Skip to main content

நாடே பெரிதென நினைத்து நாம் வாழலாமே! ஏழைகளின் முகத்தில் சிரிப்பைக் காணலாமே!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018
flag


விருதுநகரில் காலையிலிருந்தே வானம் தூறிக்கொண்டிருந்தது. இதைச் சாக்காகக் கூறி, பள்ளியில் நடக்கின்ற சுதந்திரதின விழாவுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான் 7 வது வகுப்பு படிக்கும் சிவா. அவனுடைய அப்பா செல்வம் “பைக்ல தானடா போறோம். துண்டைப் போட்டுக்க. தலை நனையாது.” என்றார். அவனோ “போங்கப்பா.. வீட்ல குடை கூட இல்ல. இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகல.” என்று பிடிவாதம் பிடித்தான். அந்தச் சிறுவனுக்கு எந்த அளவுக்குத் தெரியும், சுதந்திரத்துக்காக முன்னோர்கள் பட்டபாடு. நம் நினைவுத் திரையில் தியாக தீபங்கள் மின்னின.

கணவன் உயிரைக் காட்டிலும் நாடே பெரிது!
 

tararani


பீகாரைச் சேர்ந்த தாரா ராணி ஸ்ரீவஸ்தவாவை நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருப்பார்கள்? மகாத்மா காந்தி சொல்லிவிட்டார் ‘செய் அல்லது செத்து மடி’ என்று. அவர் தொடங்கி வைத்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது. 1942, ஆகஸ்ட் 12, பீகார் – சரன் மாவட்டத்தில், தன் கணவர் புலேந்துபாபுவுடன், சிவான் காவல்நிலையத்திற்கு முன்பாக, இந்தியக் கொடியை ஏற்ற, ஊர்வலக் கூட்டத்தில் நடக்க ஆரம்பித்தார் தாரா ராணி. ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி லத்தியால் தாக்கியது போலீஸ். அடியைப் பொருட்படுத்தாது விடுதலை வேட்கையுடன் திமிறியது கூட்டம். போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். குண்டடிபட்டு சரிந்தார் புலேந்துபாபு. தன் சேலையைக் கிழித்து, காயத்துக்கு கட்டுப்போட்டு கணவரை அங்கேயே ஒரு ஓரமாகக் கிடத்திவிட்டு, ஊர்வலத்தில் முன்னேறினார் தாரா ராணி. கொடியேற்றிவிட்டு திரும்பி வரும்போது, புலேந்துபாபு இறந்து கிடந்தார். மூன்று நாள் கழித்து, புலேந்துபாபு செய்த உயிர்த்தியாகத்தைப் போற்றும் விதமாக, சப்ரா என்ற இடத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார்கள். கணவரை இழந்தது தாரா ராணியை முடக்கிப்போட்டு விடவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரையிலும் தொடர்ந்து போராடினார்.

செத்த பிணமும் உயிற்பெற்று எழும்!
 

voc


உலகம் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மட்டும்தான். அப்படி என்ன குற்றம் புரிந்தார். வெள்ளையர்களை விரட்டுவதென்றால், கடல் ஆதிக்கம் இந்தியர்களிடம் இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால், ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கு எதிராக, சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியைத் தொடங்கினார். 1906-ல் சுதேசி நாவாய் சங்கம் என்ற பெயரில் கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பல போராட்டங்களுக்குப் பின்னர், எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற பெயர்களில் நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரண்டு கப்பல்களை வாங்கினார். சுதேசிக் கப்பலானது, தூத்துக்குடி – கொழும்புக்கு இடையில், போக்குவரத்தில் வெற்றிநடை போட்டது. இதனால் வ.உ.சி. “நான் ஆரம்பித்த இந்தக் கப்பல் நிறுவனம், அனைவருக்கும் சுதந்திர உணர்வை ஊட்டி, வெள்ளையனை நாட்டை விட்டு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடவைக்கும்.” என்றார் பெருமிதத்தோடு. ஆங்கிலேயர்கள் விட்டு வைப்பார்களா? தேசத்துரோக வழக்கு தொடர்ந்தனர். இரட்டை ஆயுள் என, 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, ‘வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். ஐந்தே நிமிடங்களில் அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறும்.’ என்று எழுதினார். மேல்முறையீட்டின் காரணமாக, அந்த தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தாய் மண்ணுக்காக அனைத்தையும் இழந்த வ.உ.சி!
 

voc


சிறையில் வ.உ.சி. பட்ட கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. மொட்டை அடித்தனர். சாக்கால் ஆன சட்டையைப் போட வைத்தனர். செக்கிழுக்க வைத்து கடுமையாக அடித்தனர். சிறை சித்ரவதைகளைத் தாங்க முடியாமல், ‘என்னை தீவாந்திரத்திற்கே அனுப்பி விடுங்கள்’ என்று சென்னை மாகாண அரசுக்கு கடிதம் எழுதும் நிலைக்கு ஆளானர்.

தாய் நாட்டின் விடுதலைக்காக அத்தனை சொத்துக்களையும் இழந்த வ.உ.சி. சிறையிலிருந்து வெளிவந்தபிறகு, வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டார். சிறை சென்றதால் வழக்கறிஞர் உரிமம் ரத்தான நிலையில், ‘வெண்பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான் நாச்சொல்லும் தோலும் நலிந்து’ என்று தன் நிலை குறித்து கவிதையாக எழுதி நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். ஒருகாலத்தில் செல்வச் சீமானாக வாழ்ந்த அவர், சென்னையில் அரிசிக்கடை ஒன்றில் 100 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். மண்ணெண்ணெய் விற்றார். கடைசி காலத்தில், வழக்கு செலவுக்கு கூட வழியில்லாமல் வ.உ.சி. குடும்பத்தினர் தமிழகத்தில் தவித்த கொடுமையும் நடந்தது.

எது நாட்டுப்பற்று?

‘நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை’ என்று 1947-ல் ஆனந்தக் கூத்தாடினோம். இன்று, 72-வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடுகிறோம். ஆனாலும், சிறு விஷயங்களுக்குக் கூட, அவசரத்தில் ஆத்திரம் கொள்கிறோம். தேசியக் கொடியை மதிப்பது மட்டும் நாட்டுப்பற்று ஆகிவிடாது. துயருறும் நாட்டும் மக்களை நேசிப்பதே, உண்மையான தேசப்பற்று ஆகும். ஏழைகளும் நம் சகோதரர்களே! வசதி உள்ளவர்கள் அவர்களைப் பாசக்கண் கொண்டு நோக்கினால், நாட்டின் வறுமையை ஒழித்துவிடலாம்.

சுயநலத்தின் காரணமாக, தேசம் குறித்த பார்வையிலிருந்து நம்மையும் அறியாமல் விடுபடும்போதெல்லாம், மகாகவியின் கவிதை வரிகளை நினைவில் கொள்வது நல்லது!

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Next Story

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Two days holiday for schools in Puducherry

 

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழா ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.  1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும், சந்திரனாகூரையும் அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

 

இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.  

 

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர். வருடா வருடம் புதுச்சேரி விடுதலை தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை நவ.1 மற்றும் 2 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .