தமிழக சட்டப்பேரவையில் 1994 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைக்கு ஆளுநராக இருந்த சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா அபாண்டமாக பேசினார். அதுகுறித்து விவாதம் நடத்தி பின்னர் ஆளுநருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதே சட்டப்பேரவையில் அதே ஆளும் அதிமுக அரசாங்கத்தின் உரிமையில் தலையிடும் ஆளுநரை கண்டிக்க முதல்வருக்கோ, ஆளுநருக்கோ திராணியில்லை. ஆளுநர் சட்டப்படிதான் சோதனைகளில் ஈடுபடுகிறார் என்று முதல்வரும் அமைச்சர்களும் வரவேற்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க எந்த லெவலுக்கும் இறங்கிச் செல்லும் அடிமைகளாக அவர்கள் மாறிவிட்டார்கள்.
ஆனால், ஆளுநரின் அத்துமீறலை மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. ஆனால், மாநிலசுயாட்சியை உயிராகக் கொண்டுள்ள திமுக ஆளுநரின் ஆய்வுகளை எதிர்த்து அவர் போகும் மாவட்டங்கள் அனைத்திலும் கருப்புக்கொடி போராட்டங்களை நடத்துகிறது.
இந்தப் போராட்டங்களை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஆளுநர், திடீரென்று திமுகவுக்கு எதிராக பாய்ந்துள்ளார். அதன்விளைவாக நாமக்கல் மாவட்டத்தில் கருப்புக்கொடி காட்டிய திமுகவினரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிடச் செய்துள்ளார். அதில் ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை திமுக செயல்தலைவர் வெற்று மிரட்டல் என்றும், மாநிலசுயாட்சியை பாதுகாக்க ஆயுள் முழுவதும்கூட சிறையில் இருக்கத் தயார் என்றும் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆளுநரின் இந்தப் போக்கு குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டபோது அவை விதிகளை மேற்கோள் காட்டி, ஸ்டாலினுக்கு பேசுவதற்கு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார்.
அப்போது, ஜெயலலிதா ஆளுநர் சென்னாரெட்டி குறித்து அபாண்டமாக பேசியதையெல்லாம் முன் உதாரணமாக எடுத்துக்கூறினார் ஸ்டாலின். அது அந்தக் காலம் இப்போது அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் பேரவைத்தலைவர் தனபால்.
இந்த ஆட்சியில் அவர்களுக்குப் பிடிக்காத எதையும் பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடியைப் பற்றி பேசலாம். ஆனால் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அந்த வார்த்தை நீக்கப்படும் என்கிறார். குட்கா வழக்குப் பற்றிப் பேசக்கூடாது என்கிறார். எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கக்கூடாது என்கிறார். இப்படியாக எதிர்க்கட்சியினர் எதையெல்லாம் பேசணும், எதை பேசக்கூடாது என்று முடிவெடுக்கிறவராக பேரவைத்தலைவர் செயல்படுகிறார். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் முடியுமோ என்று கவலை தெரிவிக்கிறார்கள் நடுநிலையாளர்கள்.