அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை பேட்டி கண்டோம். அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீதிபதி வருகை, ஆட்கொணர்வு மனு போன்று இப்படி பரபரப்பாக இருக்கிறதே?
செந்தில் பாலாஜி என்ற ஒரு தனி மனிதனைப் பார்த்து அமலாக்கத்துறை உள்பட அனைவரும் பயந்துவிட்டார்கள். நாம் கேள்விப்பட்ட வரை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் தான் நடு ராத்திரியில் சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்கு வருவார்கள். இப்போது தான் தெரிகிறது அந்த கூட்டத்தோடு அமலாக்கத்துறையும் சேர்ந்து விட்டது என்று. பகலில் போனால் ஏதாவது செய்து விடுவார்கள் என்று பயந்து ராத்திரியில் சென்று கைது செய்கின்றனர். கைது செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் காவல்துறை மட்டுமல்லாமல் ஏன் ராணுவத்தை கொண்டு வந்தார்கள்? ஆக, செந்தில் பாலாஜி வெளியே இருந்தால் நமக்கு ஆபத்து என்று அவரை சிறையில் அடைக்க அமித்ஷா செய்கிற திட்டம்தான் இது.
அமலாக்கத்துறை, ராணுவம், ஒன்றிய தேர்தல் ஆணையம், நீதிபதிகள் போன்ற சக்தி வாய்ந்த அமைப்புகளைத் தன்னுடைய கையில் வைத்திருக்கும் அமித்ஷா, செந்தில் பாலாஜி என்கிற தனி மனிதனை பார்த்து பயப்படுகிறார் என்றால் செந்தில் பாலாஜி எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பது தெரிகிறது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் செந்தில் பாலாஜியின் பெயரை உச்சரிக்க செய்துவிட்டார்கள். சனாதன கூட்டமே செந்தில் பாலாஜியை பார்த்து அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை அவர்களுடைய கடமையைத்தான் செய்கிறது. இதில் பாஜக பின்புலத்தில் இல்லை என்று அண்ணாமலை கூறுகிறாரே?
அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம். காரணம் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அண்ணாமலை வீட்டில் சோதனை நடத்துவார்களா? அமலாக்கத்துறைக்கு உத்தரவு போட்டது யார்? யாரோ ஒரு அமைச்சர் தானே உத்தரவு போட்டிருப்பார்கள். அந்த உத்தரவு அமித்ஷா போட்டிருப்பார் என்று நாங்கள் சொல்லுகிறோம். அண்ணாமலை தன்னை போலவே பிறரை நினைக்கிறார். தான் ஒரு முட்டாள் அதனால் அதே மாதிரி மக்களையும் முட்டாள் என்றே நினைக்கிறார். அமலாக்கத்துறையினர் பகலில் தானே சென்றிருக்க வேண்டும். ஒரு வீட்டில் நடுராத்திரியில் ஏறிக் குதித்தால் அவர்களை அமலாக்கத்துறை என்றா சொல்லுவார்கள்? அதனால் அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்தால் நம்முடைய தகுதி, தராதரம் குறைந்து விடும்.
தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்திருப்பது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?
அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அறையில் ரெய்டு நடந்தது. டேபிளுக்கு அடியில் விழுந்து பதவி வாங்கியதில் இருந்து இன்று நடக்கும் அனைத்து அசிங்கத்துக்கும் எடப்பாடி தான் முதல் தொடக்கம். இவ்வளவு பேசும் எடப்பாடி, அவர்களின் தலைவர் ஜெயலலிதாவை ஏ1 குற்றவாளி என்று கூறிய அண்ணாமலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பன்னீர்செல்வம் தான் முதலில் கொதித்து போனார். எடப்பாடி தரப்பில், கட்சி சார்பில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர எடப்பாடி தனியாக ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை.