நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதால், தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் கைது செய்து விசாரித்து வந்தபோது மக்கள் அலுத்துக்கொண்டனர். இந்நிலையில், அந்த 4 பேரையும் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசாரை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது தவறு. அவர்களை பிடித்து வந்து சட்டப்படியே விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்று இன்னொரு தரப்பினர் வாதம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், தூக்குத்தண்டனையே கூடாது என்றும் ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
பிரியங்கா மரணத்திற்கு நியாயம் கிடைத்துவிட்டதாக அவரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சாட்சி சொல்வதற்காக சென்ற 24வயது இளம்பெண்ணை எரித்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. உன்னாவ் மாவட்டத்தில் சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து போராடி வந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிலும், சிவம் திரிவேதி மட்டும் கைது செய்யப்பட்டார். அவரும் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி ஜாமீனில் வந்துவிட்டார்.
இந்நிலையில், ரேபரேலி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்றார் அந்த இளம்பெண். அப்போது, சிவம் திரிபாதியும், சுபம் திரிபாதி உள்ளிட்ட 5 பேர் நடுவழியில் அப்பெண்ணை வழிமறித்து, எரித்துக்கொலை செய்யும் நோக்கில் அப்பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.
உடல் எரிந்த நிலையில், அலறியபடியே, தன்னை காப்பாற்றச்சொல்லி, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்தப்பெண் ஓடியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘100’க்கு போன் போட்டு கொடுக்க, தீயில் எரிந்த பெண்ணே, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் எரித்ததாக சொல்லியுள்ளார். இதற்குள் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், எரிந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்த பெண்ணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது 90 சதவிகித தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ள அப்பெண்ணுக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.