திருவண்ணாமலை அடுத்த சோ.புத்தியந்தல் கிராமத்தில் அருணை கல்வி குழுமத்தின் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மகளிர் கலை அறிவியல் கல்லூரி, இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பார்மஸி கல்லூரி போன்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலுவின் குடும்ப அறக்கட்டளை நடத்திவருகிறது.
தற்போது சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாததால் வருமானம் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. அதன்படி வேலுவின் ஒரு பொறியியல் கல்லூரியும் மூடப்பட்டது. இதனால் வேலுவின் பார்வை மருத்துவக்கல்லூரி மீது திரும்பியது. வேலு குடும்பத்தின் நீண்ட நாள் கனவு மருத்துவக்கல்லூரி. அதற்கு இதுதான் சரியான தருணம் என முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
கடந்த ஓராண்டாக இதற்கான அனுமதிக்காக டெல்லி, மும்பை, குஜராத், சென்னை, சேலம் என வலம் வந்து மூன்று இலக்க கோடிகளை வாரி தந்து அதிகாரிகள், மத்திய – மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக – அதிமுக பிரமுகர்களுக்கு கப்பம் கட்டி அனுமதி வாங்கினார். பொறியியல் கல்லூரியாக செயல்பட்டு வந்த சில கட்டடங்களை மருத்துவமனைக்கு தகுந்தார்போல் மாற்றுவது, புதிய கட்டடங்களில் சில கட்டி மருத்துவக்கல்லூரி தொடங்க பொதுமுடக்கமான கரோனா காலத்திலேயே பணிகள் ரகசியமாக நடந்தன. அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனையை வேலுவின் மனைவி சங்கரிவேலு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து கடைசி நேரத்தில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவல் பரப்பினர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அறியப்படும் வேலு, எல்லாவற்றையும் பெரியதாக, ஆடம்பரமாக, பந்தாவாக செய்யும் வேலு, தனது கனவான மருத்துவக்கல்லூரிக்கான மருத்துவமனை தொடக்க விழாவை இப்படி சிம்பிளாக முடித்துவிட்டாரே என பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலினிடம் திறந்து வைக்க வருமாறு கேட்டார். அதற்கு அவர் கரோனா காலத்தில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை எனச்சொன்னார். வீடியோகால் வழியாக திறந்து வைக்க கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க அனுமதி பெற எடுக்கப்பட்ட வழிகள், அவர் சந்தித்த நபர்கள், கட்டங்களுக்கு அனுமதி பெற செய்யப்பட்ட விதிமுறை மீறல்கள் போன்றவை குறித்த தகவல்கள் தெரிந்து திமுக தலைவர் அதிருப்தியாகிவிட்டார். அந்த காரணங்களாலே திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் தட்டி கழித்துவிட்டார், இதனால் வேலு அதிர்ச்சியாகிவிட்டார். இது கரோனா காலம் அதனால் தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை எனச்சொல்லி, தன் மனைவியை வைத்து புறநோயாளிகள் பிரிவை திறந்துவிட்டார் என்றார்கள்.
வேலுவுக்கு நெருக்கமான திமுக வட்டாரங்களோ, டிசம்பர் மாதம் மருத்துவமனை கட்டடங்களை திறந்துவைக்க திமுக தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். அப்போது பிரமாண்டமாக விழா நடைபெறும் என்கிறார்கள்.
பல சர்ச்சைகளுக்கிடையே அருணை மருத்துவமனை தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி கிடைக்கவேண்டும். இதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார் வேலு.