"மே 23-க்குப் பிறகு என்ன நடக்கும்?' என இந்தியா முழுவதும் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைவிட பதற்றத்துடன், என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலையுடன் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க. தொண்டர்கள். அதற்குக் காரணம், அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுதான். திருப்பூர் மாவட்ட மந்திரி உடுமலை ராதாகிருஷ்ணனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன்பு பறித்து, அதனை பொள்ளாச்சி ஜெயராமனிடம் அளித்தார் எடப்பாடி. ஆல் பவர்புல் மந்திரியான எஸ்.பி.வேலுமணியின் சிபாரிசால் நடைபெற்ற இந்த மா.செ.க் கள் மாற்றத்திற்குப் பிறகுதான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் சம்பந்தப்பட்ட காமக்கொடூரக் கதைகள் வெளிவந்தன. அந்தக் கதைகள் வெளியே தெரிந்ததற்குக் காரணம் உடுமலைதான்.
அதுமட்டுமல்ல... "பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வேலைகளிலும் உடுமலை பங்கெடுக்கவில்லை' என தேர்தல் முடிந்ததும் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஒரு பெரிய புகார் கடிதமே வாசித்தார். இதனால் கடுப்பான எடப்பாடி, உடுமலையைக் கூப்பிட்டு கண்டித்தார். இதனால் மூடு அவுட்டான உடுமலை, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. டெல்லிக்குப் போன எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து பறந்துவந்து சூலூர் தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். பக்கத்தில் உள்ள உடுமலையில் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் சூலூர் கூட்டத்தில் தலைகாட்டவில்லை.
உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு என அமைச்சரவையில் ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அந்த அமைச்சர்களெல்லாம் அவருடன் மாலை முதல் நள்ளிரவு வரை அவரது அரசாங்க வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் கே.சி.கருப்பணன், வேலூர் மாவட்ட மந்திரி கே.சி.வீரமணி ஆகியோர்தான் நெருக்கமான தோஸ்துகள். எடப்பாடி, உடுமலையைக் கடிந்துகொண்டதால் இந்த நட்புவட்டாரமும் எடப்பாடியின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது. எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதெல்லாம் "மே 23 முடியட்டும், அதற்குப் பிறகு எடப்பாடியை ஒருகை பார்க்கலாம்' என்பது தானாம். இந்த அமைச்சர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே இதைச் சொல்கிறார்கள்.
இவர்கள்தான் இப்படியென்றால் உடுமலை ராதாகிருஷ்ணனை, எடப்பாடியிடம் போட்டுக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி, ஒரு சூப்பரான நகர்வை மேற்கொண்டிருக்கிறார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் ஆசிரமம் வைத்திருப்பவர்தான் ஜக்கி வாசுதேவ். அவரிடம் ஒரு சீக்ரெட் சிட்டிங் மீட்டிங் ஒன்றை நடத்தியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. "எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளில் அ.தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கு மேல் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை. அந்தப் பணம் அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதிக்கப்பட்ட ஊழல் பணம். இந்தப் பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுத்தாலும் யாரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டார்கள் என கட்சிக்காரர்களே தங்கள் பையில் நிரப்பிக்கொண்டார்கள். அந்தப் பணத்தை தொகுதி எம்.எல்.ஏக்கள், போட்டியிட்ட எம்.பி. வேட் பாளர்கள் என யாராலும் தட்டிக்கேட்க முடிய வில்லை. அமைச்சர்கள் பொறுப்பில் வழங்கப்பட்ட அந்தப் பணம் சரியாக விநியோகம் ஆனதா என எடப்பாடியும் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு அ.தி.மு.க.வை எடப்பாடி சீரழித்து விட்டார். இனி அவரை நம்பி அரசியல் செய்ய முடியாது, எனவே உங்கள் டெல்லி செல்வாக்கின் மூலம் என்னை தமிழக முதல்வராக்குங்கள். நான் அனைத்தையும் சரிசெய்கிறேன்' என எஸ்.பி. வேலுமணி போட்ட டீலை ஜக்கி வாசுதேவும் ஆமோதித்துள்ளார்'' என்கிறார்கள் கொங்கு மண்டல அ.தி.மு.க.வினர்.
"அதுமட்டுமல்ல... ஜூனியர் அமைச்சர்களான பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் தொடங்கி... செல்வாக்குமிக்க சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சீனியர் தலைவர்களான வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், போக்குவரத்து விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகாருக்குள்ளாகாத அமைச்சர்களே இல்லை. அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் எடப்பாடி தவித்து வருகிறார்.