இரண்டு நூற்றாண்டுகள் கொரியாவில் ஜோஸியோன் பேரரசு அமைதியானஆட்சியை நடத்தியது. கலை, கலாச்சாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று மக்கள் வாழ்க்கை செழித்தது. ராணுவத்துக்கு வேலையே இல்லை. யுத்தப்பயிற்சிகளும் இல்லை. இதை பக்கத்திலிருந்த ஜப்பான் கவனித்துக்கொண்டிருந்தது.
1592 ஆம் ஆண்டும், 1597 ஆம் ஆண்டும் இருமுறை அடுத்தடுத்து கொரியா மீது ஜப்பான் ராணுவம் போர்தொடுத்தது. டொயோடோமி ஹிடோயோஷி என்ற மன்னர் கொரியாவை கைப்பற்றினால், அதன் வழியாக சீனாவையும் இந்தியாவையும் கைப்பற்றலாம் என்று நினைத்தார்.
ஹிடேயோஷியின் பூர்வீகம் குறித்து ரொம்பக் குறைவாகவே குறிப்புகள் இருக்கின்றன. இவருடைய அப்பா ஜப்பான் ராணுவத்தில் காலாட்படையில் இருந்தவர். ஹிடேயோஷிக்கு 7 வயதானபோது அப்பா இறந்துவிட்டார். ஒரு ஆலயத்தில் தான் ஹிடேயோஷி படித்தார். ஆனால், அங்கு இருக்கப் பிடிக்காமல் சாகச வாழ்க்கைக்காக வெளியேறினார். ஜப்பானின் சுருகா மாகாணத்தின் மன்னரான மட்சுஷிடா யுகிட்சுனாவின் ராணுவத்தில் சேர்ந்தார். பல போர்களில் பங்கேற்ற அவர், மன்னர் கொடுத்த பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
ஹிடேயோஷி
ஒடிப்போன ஹிடேயோஷி 1558 ஆம் ஆண்டு ஓடா நெபுநாகா என்ற மன்னரின் படையில் சேர்ந்தார். பின்னர், மன்னருக்கு நெருக்கமான அதிகாரியாக உயர்ந்தார். பின்னர் நடந்த ஒகேஹாமா யுத்தத்தில் நொபுநாகா வெற்றி பெற்றபோது அவருக்கு முக்கியமான ஆளாக ஹிடேயோஷி இருந்தார். 1561ஆம் ஆண்டு ஹிடேயோஷி அஸானோ நாககட்சு என்பவரின் வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்டார். நொபுங்கா மன்னரிடம் வேலை செய்யும்போதே, தனது தம்பி டோயோடோமி ஹிடேநாகா உள்ளிட்ட சிலருடன் சுநோமாடா கோட்டையை கட்டினார். அந்தக் கோட்டை ஒரே நாளில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு பல நாட்கள் ஆகியிருக்கும் என்று சொல்கிறார்கள். ஹிடேயோஷியின் இந்த உழைப்பு, அவரை நொபுநாகா மன்னருடன் மேலும் நெருக்கமாக்கியது. எதிரியின் பகுதியில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையிலிருந்து மவுண்ட் இனாபா குன்றுக்கு ரகசிய வழியைக் கண்டுபிடித்தார். அங்கு நொபுநாகாவின் ராணுவத்தில் பெரும்பகுதி சரணடைந்துவிட்டது. ஆனாலும், எதிரிகளுடன் சமரசம் பேசி, எதிரி படைகளில் இருந்த சாமுராய்களை நொபுநாகாவிடம் கொண்டுவந்து சேர்த்தார். அவர்களில் முக்கியமான அறிஞர்கள் பலரும் இருந்தனர்.
1567ஆம் ஆண்டு இனபயாமா கோட்டையை கைப்பற்றியதிலும் ஹிடேயோஷியின் முயற்சி பெரிய அளவில் இருந்தது. விவசாயக் கூலிக் குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும், அவருடைய திறமையை மதித்து, நொபுநாகா மன்னர் அவரை தனது முக்கியமான தளபதிகளில் ஒருவராக நியமித்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது பெயரை ஹஷிபா ஹிடேயோஷி என்று மாற்றிக் கொண்டார்.
நொபுநாகாவின் தலைமையின் கீழ் ஜப்பானை ஒருங்கிணைத்தார் ஹிடேயோஷி. மன்னருக்குப் பிறகு பொறுப்பை ஏற்ற அவர், கொரியாவை வென்று, சீனாவையும் இந்தியாவையும் ஜெயிக்கும் லட்சியத்தை கையில் எடுத்தார். 1592 ஆம் ஆண்டு கொரியா மீது முதல் தாக்குதல் தொடங்கியது.
