சராசரி மனித வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வனப்பகுதிக்குள் வசிக்கும் இருளர் பழங்குடிகளையும் கரோனா ஊரடங்கு பாதித்திருக்கிறது.144 தடை உத்தரவால், அவர்களுக்கும் போதிய உணவுப் பொருள்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் பசியோடும்,சுகாதார சீர்கேட்டுடனும் போராடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி,முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடிகளின் குடும்பங்கள் இருக்கின்றன.
வனப்பகுதிக்குள் விறகு பொறுக்குதல்,தேன் எடுத்தல்,பழங்கள் பறித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவற்றின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அக்குடும்பங்கள் வாழ்வை நடத்தி வருகின்றன.இன்றும்கூட பல குடும்பங்கள்,தங்குவதற்குப் பாதுகாப்பான வீடுகளோ,குடிசைகளோ இன்றி,விலங்குகளைப் போல பாறை இடுக்குகளில் வசிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு, பண்ணப்பட்டியில் வசிக்கும் இருளர் இன மக்களில் 50 சதவீதம் பேருக்குப் பென்னாகரம் சோதனைச்சாவடி அருகே தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தது.முத்தூர்பட்டி, சருக்கல்பாறை பகுதிகளில் வசித்து வந்த இருளர் மக்களில் 50 சதவீதம் பேருக்கு போடூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு,வனத்தையே வாழ்விடமாகக் கொண்டுள்ள இருளர் பழங்குடிகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது.வனப்பகுதிகளில் கிழங்குகளைத் தோண்டியெடுத்து சாப்பிட்டு பசியாறி வருகின்றனர்.இந்தக் கிழங்குகள் அன்றாடம் ஒரு வேளை உணவுக்கு உத்தரவாதம் என்றாலும்,அதுவும் ஊரடங்கு முடியும் வரை கிடைக்குமா என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது.கிழங்குகளும் போதுமான அளவுக்கு கிடைக்காததால் பசியோடு மல்லுக்கட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோடைக்காலம் என்பதால் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் வனப்பகுதிக்குள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று,ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் சேகரித்து கொண்டு வருகின்றனர்.பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் அவர்களின் உடல்நலமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒருபுறம் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் நிவாரணத்தொகை,அரிசி,பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வரும் தமிழக அரசு, வனப்பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடிகளின் பசியைப் போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெகுசன மக்களிடம் இருந்து பண்பாடு,கலாச்சார ரீதியாகவே வேறுபட்டுள்ள பழங்குடிகளின் அவல நிலை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் செல்வதிலும் சிக்கல் இருந்துள்ளது.
ரேஷன் கார்டுகள் அடிப்படையில் இல்லாமல், அனைத்து பழங்குடிகளுக்கும் உரிய உணவுப்பொருள்கள்,பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள், வனத்தையொட்டியுள்ள உள்ளூர்க்காரர்கள்.
இருளில் மிதக்கும் அவர்கள் வாழ்கைக்கு வெளிச்சம் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் மனசு வைக்கணும்...