Skip to main content

370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகமாக எண்ணப்பட்ட வாக்குகள்... மக்களவைத் தேர்தல் முடிவுகளில் குளறுபடியா?

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

அண்மையில் நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளில் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் உள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனமான குயிண்ட் கண்டுபிடித்துள்ளது.
 

vote

 

 

17வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி, புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போதுதான் வெளியாகி வருகின்றன. ஈவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒரு தொகுதியில் உள்ள ஐந்து வாக்குச்சாவடியில் பதிவாகும் ஒப்புகை வாக்குச் சீட்டு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் நேரம் ஆகும் என்று தேர்தல் ஆணையம் முன்னமே தெரிவித்திருந்தது. அவர்கள் தெரிவித்ததுபோலவே அடுத்த நாள் அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் முழு தகவலை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட கூடுதல் காலம் எடுத்துக்கொண்டது.
 

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்து சில விஷயங்களை குயிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஈவிஎம் இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை , பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சில தொகுதிகளின் தகவல்களை வெளியிட்டுள்ளது அந்த இணையதள பத்திரிகை. 
 

lok sabha

 

 

குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12,14,086. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் 12,32,417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் 18,331 அதிகம். அதேபோல், தருமபுரி தொகுதியில் பதிவான வாக்குகள் 11,94,440. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,12,311.பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் இடையே உள்ள வித்தியாசம் 17,871. இதேபோன்று தமிழகத்திலே ஐந்து தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. இதேநிலை இந்தியா முழுவதும் 373 தொகுதிகளில் நிலவியுள்ளது. இந்த விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து, பதிவான வாக்குகள்குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து நீக்கி உள்ளார்கள். 
 

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் மதுரா தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 10,88,206 வாக்குகள் பதிவாகியிருந்த போது சுமார் 10,98,112 வாக்குகளும் எண்ணப்பட்டன. அங்கு, 9,906 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறுகின்றது. இந்தத் தகவல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.