Skip to main content

EPS ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்..! விட்டுத்தர மாட்டார்கள்..! -கே.சி.பழனிசாமி

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
sss

 

 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

இதனிடையே அதிமுகவினரிடம் ஜூம் செயலி மூலம் பேசி வரும் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 

''பொதுவாக தேர்தலுக்கு முன்பு பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடத்துவார்கள். டிசம்பரில் பொதுக்குழு நடத்தியாக வேண்டும். பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு முன்பு முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துவிடுவார்கள். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் அவர்கள் அதனை விட்டுத்தர மாட்டார்கள். உறுதியாக இருக்கிறார்கள். 

 

KCPalaniswamy

 

அடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் விஷயம். அதிமுக - பாஜக கூட்டணி இல்லையென்றால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஊழல் வழக்குகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் சூழல் வந்தால் அன்றைக்கு இப்போதுள்ள அமைச்சர்களுக்கு பாதுகாப்புக்கு பாஜக வேண்டும் என்பதால் முழிக்கிறார்கள். யாரும் உத்தமர்கள் கிடையாது. எல்லோரிடமும் கரை இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை. அதிமுக தொண்டர்களிடையே எதிர்ப்பு இருக்கிறது. 

 

தேர்தலுக்கு முன்பாக சசிகலா வெளியே வந்துவிடுவார். அப்போது அதிமுகவில் எந்த சலசலப்பும் வந்துவிடக்கூடாது என்பதால், கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று விவாதிப்பார்கள். 

 

இப்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புகிறார்கள். இதனை கட்சியினர் விரும்புவார்களா? அப்படியே போட்டியிட்டாலும் இதில் பாதி பேர் வெற்றி பெற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். தேர்தல் செலவு பற்றியும் பேசுவார்கள். இப்போதுள்ள அமைச்சர்களில் ஐந்து அமைச்சர்கள்தான் தேர்தல் செலவை சமாளிப்பார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நிர்வாகிகள் எதிர்பார்ப்பார்கள். 

 

ஆனால், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை. அது அமைக்கப்பட வேண்டும். முறைப்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஒற்றை தலைமையில் அதிமுகவை கொண்டுவர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். ஆனால் இதுபோன்ற தொண்டர்களின் எண்ணங்களை இப்போதுள்ள தலைமைகள் கண்டுகொள்ளவில்லை'' என்றார்.