புராதன நாகரிங்களில் எகிப்து நாகரிகத்தின் அடையாளமாக பிரமிடுகள் நிற்கின்றன. கிரேக்க நாகரிகத்தின் அடையாளமாக புகழ்பெற்ற சிற்பங்களும் ஆலயங்களும் நிலைத்திருக்கின்றன. மாயன் நாகரிகத்தின் அடையாளமாக அவர்கள் வடிவமைத்த காலண்டர் இருக்கிறது. ஆனால், உலக சரித்திரத்தில் குறுகிய காலமே நீடித்து காணாமல் போயிருக்கின்றன. இந்த நாகரிகங்கள் இன்னாருடையது என்ற அடையாளம் இல்லாமல் அழிந்துபோன சிலவற்றை பார்க்கலாம்…
ஸில்லா நாகரிகம்!
கொரியா தீபகற்பத்தின் பெரும்பகுதியை கி.மு.57 முதல் கி.பி.935 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது ஸில்லா பேரரசு. சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த முடியரசுகளில் ஒன்றான இதைப்பற்றி அறிய ஒரு சில புதைவிடங்கள் மட்டுமே அகழ்வாராய்ச்சிக்காக இருக்கின்றன.
இத்தகைய அகழ்வாராய்ச்சி இடங்களில் ஒன்றில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஓரளவு இந்தப் பேரரசை பற்றிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது. ஸில்லா தலைநகர் ஜியோங்ஜு அருகே 2013 ஆம் ஆண்டு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் எலும்புகள் கிடைத்தன. அந்தப் பெண் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்றும், அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுகிறவராக இருந்ததும் தெரியவந்தது. அவருடைய நீள் வடிவமான மண்டையோடும் கிடைத்தது.
ஸில்லா முடியரசு பாக் ஹையோக்ஜியோஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த மன்னர் மர்மமான முட்டை ஒன்றிலிருந்து பிறந்தவர் என்றும், ட்ராகன் ஒன்றின் இடுப்பிலிருந்து பிறந்த ராணி ஒருத்தியை மணந்தார் என்றும் புராணக்கதை இருக்கிறது. காலம் செல்லச்செல்ல ஸில்லா நாகரிகம் மையப்படுத்தப்பட்ட பணக்கார அதிகாரவர்க்க நாகரிகமாக மாறியது. இந்த நாகரித்துக்கு சொந்தக்காரர்களின் ஆடம்பரமான பல பொருட்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இரும்பால் ஆன புத்தர் சிலை, கோர்க்கப்பட்ட நகை உள்ளிட்ட தங்கப் பொருட்கள் ஜியோங்ஜு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி நாகரிகம்!
உலகின் மிகப்பெரிய நகர்ப்புற நாகரிகங்களில் சிந்துசமவெளி நாகரிகம் முக்கியமானது. பாகிஸ்தானில் ஓடும் சிந்து நதி கரையிலிருந்து அரபிக் கடல் மற்றும் கங்கை நதிக்கரை வரை பரந்து விரிந்திருந்தது. இந்த நாகரிகம் சுமாராக கி.மு.3300 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்றும் கி.மு.1600 காலகட்டத்திலிருந்து அது வீழ்ச்சியடையத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் கழிவுநீர் சாக்கடை மற்றும் பாதாளச் சாக்கடைகளை உருவாக்கி இருந்தார்கள். அழகிய நேர்த்தியான சுவர்களுடன் வீடுகளைக் கட்டியிருந்தார்கள். நெற்களஞ்சியங்களையும் கட்டி பராமரித்தார்கள். இவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள், பாசிகளை தொல்லியல் நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர். பல் பராமரிப்பிலும்கூட இவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். பருவநிலை மாறியதால் இந்தப் பகுதி வாழ்வதற்கு தகுதியற்றதாகியது. எனவே இந்த நாகரிகம் மறையத் தொடங்கியது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஸான்ஸிங்டுய் நாகரிகம்!
சீனாவின் சிச்சுவான் மாகாணம் என்று அழைக்கப்படும் பகுதியில் வெண்கல காலத்தில் உருவானது ஸான்ஸிங்டுய் நாகரிகம். 1929 ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது நிலத்தில் இந்த நாகரிகத்துக்கு சொந்தமான கலைப்பொருள் ஒன்றை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது. அதில் 8 அடி வெண்கல சிலை உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன.
ஆனால், ஸான்ஸிங்டுய் என்பவர்கள் யார்? இந்தக் கலாச்சாரத்தின் கலைநயமிக்க திறமைகள் வெளிப்பட்டாலும், இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. இவர்கள் வெண்கலம் மற்றும் தங்கத்தால் முகமூடிகள் செய்யும் வேலையை செய்பவர்களா இருந்திருக்கலாம் என்று மட்டுமே சொல்கிறார்கள். சுமார் 2800 முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நாகரிகம் காணாமல் போயிருக்கலாம். இந்த இடத்திலிருந்து, பக்கத்திலுள்ள ஜின்ஷா என்ற இடத்துக்கு இவர்கள் குடிபெயர்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த ஆய்வாளர்கள் கூட்டத்தில், இந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மின்ஜியாங் நதி திசை மாறி ஸான்ஸிங்டுய் நாகரிகம் அழிந்திருக்கலாம். அல்லது வேறு இடம் மாறியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நோக் நாகரிகம்!
