முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு, மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் இருக்கிறார். தெற்கு மா.செ.வாக இருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கல்தா கொடுத்து விட்டு புதிய மா.செ.வாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்தார் எடப்பாடி. இதனால் அங்கு ஏற்படும் மோதல்கள் பற்றி நக்கீரன் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளை நான்காக உடைத்து, செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், முன்னாள் மா.செ.வும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பெருமாள்நகர் கே.ராஜன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் மா.செ.வாக்க அ.தி.மு.க மேலிடம் முடிவு செய்திருந்தது.
இதனையறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் மூலம் காய்களை நகர்த்தினார். ரெண்டு தொகுதிக்கு மட்டும் நான் மா.செ.வாக இருந்தால் கௌரவமாக இருக்காது. அதனால், தற்போதைய நிலையிலேயே மாவட்டம் இருக்கட்டும். தெற்கில் என்னை மா.செ.வாக ஆக்குங்கள் என எடப்பாடியிடம் வலியுறுத்திக் கேட்டார் அக்ரி. சேலம் இளங்கோவனின் ஆதரவினால், திருவண்ணாமலையை பிரிக்காமல் அக்ரியின் ஆசையை நிறைவேற்றினார் எடப்பாடி.
இதனால் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், பெருமாள்நகர் கே.ராஜன் மற்றும் மா.செ. பதவியை இழந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் அவரது ஆதரவாளர்களும் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களது அதிருப்திகளை எடப்பாடியிடம் சொல்ல, அவரால் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதில் பெருமாள் நகர் ராஜனை முடக்கப் பார்த்திருக்கிறார் அக்ரி. இந்தப் பஞ்சாயத்தும் எடப்பாடியின் கவனத்துக்குப் போயிருக்கிறது.
இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மா.செ.பதவியை பறிகொடுத்த சேவூர் ராமச்சந்திரனால் அக்ரியை எதிர்த்து, எடப்பாடியிடம் அரசியல் செய்ய முடியவில்லை. அதேபோல், பெருமாள்நகர் ராஜனை எதிர்த்து, மாவட்டத்தில் அரசியல் செய்ய அக்ரியால் முடியவில்லை. இதனால் திருவண்ணாமலை தெற்கில் இரு தரப்பின் உறுமல்களும் அதிகளவில் எதிரொலிக்கின்றன'' என்கிறார்கள்.
நம்மிடம் பேசிய ர.ர.க்கள்,‘பெருமாள்நகர் ராஜன் மா.செ.வாக இருந்த சமயத்தில் அ.தி.முக.வின் கட்சி அலுவலகத்தை மிகப்பெரியளவில் கட்டியிருந்தார். ஜெ' ஆட்சியில் அக்ரி நீக்கப்பட்டபிறகு, மாவட்ட அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் ராஜன் பக்கம் சாய்ந்து விட்டனர். அக்ரி மீண்டும் கட்சியில் இணைந்த பிறகு ர.ர.க்களை தன் பக்கம் இழுக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.
இந்தச் சூழலில்தான், "சுதந்திர தினத்தன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களைத் திரட்டி கொடி ஏற்றுவேன்'' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார் ராஜன். இதனையறிந்த அக்ரி, அதனை தடுத்து நிறுத்த மாவட்ட டி.எஸ்.பி. அண்ணாமலையின் உதவியை நாடியுள்ளார். தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அவர்களோ 14-ஆம் தேதி ராஜனை நேரில் சந்தித்து, சுதந்திர தினத்தில் கொடியேற்றுவதை ரத்து செய்யுங்கள் எனக் கட்டளையிட, எழுத்துப் பூர்வமாக தந்தால் கேன்சல் செய்கிறேன் என்றிருக்கிறார். இதனால் ஜகா வாங்கியுள்ளது போலீஸ்.
அதேசமயம், 15- ஆம் தேதி கொடியேற்ற அவர் கிளம்பியபோது, அவரை தடுத்துள்ளது போலீஸ். இதனால் போலீசுக்கும் ராஜனுக்கும் வாக்குவாதம் நடக்க, அவரை மட்டும் போக அனுமதித்துள்ளது. போலீஸ். காவல்துறை கெடுபிடியையும் மீறி கட்சி அலுவலகத்தில் பலரும் கூடிவிட்டனர். வங்கி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, கட்சி அலுவலகத்திலும் கொடியேற்றினார் ராஜன்.
இந்த விவகாரத்தைத்தான் எடப்பாடியிடம் அக்ரியும் ராஜனும் மாறி மாறி பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் இதுபற்றி கேட்ட போது, "மாவட்டத்தைப் பிரிப்பது தலைமையின் முடிவு. அதை ஏற்று கட்சிப் பணிகளை செய்து வருகிறேன். தலைமைக்கு யோசனை சொல்கிற அளவுக்கு நான் வளரவில்லை. கோஷ்டி தகராறுகள் எதுவும் மாவட்டத்தில் இல்லை. சுதந்திர தினத்தன்று நான் சென்னையில் இருந்தேன். மாவட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியாது'' என்றவர், "தன் மீதான குற்றச் சாட்டுகள் தவறானவை'' என்றார்.
பெருமாள்நகர் ராஜன் நம்மிடம், "கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர, கட்சியைப் பலவீனப்படுத்தாது. மற்றபடி கோஷ்டி தகராறுகள் எதுவும் கிடையாது'' என்றார்.
"திருவண்ணாமலையை போல ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கோஷ்டி மோதல்கள் எடப்பாடியை முற்றுகையிடுகின்றன. சமாளிக்க முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தலைமைக் கழகத்தினர்.