கள். இது, தொடர்கதையாக இருப்பதால்தான் 2018 ஜூன் -26 ந்தேதி காலையிலிருந்து தமிழகத்திலுள்ள சுமார் 1500 க்குமேற்பட்ட பணியாளர்கள் புதுவாழ்வுத்திட்ட மேலாண்மை இயக்குனரிடம் மனு கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
 

3


அனைத்து புதுவாழ்வுத்திட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ஆர்.தமிழரசு நம்மிடம், “2017 ஜூன் -30 ந்தேதியுடன் புதுவாழ்வுத்திட்டம் நிறைவுபெற்றது என்று மாவட்ட திட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்கள். ‘புதுவாழ்வுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டாவது திட்டத்திலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இரண்டாம் புதுவாழ்வுத்திட்டத்தில் பணியமர்த்தக்கோரியும் இ.எல். சரண்டர் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு புதுவாழ்வு மாநிலத்திட்ட மேலாண்மை இயக்குனர் பிரவின் பி. நாயர் ஐ.ஏ.எஸ். அவர்களை கடந்த 2017 ஜூன் சந்தித்து மனு கொடுத்தோம். அப்போது, டி.என். எஸ்.ஆர். எல்.எம். எனப்படும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், டி.என்.சி.டி. டபுள்யூ. எனப்படும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு, பி.டி.எஸ்.எல்.பி. எனப்படும் சுனாமிக்கு பிந்தய நீடித்த வாழ்வாதாரத்திட்டம், டி.டி.யூ.ஜி.கே.ஒ. எனப்படும் தீனதயாள் உபாதய கிராமிக் கெளசல்யா யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் பணி வழங்குவதாக உறுதியளித்து கடிதமும் கொடுத்தார் மேலாண்மை இயக்குனர் பிரவின் பி.நாயர் ஐ.ஏ.எஸ்.

இதில், பி.டி.எஸ்.எல்.பி., டி.டி.யூ.ஜி.கே.ஓ. திட்டங்களில் மட்டும் சுமார் 220 பேரை மட்டுமே நியமித்தவர்கள் டி.என். எஸ்.ஆர்.எல்.எம்., டி.என்.சி.டி. டபுள்யூ., திட்டங்களில் மீதமுள்ள 26 மாவட்டங்களிலுள்ள 1500 க்குமேற்பட்ட புதுவாழ்வு பணியாளர்களை நிரப்பவில்லை. மாறாக, 2018 பிப்ரவரி மாதம் இரண்டாவது புதுவாழ்வுத்திட்டத்திற்கு பணியாளர்கள் தேர்வு செய்வதற்கான தனியார் ஏஜென்சி தேவை என்று அழைப்பாணை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் ஊரகவளர்ச்சித்துறை. ஏற்கனவே, தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று அதில் அனுபவம் வாய்ந்த நாங்கள் பணியில்லாமல் இருக்கும்போது புதியவர்களை எடுப்பது என்ன நியாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். நீதிமன்றமும் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள சூழலில் மீண்டும் 2018 மே மாதம் புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஏஜென்சி தேவை என மீண்டும் அழைப்பாணை விளம்பரம் கொடுத்திருக்கிறது ஊரக வளர்ச்சித்துறை.
 

 

 

எஸ்.ஆர்.எல். எம். திட்டத்தில் 520 பணியிடங்கள் இருக்கின்றன என்ற திட்ட மேலாண்மை இயக்குனர் தற்போது வெறும் 257 பணியிடங்கள்தான் இருக்கின்றன என்று சொல்கிறார். இதன்மூலம், எங்களுக்குள்ளேயே மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. அதனால், அனைவருக்கும் பணி வழங்கக்கோரிதான் போராடி வருகிறோம்” என்கிறார் கோரிக்கையாக.

“இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், தர்மபுரி எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, விருதாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் என அவரவர்களுக்கு தெரிந்த அத்தனை எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து எங்களது கோரிக்கையை வைத்துவிட்டோம். மற்றத்துறை அமைச்சர்களிடமும் முறையிட்டுவிட்டோம். எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள்கூட சட்டமன்றத்தில் எங்களது பிரச்சனை குறித்து பேசவில்லை” என்று குமுறிவெடிக்கிறார்கள் போராட்டத்திலுள்ள புதுவாழ்வுத்திட்ட பணியாளர்களான விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், அனைத்து புதுவாழ்வுத்திட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தின் கடலூர் மாவட்டச்செயலாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் சக்திவேல் ஆகியோர் குமுறலாக.
 

 

PRAVEENNAIR
திட்ட மேலாண்மை இயக்குனர் பிரவின் பி.நாயர் ஐ.ஏ.எஸ்.சின் உறுதிமொழி கடிதம்


கோரிக்கைப்போராட்டம் குறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் புதுவாழ்வு திட்ட மேலாண்மை இயக்குனர் பிரவின் பி.நாயரை தொடர்புகொண்டபோது, அவர் மீட்டிங்கில் இருக்கிறார் கூடுதல் இயக்குனர் செல்வராஜனிடம் பேசுங்கள் என்றார்கள். கூடுதல் இயக்குனர் பி.செல்வராஜனை தொடர்புகொண்டு கேட்டபோது, “புதுவாழ்வு திட்டம்-1 வறுமை ஒழிப்புத்திட்டம். புதுவாழ்வு திட்டம்-2 பிசினஸ் புரமோஷன் அதாவது, தொழில் முன்னேற்றம் அடையச்செய்வது. இரண்டும் மாறுபட்டது. அதனால்தான், புதிய பணியாளர்களை தேர்வு செய்ய ஏஜென்சிகள் தேவை என கால்ஃபர் செய்திருக்கிறோம். புதுவாழ்வுத்திட்டம்-1 ல் இருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்கிறார் அரசு எந்திரத்தின் குரலாய்.
 

ve


தி.மு.கவால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதாலேயே மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அம்மாவின் ஆட்சியைக் கொடுக்கிறோம் என்கிற இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கூட்டணியோ ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட புதுவாழ்வு பணியாளர்களையே வீட்டுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.