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் கி.மு.1000 மாவது ஆண்டுக்கும் கி.பி.300 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகி இருந்தது நோக் நாகரிகம். 1943 ஆம் ஆண்டு தகர சுரங்கம் தோண்டும்போது தற்செயலாக இந்த நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது. நியூயார்க்கைச் சேர்ந்த நியூயார்க் மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகம் இதை உறுதிப்படுத்தியது. சுரங்கம் தோண்டும்போது அந்த இடத்தில் சுட்டகளிமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் நடந்த அகழ்வாய்வில் இங்கு வசித்தவர்கள் நகை அணிந்ததற்கும், அதிகாரத்தைக் குறிக்கும் செங்கோல் உள்ளிட்டவை பயந்படுத்தியதற்கும் ஆதாரங்கள் கிடைத்தன. யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்கள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறிப்பட்டன. நோக் நாகரிகத்துக்கு சொந்தமான பல கலைப் பொருட்கள், நைஜீரியா அருங்காட்சியகத்தில் களவாடப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டுபோகப்பட்டன. 2012ல் அத்தகைய பொருட்கள் பலவற்றை அமெரிக்க அரசு நைஜீரியாவுக்கு திரும்பக் கொடுத்தது.
எட்ருஸ்கன் நாகரிகம்!
இத்தாலியின் வடக்குப் பகுதியில் கி.மு.700 முதல் கி.மு.500 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வளர்ந்திருந்தது எட்ருஸ்கன் நாகரிகம். இது பின்னர் ரோமானிய குடியரசில் கரைந்துவிட்டது. இந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் தங்களுக்கென அழகிய எழுத்து மொழியை உருவாக்கி இருந்தார்கள்.
குடும்பத்துக்கு சொந்தமான கல்லறைகளை கட்டியிருந்தனர். 2013 ஆம் ஆண்டு ரோமிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை நகரத்தில் இளவரசர் ஒருவரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. எட்ருஸ்கர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் மத வழிபாடுகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததை காட்டுகின்றன. போக்கியோ கொல்லா, போக்கியோ சிவிடேட் ஆகிய இடங்களில் எட்ருஸ்கர்கள் பயன்படுத்திய எழுத்துருக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மத்திய தரைகடல் நாடுகளிலேயே மிகப்பெரிய கட்டிடமும், அதில் 25 ஆயிரத்துக்கு அதிகமான கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
தி லேண்ட் ஆஃப் புன்ட்!
இது ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு முடியாட்சிதான். கி.மு.2600களில் இருந்த இந்த முடியாட்சி, எகிப்தியர்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தது. எகிப்து மன்னரான குஃபு பரோவா ஆட்சிக் காலத்தில் இந்த வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. இந்த குஃபு மன்னர்தான் ஜிஸாவில் உள்ள தி கிரேட் பிரமிட்டை கட்டியவர். எனினும், இந்த முடியாட்சி எங்கிருந்தது என்பதை இதுவரை யாரும் கண்டறியமுடியவில்லை.
தங்கம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை புன்ட் முடியாட்சியிலிருந்து கொண்டு வந்ததாக எகிப்தியர்கள் குறிப்பு வைத்திருக்கிறார்கள். நீண்ட பயணங்கள் மூலம் இந்த வர்த்தகம் நடைபெற்றதாக குறிப்புகள் இருப்பதை வைத்து, அரேபியாவில் இந்த முடியாட்சி இருந்திருக்கலாம் என்று வரலாற்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். வேறு சிலரோ தெற்கு சூடான், அல்லது எதியோப்பியாவில் இது இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
பெல் பீக்கெர் நாகரிகம்!
இந்த நாகரிகத்துக்கு சொந்தமானவர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்கள் மணியின் அகல வாய்ப் பகுதி மேலே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தன. எனவே அதை வைத்து பெல் பீக்கெர் நாகரிகம் என்று பெயரிட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் கி.மு.2800 முதல் கி.மு.1800 காலகட்டத்தில் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.
செம்பு கலைப்பொருட்களும், புதைவிடங்களையும் இவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். செக் குடியரசில் இவர்களுக்குச் சொந்தமான 154 புதைவிடங்களைக் கொண்ட இடுகாடு கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டோன்ஹெஞ்ச் எனப்படும் பெருங்கற்களால் ஆன நினைவுச் சின்னங்களிலும் இவர்களுடைய பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.