Skip to main content

'சினிமா, பீடி, சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை' -மத்திய நல ஆணையர் அறிவிப்பு!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

national scholarships portal labours childrens apply online

 

'சினிமா, பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய நல ஆணையர் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மத்திய நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்புகள் முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2020- 2021 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 250 முதல் ரூபாய் 15,000 வரை கல்வி உதவித்தொகைப் பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

1. https://scholarships.gov.in/ என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

 

2. ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கென தனியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக்கணக்கை தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைப் பெற்றிருக்குமாறு வைத்திருத்தல் வேண்டும்.

 

3. விண்ணப்பத்தாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர்.

 

4. இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பத்தாரர்கள், தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

 

Ad

 

5. கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in/ என்ற, தேசியக் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை கல்வி நிறுவனங்கள் மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தக்கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31/10/2020 ஆகும்.

 

இது தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் உதவிக்கு மின்னஞ்சல் முகவரி: scholarship201718tvl@gmail.com, தொலைபேசி எண்: 044- 29530169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். (அல்லது) சென்னை கிண்டியில் உள்ள நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு அலுவலகத்தை அணுகலாம்". இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.