உகிடா ஹிடேய்யி என்பவரின் தலைமையில் போர் தொடங்கியது. ஜோஸியோன் பேரரசின் தலைநகரான சியோல் எளிதில் வீழ்ந்தது. அங்கிருந்து மற்ற பகுதிகளைக் கைப்பற்ற ஆலோசனை நடைபெற்றது. ஐந்தே மாதங்களில் கொரியாவின் பல பகுதிகளை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. கொரியாவின் கலாச்சார பெருமைவாய்ந்த சின்னங்கள் நாசப்படுத்தப்பட்டன. மஞ்சூரியாவை நோக்கி ஜப்பான்படை முன்னேறியது. இந்தச் சமயத்தில் கொரியாவின் மன்னர் சியோன்ஜோ சீனாவுக்கு தப்பினார். சீன ராணுவத்தின் உதவியைக் கேட்டார்.
இதையடுத்து, 1593 ஆம் ஆண்டு, மிங் பேரரசின் மன்னரான வான்லி சீன ராணுவத்தை அனுப்பினார். 43 ஆயிரம் சீன வீரர்கள் பியாங் யாங்கை தாக்கிக் கைப்பற்றினர். பின்னர் முன்னேறி சியோலை சுற்றி வளைத்தனர். நீடித்த யுத்தத்தில் கொரியாவின் கப்பல்படையும் பங்கேற்றது. கொரியாவின் கப்பல்படை தளபதி யி சுன் சின் தலைமையில் ஜப்பானின் கப்பல்படை முழுக்க அழித்தொழிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் ராணுவத்தினரை இறக்க முடியாமல் ஜப்பானியர் தோற்றனர்.
இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆண்டுக்கணக்கில் நடைபெற்றது. ஆனால், இருதரப்பினருமே தங்கள் தலைவர்களுக்கு உண்மையைச் சொல்லத் தவறினர். இந்நிலையில்தான் ஜப்பான் மன்னர் ஹிடேயோஷி கோபயாகாவா ஹிடேகி என்பவர் தலைமையில் அடுத்த படையை கொரியாவுக்கு அனுப்பினார். ஆனால், முதல் படையெடுப்பில் கிடைத்த வெற்றிகூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. கொரியாவின் கொரில்லா ராணுவத்தினர் ஜப்பான் படையினரை பல முனைகளிலும் திடீர் திடீரெனத் தாக்கினர். இதை ஜப்பான் படையினரால் சமாளிக்க முடியவில்லை. கடைசியில் சோர்ந்து போன ஜப்பானியர்கள் தாக்குதலை முடித்துக் கொண்டு நாடு திரும்ப முடிவெடுத்தனர்.
இந்த இரண்டு தாக்குதல்களிலும் கொரியாவின் புராதன பெருமைமிக்க இடங்களும், புத்த ஆலயங்களும், அரண்மனைகளும் அழிக்கப்பட்டதுதான் சோகம். ஜப்பானியர் திரும்பும்போது, சுமார் ஒரு லட்சம் முதல், இரண்டு லட்சம் வரை கொரியர்களின் மூக்குகளை வெட்டிக் கொண்டு சென்றனர்.
ஜப்பானின் சாமுராய் வீரர்கள் காலத்தில், எதிரி நாடுகளை தாக்கும்போது, எதிரி ராணுவத்தினரின் மூக்கு உள்ளிட்ட உடல் பாகங்களை வெட்டி எடுப்பது வழக்கம். அவர்கள் வெட்டி எடுத்த மூக்குகளுக்கு ஏற்பவே சம்பளம் கொடுக்கப்படும் என்கிறது ஜப்பான் கதை. 1983 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஒகாயாமா என்ற இடத்தில் மூக்குகளைப் புதைத்த கல்லறை ஒன்றை கண்டுபிடித்தனர். அங்கிருந்து, சுமார் 20 ஆயிரம் கொரிய வீரர்களின் மூக்குகள் கொரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோன்ற இன்னொரு கல்லறை க்யோட்டா என்ற இடத்திலும் இருக்கிறது என்கிறார்கள்.
