கடந்த மூன்று நாட்களாக இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ஒலிக்கும் பெயர் 'அபிநந்தன் வர்தமன்'.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லைக்குள் விமானத்தில் சென்ற அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் அபிநந்தனை விசாரிக்கும் வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை நாகரிகமாக நடத்துவதாகத் தெரிவித்திருந்தார் அபிநந்தன். அந்த வீடியோவில் அவர்களது கேள்விகளுக்கு அபிநந்தன் பதிலளித்த விதமும், அந்த சூழ்நிலையை அபிநந்தன் அணுகிய முறையும் அவர்கள் கேட்கும் தகவல்களை தர உறுதியாகவும் மென்மையாகவும் மறுத்த விதமும் இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தனி ஆளாக இருக்கும்போதிலும், தன் கண்கள் கட்டப்பட்டு, தாக்கப்பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டு நிற்கும்போதும் அவர் சற்றும் நிலைகுலையாமல் நிமிர்ந்து நின்ற விதமும் அவர்கள் கேட்ட கேள்விகளில் எந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், எந்த கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என்பதில் காட்டிய தெளிவும் அதை மிக மென்மையாக அதே நேரம் உறுதியாக தெரிவித்த விதமும் அந்த வீடியோக்கள் மூலம் வெளியாகின. அவர் ஆங்கிலம் பேசிய விதம், அளவான வார்த்தைகள் என அவரது மொழியும் மிகத் தெளிவாக இருந்தன. குறுகிய நேர வீடியோக்கள் என்றாலும் தனது செயல்பாடு மற்றும் பேச்சால் மக்கள் மத்தியில் ஒரு நாயகனாக உயர்ந்தார் அபிநந்தன். அவரது அந்த பிம்பத்திற்கு வலு சேர்த்தது அவரது மீசை. தமிழ்நாட்டை சேர்ந்த அபிநந்தன் தமிழ்நாட்டு பாணியில் நீண்ட பெரிய மீசை வைத்திருந்தார். சமூக ஊடகங்களில் அவரது அந்த 'கெத்'தான தோற்றம் குறித்தும் பேசப்பட்டது. பாகிஸ்தானால் அமைதி நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் பத்திரமாக மீண்டு வந்திருக்கும் வேளையில் அவரை புகழ்ந்தும் வரவேற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் நிறைந்துள்ளன.
அபிநந்தனை அவரது பேட்சில் (batch) 'வீரப்பன்' என்று சக வீரர்கள் அழைப்பார்களாம். காரணம், அவரது நீண்ட மீசை. வீரப்பன் பெரிய மீசை வைத்திருந்தவர். ஆனால், இரண்டும் வேறு வேறு பாணி.
தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தென் தமிழகத்தில் பெரிய மீசை வைப்பவர்கள் அதிகம். வீரத்தின் அடையாளமென நம்பப்படும் இந்த மீசை பல பிரபலங்களின் அடையாளமாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவம் பெரிய மீசையுடன்தான் வரையப்பட்டது. திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசன் பெரிய மீசையுடன்தான் நடித்தார். இன்று அவரது தோற்றமே கட்டபொம்மனின் தோற்றமாக பதிவாகி இருக்கிறது. பாரதியின் மீசை புகழ் பெற்றது. அவரது கவிதையில் இருக்கும் ரௌத்திரம் அவரது தோற்றத்திலும் இருக்கக் காரணம் அந்த மீசை. எழுத்தாளர் ஜெயகாந்தனின் பெரிய மீசை அனைவரையும் ஈர்த்தது.
இன்றும் தமிழ் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகர்களை வீரமாகக் காட்ட மீசை பயன்படுகிறது முன்பு தேவர் மகன், சீவலப்பேரி பாண்டி திரைப்படங்களும் சமீபத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களும் இதற்கு உதாரணம்.
நக்கீரன் ஆசிரியர் தோற்றத்தில் முக்கிய அம்சம் மீசை. அவரது அடையாளமாக இன்றும் அவரது மீசை இருக்கிறது. இப்படி தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் தொடர்புண்டு. இந்த வரிசையில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி உள்ளது. அவரை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஓவியங்களில், புகைப்படங்களில் அவரது மீசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஹைலைட்டாக இருக்கிறது. மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது தமிழ்நாட்டிலிருந்து ஒரு மீசை.