“பிரேமலதா பிரமாதமாகப் பேசிவிட்டார்.” என்று சிலிர்க்கிறார்கள் விருதுநகர் தொகுதி தேமுதிகவினர். 2019 தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுதான் கூட்டணிக் கட்சியினரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனை ‘சட்ட மன்ற உறுப்பினர்’ என்று விளித்த பிரேமலதா, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஏனோ, ‘வேட்பாளர்’ என்றே குறிப்பிட்டார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை, ‘கவலையை விரட்டுபவர்’ என, உளவியல் நிபுணர் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசியபோது, அமைச்சரே நெளிந்தார்.
‘அதிமுக கூட்டணி இயற்கையானது’ என்று கூறிவிட்டு, அவர் அளித்த விளக்கம் கேப்டன் விசுவாசிகளைக் கை தட்ட வைத்தது.
தன் வீட்டுப் படுக்கையறையில் எம்.ஜி.ஆர். ஜானகியம்மாள் போட்டோ இருப்பதையும், தங்களின் பிள்ளைகள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியனை ஜானகியம்மாள், தன் மடியில் உட்காரவைத்துக் கொஞ்சியதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரேமலதா, “என்ன நடந்ததுன்னு பல பேருக்குப் புரியாது. ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன்..” என்று அதிமுகவும் தேமுதிகவும் பிரிந்ததற்கான காரணத்தைக் கூறினார்.
“அன்னைக்கு சட்ட சபையில் நடந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு பின்னால இருந்தது திமுகவுடைய சூழ்ச்சிதான். எதைச்சொன்னால், கேப்டனை உணர்ச்சிவசப்படுத்தலாம். எப்படி நடந்துகொண்டால் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தலாம். அப்படிங்கிறத தெரிஞ்சிக்கிட்டு, ஜெயலலிதாவை எரிச்சல்படுத்துற மாதிரி சில வார்த்தைகளைப் பேச வைத்தனர். அதிமுக – தேமுதிக கூட்டணியைப் பிளவுபடுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டமன்றத்திலேயே சதி செய்து, கூட்டணியை முறிக்கச் செய்தனர்.” என்று விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதன் பின்னணியை விவரித்தார்.
‘எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கேப்டன்’ என்று தன்னுடைய கணவரின் பலவீனத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டாலும், புகழ்பாடவும் தவறவில்லை.
“எம்.ஜி.ஆர். இருந்தவரையிலும் கலைஞரால் 15 வருட காலம் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல, புரட்சிக்கலைஞர் கட்சி ஆரம்பித்த பிறகு, இன்று வரையிலும் சட்ட மன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறவே இல்லை.” என்று ஒரே போடாகப் போட்டார்.
2005-ல்தான் தேமுதிக என்ற கட்சி தொடங்கப்பட்டது. 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 163 இடங்களைக் கைப்பற்றி, தமிழக முதல்வரானார் கலைஞர். அந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று, எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 31 இடங்களில் வென்றது. 2016 தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சித் தலைவரானார் மு.க.ஸ்டாலின். 2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றது. 2014 பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. இந்த வரலாறெல்லாம் அறிந்தோ, அறியாமலோ, கேப்டன் கட்சி ஆரம்பித்தபிறகு சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றிபெறவே இல்லை என்று பேசி, கூட்டணிக் கட்சியினருக்கு உற்சாகமூட்டினார்.
அந்தக் கூட்டத்தில் பெருமிதத்துடன் பிரேமலதா முன்வைத்த இன்னொரு விஷயம் இது –
“எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருவிரல் காட்டுவார்கள். இதில் என்ன இருக்கிறது? வி என்ற கேப்டனோட பெயர் அடங்கியிருக்கிறது. வெற்றி என்பதும் அடங்கியிருக்கிறது. விருதுநகர் ஊர் பெயரிலும் முதல் எழுத்து வி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக்கலைஞர் கேப்டன்.. இந்த மூவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய தலைவர்கள் ஆனவர்கள். எனக்கு இந்த மூன்றுபேரும் ஒரேமாதிரிதான் தெரிவார்கள்.
கடந்த தேர்தலில் லேடியா? மோடியா? என்று மோடிக்கே சவால் விட்டவர் ஜெயலலிதா. அவரைப்போலவே, கேப்டனும் யாருக்கும் பயப்பட மாட்டார். தன் மனதில் உள்ளதை தைரியமாகப் பதிய வைப்பவர். மிகவும் தைரியமானவர். தைரியம் இருந்தால்தான் வாழ்க்கையில் பெற்றிபெற முடியும் என்பதற்கு இலக்கணமாக இருவரும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் கேப்டனும் சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர்கள். மக்கள் முன் நடிக்கத் தெரியாதவர்கள்.” என்றார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு இணையாகக் கேப்டனையும் பிரேமலதா பாராட்டிப் பேசியபோது, அக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்ட அதிமுகவினரும் ஆர்ப்பரித்தனர்.
“திராணி இருக்கிறதா?” என்று ஜெயலலிதா கேள்வி கேட்டதும், ‘திராணி இருக்கிறது’ என்று பதிலடி தந்ததோடு, ‘திராணியார்’ என்று பட்டம் சூட்டி, தேமுதிகவினர் கேப்டனை குஷிப்படுத்தியதும்கூட, திமுகவின் சதியாகத்தான் இருக்குமோ?