ஜப்பான் படையெடுப்புக்கு பிறகு 30 ஆண்டுகள் கழித்து, ராணுவ பலமிழந்த கொரியாவின் நிலையை அறிந்த மஞ்சூரியர்கள், கொரியாவைத் தாக்கினர். 1627 முதல் 1637க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த தாக்குதல் நடைபெற்றது. கொரியாவை கைப்பற்றிய மஞ்சூரியர்கள், பின்னர் மெதுவாக சீனாவின் மிங் பேரரசையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
மிங் பேரரசுக்கு பதிலாக சீனாவில் குய்ங் பேரரசை நிறுவினார்கள். அந்தப் பேரரசுடன் கொரியாவின் ஜோஸியோன் பேரரசு உறவை சுமுகப்படுத்தியது. அதன்பின்னர், மேலும் 200 ஆண்டுகள் கொரியாவில் அமைதியான ஆட்சியை ஜோஸியோன் பேரரசு நடத்தியது.
19ஆம் நூற்றாண்டில் கொரியா அரசாங்கத்தில் அரச குடும்பத்தினரின் சம்பந்திகள் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் கட்டுப்பாட்டில் அரசு சென்றது. ஊழல் மலிந்தது. அரசு நிர்வாகம் நலிவடைந்தது. மக்கள் மத்தியில் பசி, பஞ்சம், வறுமை தலைவிரித்தாடியது. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் பரவியது. இதையடுத்து, கொரியா மற்ற நாடுகளிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. அப்படியும் கொரியா அரசாங்கத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மக்கள் போராட்டம் அதிகரித்த நிலையில்தான் ஜப்பானியரின் ஆதிக்கம் கொரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.
1894 முதல் 1895 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற சீனா-ஜப்பான் யுத்தத்தின் முடிவில், கொரியாவின் ராணியாக இருந்த மியோங்சியோங்கை ஜப்பானிய உளவுப்படையினர் கொன்றனர். அதைத் தொடர்ந்து, 1897 ஆம் ஆண்டு ஜோஸியோன் பேரரசு கொரியா பேரரசு என்று பெயர் மாற்றப்பட்டது. 1897 முதல் 1910 ஆம் ஆண்டுவரை நீடித்த இந்த பேரரசின் மன்னராக கோஜோங் இருந்தார். இந்தக் குறுகிய காலத்தில் கொரியா தன்னை நவீனப்படுத்திக் கொண்டது. ராணுவத்திலும், பொருளாதாரத் துறையிலும், சொத்துச் சட்டங்கள், கல்வி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளிலும் இந்த நவீனமயம் புகுந்தது. ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரியாவில் முதலீடுகளை கொண்டுவந்து குவித்தன. அத்துடன் அரசியல் ரீதியாகவும் தங்கள் செல்வாக்கை கொரியா மீது செலுத்தின.
ஆன் ஜுங் ஜியன்
1904 ஆம் ஆண்டு ராஷ்யாருக்கும் ஜப்பானுக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் போது, கொரியாவை ஆக்கிரமிக்கும் தனது எண்ணத்தை ரஷ்யா கைவிட்டது. இந்நிலையில்தான் கொரியாவில் அன்னியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்ட உணர்வு அதிகரித்தது. அதே சமயம் ஜப்பானின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் குழுக்களும் உருவாகின. விடுதலை இயக்கத்தை சேர்ந்த ஆன் ஜுங் ஜியன் என்பவர் கொரியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
1905 ஆம் ஆண்டு ஜப்பானுக்கும், கொரியாவின் ஜோஸியோன் பேரரசுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடோ ஹிரோபுமி என்பவர் ஜப்பான் அரசு சார்பில் கொரியாவை நிர்வகிக்கும் தளபதியாக பொறுப்பேற்றார். முதலில் கொரிய அரசின் ஆளுமையை அங்கீகரித்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜப்பான் ராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரித்தார். அதையடுத்து, 1909 ஆம் ஆண்டு, கொரியாவின் ஜனாதிபதி என்று தன்னை அறிவித்துக் கொண்டார். அதன்பிறகு, மஞ்சூரியா சென்ற அவரை, கொரியா விடுதலை இயக்கத் தலைவரான் ஆன் ஜுங் ஜியன் படுகொலை செய்தார். அவருடைய மரணத்துக்கு பிறகு, ஜப்பான் – கொரியா இணைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, கொரியா ஜப்பானின் ஒரு பகுதியாகியது.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
கொரியா சமூகநீதிக் காவலர்கள்! கொரியாவின் கதை #3
அடுத்த பகுதி:
ஜப்பானிடம் கொரியா அடிமைப்பட்டது எப்படி? கொரியாவின் கதை #5