Skip to main content

மொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய மனிதர்கள்? - கேரளா கொடுமை   

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு இயற்கை பழிவாங்கியுள்ளது. சேதாரம் அதிகம் என்றாலும், மக்களின் மனிதாபிமானம் அதைவிட அதிகமாக வெளிப்பட்டது. மீனவர் ஒருவர் தன் முதுகில் தாங்கி நிற்க பொதுமக்கள் அதில் ஏறி படகை அடைந்தனர். தன்னுடைய 25 நாய்களும் மீட்கப்பட்டால்தான் படகில் ஏறுவேன் என்று அடம்பிடித்தார் ஒரு பாட்டி, அதுவும் நிகழ்ந்தது. கேரளாவுக்கு நிவாரண நிதி தேவைப்படுகிறது என்றவுடன் அண்டை மாநிலங்களில் ஆரம்பித்து, அரபு தேசம் வரை நிதி தரப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல், எல்லோரையும் மீட்டுக்கொண்டு வந்தனர். 

 

kerala

 

கனமழையால் கேரள மக்கள் இவ்வாறு கஷ்டப்படும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்க்கும் நமக்கே மனதில் ஒரு சோகம் வருகிறது. அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொள்கிறோம். நம்மால் முடிந்த நிவாரணப் பொருட்களை , நிதியை சேகரித்துத்தர முன்வருகிறோம். இப்படி மனிதாபிமானம் வெள்ளமாக அனைத்து மக்கள் மனதிலும் கரைபுரண்டு ஓட, சிலர் அதிலும் விதிவிலக்காக இருக்கிறார்கள். ஒருவர் மூக்கு உயரத்தில் நீர் ஓடிக்கொண்டிருக்க, படகில் சென்று சின்சியராக கல்லு விற்கும்  வீடியோ ஒன்று வந்தது. இன்னொரு வீடியோவில் ஒருவர் பாலத்தின் மீது நின்று, பாலத்திலிருந்து ஆற்றை நோக்கி தலைகீழாக தொங்கும் தன் நண்பரை விட்டுவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தார். நீரில் சிக்கியிருக்கும் யாரையோ இருவரும் காப்பாற்றுகிறார்கள் என்று எதிர்பார்த்த நமக்கு அதிர்ச்சி. மூட்டை நிறைய மதுபாட்டில்களை அவருக்கு படகில் கொண்டு வந்து சேர்க்கிறார் ஒருவர். அவரிடம் அதைப் பெற்றுக்கொள்ளத்தான் இத்தனை பிரயத்தனம். இதுபோன்ற காட்சிகளும் அங்கு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவங்களையும் தாண்டும் அளவுக்கு 28 கல்லூரி மாணவிகளுக்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவர்கள் 'வெள்ளத்தை நினைத்து பயந்ததைவிட, எங்களை சுற்றியிருக்கும் மக்களை நினைத்து பயந்ததுதான் அதிகம்' என்கின்றனர்.

 

kerala

 

கடந்த சனிக்கிழமை அன்று ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர்.  நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லையா? இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சிக்கிக்கொண்ட விடுதியில் மூன்று தளங்கள். அதில் முதல் தளம் வரை நீர் ஓடிக்கொண்டிருக்க இந்த மாணவிகள் அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனால், கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட மக்களோ 'இவர்கள் நலமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்' என்று நினைத்துக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உணவுகூடத் தராமல், உதவியாக வந்த உணவை அவர்களே சாப்பிட்டுள்ளனர். சரி இங்கிருந்த தப்பித்தே ஆக வேண்டும் என்று எண்ணிய மாணவிகள், ஹெலிகாப்டர் அந்த வழியாக வரும்போதெல்லாம் கூச்சலிட்டுள்ளனர். தாங்கள் அணிந்த வண்ண ஷால்களை காட்டி அழைப்புவிடுத்துள்ளனர். இதை எல்லாம் பார்த்த அந்த மக்கள், ஹெலிகாப்டர் கீழே இறங்கினால் அதன் இறக்கை நம் வீடுகளை சேதப்படுத்திவிடும் என்று எண்ணி மாணவிகளை கடுமையாகத் திட்டியுள்ளனர். மேலும், அந்த மக்கள் இவர்களை வசைபாடியுள்ளார்கள். உண்ண உணவு, மருந்து என்று எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு இந்த பெண்களுக்கு எதுவும் தராமல் அராஜகம் செய்துள்ளனர். விடுதியில் இருக்கும் பெண்களுடன் ஒரு வெறுப்பிலேயே இருந்திருக்கிறது அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் குழு. தங்களை ஹெலிகாப்ட்டரில் பயணம்போகத்தான் இவர்கள் இவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என்று சொல்லி சாபம் விட்டதாகவும் சொல்கின்றனர் அந்த மாணவிகள். 'அண்டைப்பகுதி பொதுமக்களுக்கு உங்கள் மேல் என்ன வெறுப்பு?' என்ற கேள்விக்கு  'இந்த விடுதியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மாணவிகள் கல்விகற்றுவருகிறார்கள். நம் ஊர்க்காரர்களில்லை என்பதுதான் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர்.  

 

image

 

ஒரு சில ஆண்கள், விடுதியில் இருக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் பேசியதாகவும் நடந்துகொண்டதாகவும் சொல்கின்றனர். முகாமில் இருக்கும் மொத்த கூட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே இப்பெண்களையும் மனிதர்களாக நினைத்து இவர்களுக்காகப் பேசியுள்ளனர். முகாமில் இருந்தவர்கள் இப்பெண்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்ற புரிதலிலேயே இருந்துள்ளனர். ஆனால், உண்மையில் மூன்று நாட்களுக்கு சாப்பாடு, குடிக்க நீர், கழிவறை இன்றி தவித்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் மொபைல்தான். அதிலும் சார்ஜ் தீர்ந்துவிடும் என்று எண்ணி ஒவ்வொரு மொபைலாக பயன்படுத்தி தகவல்களை தெரிவித்துள்ளனர். இறுதியில், ஹெலிகாப்டருக்கு அழைப்புவிடுத்து இவர்கள் மீட்கப்படும் நேரத்திலும் வந்து பிரச்சனை செய்துள்ளனர். ஹெலிகாப்டரில் இருந்து வந்த கமாண்டோ அவர்களை சமாதானம் செய்துவிட்டு, எரிபொருள் நிரப்பி வந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் கூறிச்சென்றார். அதுபோலவே வந்து சிலரை ஏற்றிக்கொண்டு, மிச்சமிருப்பவர்களை மறுநாள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அங்கிருப்பவர்களால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று மாணவிகள் போராடி, பின்னர் படகில் அழைத்துச்செல்லப்பட்டனர்.   

 

ayyappa college

 

தற்போது தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மாணவிகள், இந்த சம்பவத்தை நினைத்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த மாணவிகள் தெரிவித்தவை அனைத்தும் உண்மையா என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பெண்கள் ஆணையம் அரசை கோரியுள்ளது. இன்னும் கேரளாவில் அவலநிலை முடிந்தபாடில்லை, அது முடிந்ததும் விசாரணை தொடரும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.