Skip to main content

12 ஆயிரம் ஐ.டி. ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!​ என்ன நடக்கிறது? #COGNIZANT

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

உலகப் புகழ்பெற்ற 500 நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், காக்னிசண்ட் (Cognizant) அதில் நல்ல இடத்தைப் பிடிக்கும். அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு பல நாடுகளில் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தில், 2.9 லட்சம் பேர் பணிபுரிகின்றனர், அதில் 50% பேர் இந்தியர்கள்.  

 

cts layoff plans may affect thousands of families across india

 

 

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, காக்னிசண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஐ.டி. ஊழியர்கள் வேலையிழப்பைச் சந்திப்பார்கள் எனத் தெரிவித்தது. இந்த 12 ஆயிரம் பேரும் பிற நிறுவனங்களில் ‘கண்டெண்ட் மாடரேஷன்’ என்ற பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்பவர்கள். இன்னொரு செய்தி இதே நிறுவனத்தைச் சேர்ந்த 18 ஆயிரம் பேர் வேலையிழப்பார்கள் என்று சொல்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.  

“ஒரு நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்புவதற்குப் பின்னணியாக, அதன் நிதிநிலைப் பற்றாக்குறை அல்லது இயலாமையைக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால், 2019-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டுமே காக்னிசண்ட் நிறுவனம் 4.25 பில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியது. இதன் மூலம் அந்த நிறுவனம் ஈட்டிய லாபம் மட்டுமே 17.3 சதவீதம் என்கிறார்கள். அதாவது எந்தவித நிதிநிலை சுணக்கத்தையும் அந்த நிறுவனம் கண்டிருக்கவில்லை. மாறாக, இந்த லாபத்தைக் கணக்கில்கொண்டு, அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமாக வருவாய் ஈட்டுவதற்காகவே காக்னிசண்ட் நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது” என்று குற்றம்சாட்டுகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.  

 

cts layoff plans may affect thousands of families across india

 

இதற்காக “2020-திடமான வளர்ச்சித் திட்டம்” என்பதை வகுத்திருக்கிறது காக்னிசண்ட் நிறுவனம். இதன்படி, 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவுசெய்து, நிறுவனத்தில் பணிபுரியும், லாயக்கற்றவர்களாக நினைக்கும் நடுத்தர மற்றும் அடிமட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதன்பிறகு புதிதாக, இன்னும் வேகமாக ஓடக்கூடிய ஊழியர்களை நியமித்து 550 மில்லியன் அமெரிக்க டாலரை லாபமாக எடுப்பது என்பது இலக்கு. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதையாக இது தெரிந்தாலும், தன்னிடம் வேலைசெய்யும் ஊழியர்கள் மற்றும் அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் நிலையை சற்றும் நினைத்துப் பார்க்காத ராட்சச எண்ணமாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

வேலையிழக்கப் போகும் இந்த ஊழியர்களில் 6 ஆயிரம் பேர் பேஸ்புக்கின் கண்டெண்ட் மாடரேஷன் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்த வேலைச் சூழல், வேலைவாங்கும் முறையில் இருந்த மூர்க்கத்தனம், அளவுக்கதிகமான இலக்கு என பலவிதமான பிரச்சனைகளால் ஊழியர்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட பிறகே, இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், காக்னிசண்ட் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அங்கிருந்து வெளியேறிய நிலையில்தான், இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள். காக்னிசண்டின் தலைமை செயலதிகாரியாக ப்ரைன் ஹம்ப்ரீஸ் 
பொறுப்பேற்ற பிறகுதான், இதுபோன்ற அதீத முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில், அவற்றை ஏற்றுக்கொண்டோ, மறுத்தோ எந்தவித அறிவிப்பையும் காக்னிசண்ட் நிறுவனம் வெளியிடவில்லை.  

 

cts layoff plans may affect thousands of families across india

 

இதுதொடர்பாக ஐ.டி. ஊழியர்களின் நலன்சார்ந்து இயங்கும் தொழிற்சங்கமான  ‘யூனைட்’ அமைப்பின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசியபோது, “காக்னிசண்ட் நிறுவனத்தின் கண்டெண்ட் மாடரேஷன் பிரிவு முழுமையாக மூடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதற்கான முதற்கட்ட வேலையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால்கூட அதில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இங்கு வேலையிழப்பவர்கள் லட்சங்களில் சம்பாதிப்பவர்கள் கிடையாது. இவர்களை வேலையிழக்கச் செய்யாமல், முறையான பயிற்சி தந்து வேறு பணிகளில் ஈடுபடுத்தும் வாய்ப்பை, நவீன ஐ.டி. தொழில்நுட்ப வசதிகள் தருகின்றன. அதைச் செய்ய இதுபோன்ற நிறுவனங்கள் முயற்சி செய்யாமல், ஊழியர்களை வெறும் காற்றுப்போன பலூன்களைப் போல வீச நினைப்பது மகா குற்றம். அரசும் இதனைக் கண்டு கொள்வதில்லை. ஐ.டி. ஊழியர்கள் தொழிற்சங்கமாக செயல்பட்டால் மட்டுமே அவர்களின் உரிமையை மீட்க முடியும்” என்றார் உறுதியாக.  

இதேபோன்ற சூழல் கூகுள் நிறுவனத்துக்காக வேலைசெய்த ஹெச்.சி.எல். ஊழியர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள் சங்கமாக ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். சட்டப்போராட்டமும் வலுவாக நடக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களது போராட்டக் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது ஹெச்.சி.எல். நிறுவனம்.  

இந்தியா இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய வேலையிழப்புப் படலமாக காக்னிசண்ட்டின் முடிவைச் சொல்கிறார்கள். தொழிலாளர் ஒற்றுமையே வெல்லும் என்பதை உணர்வார்களா ஐ.டி. ஊழியர்கள்?