எடப்பாடி அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு மீண்டும் வேகம் பெற்றிருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுடன் முரண்பட்டிருக்கும் அந்த மூவரும் மீண்டும் எடப்பாடியிடம் சரணடைய பேச்சுவார்த்தை நடந்து வருவதை அறிந்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவனம் செலுத்தியது, இதற் கான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்திருந்த தி.மு.க.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கபில் சிபிலிடம் தி.மு.க. விவாதிக்க, கடந்த 2-ந்தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் முறையிட்டார் கபில்சிபில். மறுநாளே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். அதன்படி நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் அமர்வில் 3-ந்தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தி.மு.க. தரப்பில் ஆஜரான கபில்சிபில், ""வழக்கில் அனைத்து தரப்பின் வாதங்களும் முடிவடைந்து விட்ட நிலையில் வழக்கு கிடப்பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கின் நீதிபதி ஒருவர் ஓய்வும் பெற்று விட்டார். இதே போன்று 3 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு ஸ்டே கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு வழக்கும் நிலுவையில் இருப்பதால் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்'' என அழுத்தமாக வாதிட்டார்.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்ரோகத்ஹி மற்றும் பேரவை செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமாசுந்தரம் இருவரும், இரு வழக்குகளின் தன்மையும் வெவ்வேறானவை. 3 எம்.எல். ஏ.க்களைப் பொறுத்தவரையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததால் சபாநாயகரின் நோட்டீசுக்கு ஸ்டே கொடுக்கப்பட்டது. தற்போது தனது தீர்மானத்தை தி.மு.க. திரும்பப்பெற்றுக் கொண்டதால் இந்த வழக்கு காலாவதியாகி விட்டது'' என வாதிட்டனர். இதனையடுத்து இரு வழக்குகளையும் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இரு வழக்குகளும் தனித்தனியாக விசாரிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து தி.மு.க. வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, நீண்ட நாட்கள் தள்ளி வைக்கப்பட்டதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றம்தான். இந்த வழக்கில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் பறிக்கப்படும். விசாரணையின் ஒரு கட்டத்தில், "கொறடாவின் உத்தரவு எங்களுக்கு வரவில்லை என 11 பேரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அரசு என வரும்போது கொறடாவின் உத்தரவு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். இதில் எங்களுக்கு உத்தரவு வரவில்லை' என சிலர் தப்பித்துக்கொள்ள முடியாது என வாதிட்டிருக்கிறோம். மேலும், நாங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டு இந்த வழக்கை தொடுத்திருப்பதாக ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இது எங்களுக்கு சாதகமான அம்சம்.
அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு உண்டு. அதனால், கொறடாவின் உத்தரவை ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேரும் மீறியிருப்பது அப்பட்டமாகத் தெரிவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும். தீர்ப்பு காலம் தாமதமாகலாமே தவிர, தடுத்துவிட முடியாது. தங்களுக்கு எதிரான தீர்ப்பில் இருந்து 11 பேரும் தப்பிக்கவும் முடியாது. ஆகஸ்டில் இவர்களின் பதவி பறிக்கப்படும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு கவர்னர் உத்தரவிடுவார். தற்போது அ.தி.மு.க.வில் 122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டால் 111 என்கிற நிலையில் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடப்பாடி ஆட்சி கவிழும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
தேர்தல் வழக்குகளை கையாளும் அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "சபாநாயகரின் உத்தரவில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், சபாநாயகரிடம் கொடுக்கப்படும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதும் எடுக்காமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் யாரும் தலையிட முடி யாது. ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான தி.மு.க.வின் புகாரில் ஏதேனும் ஒரு உத்தரவை சபாநாயகர் பிறப்பித்திருந்தால் அது செல்லுமா? செல்லாதா? என கோர்ட் தலையிட்டு தீர்ப்பு வழங்க முடியும். ஆனால், இங்கு ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் சபா எடுக்காததால், நடவடிக்கை எடுங்கள் என அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதனால் ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கில் தி.மு.க.வின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என சுட்டிக்காட்டுகிறார்கள்.
கிடப்பில் கிடந்த இவ்வழக்கு திடீரென உயிர்பெற்றும் எடப்பாடி தரப்பில் எவ்வித பதட்டமும் இல்லை. இது குறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, 11 பேருக்கும் எதிராக தீர்ப்பு வந்தால் தனது ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதை எடப்பாடி உணர்ந்தே இருக்கிறார். ஆக, எந்த சூழலிலும் இந்த வழக்கில் தி.மு.க. ஜெயித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால் இந்த வழக்கு விவகாரங்களில் இருவரும் இணைந்தே டெல்லியின் உதவியை ஏற்கனவே கேட்டு பெற்றிருக் கிறார்கள். எடப்பாடியின் அனைத்து டீலிங்குகளின் சூத்திரதாரியாக இருக்கும் சேலம் பிரமுகர்தான் இந்த வழக்கின் டெல்லி டீலிங்கையும் பேசி முடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் டெல்லி மேலிடம், இதற்காகவே நீதித்துறையில் தொடர்புடைய தனி ஒரு அதிகாரியை அறிமுகப்படுத்தி அவரிடமே சேலத்து பிரமுகர் விவாதிக்கவும் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளவும் வழியை ஏற்படுத்தி தர கச்சிதமாக காய் நகர்த்தப்பட்டுள்ளது.
விசாரணை நடக்கவுள்ள ஜூலை 30-ல் தான் நடப்பு சட்டமன்ற கூட்டமும் முடிகிறது. தீர்ப்பு அதே நாளிலோ ஆகஸ்டிலோ வரலாம். சட்டமன்றக் கூட்டம் முடிந்து விட்டால், அவசரமில்லாத சூழலில் அடுத்த 6 மாதத்திற்கு சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தீர்ப்பு எதிராக வந்தாலும் சட்டமன்றம் கூடாத வரை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு இருக்காது. அதேசமயம், ஆளுநரிடம் தி.மு.க. வலியுறுத்தினாலும் அதை அவர் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. டெல்லி உதவி இருப்பதால் எந்த சூழலிலும் ஆட்சி கவிழாது என எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அசாத்திய நம்பிக்கையில் இருப்பதால்தான் அவர்களிடம் வழக்கு குறித்த பயமோ பதட்டமோ இல்லை'' என்று விவரிக்கின்றனர். ஆட்சியாளர்களிடம் புன்னகையும், தி.மு.க.விடம் அப்செட்டும் வெளிப்படுகிறது.